புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன.

சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன. அவற்றின் இரு பக்கமும் சரிவுப் பாதைகள் இருக்கின்றன. அவற்றில்தான் கடைகளுக்குச் சரக்குக் கொண்டு செல்பவர்கள் நம் கைவண்டி போன்ற வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்படியே சருக்கிக்கொண்டு போகிறார்கள்.

ஆங்காங்கே மார்க்கெட்டுகள் இருக்கின்றன. காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகளும் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்து கொடுக்கும் கடைகளும் நினைவுப் பொருள்கள் விற்கும் கடைகளும் சிற்றுண்டி விற்கும் கடைகளும் இங்கு இருக்கின்றன.

இந்த நகரத்திற்குள் புதிதாக வருபவர்கள் எளிதாகத் தொலைந்துவிடலாம். ஏனெனில் அத்தனை சிறிய தெருக்கள், சந்துகள் இருக்கின்றன.

பட்டை, பெருஞ்சீரகம் உள்ளிட்ட, உணவுக்குச் சுவை கூட்டும் பல பொருள்கள் (spices) விற்கும் கடைகளும் இந்த மார்க்கெட்டிற்குள் இருக்கின்றன.

புராதன நகரத்திற்குள் எந்தக் கடையிலும் அரிசியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் டமாஸ்கஸ் வாயிலுக்கு (Damascus Gate-ஏழு வாயில்களில் இதுவும் ஒன்று) வெளியே நம் நாட்டில் இருப்பது போன்ற சிறிய பலசரக்குக் கடைகள் நிறைய இருக்கின்றன.

அங்கு மிக உயர்ந்த தரமுடைய நம் நாட்டு பஸ்மதி அரிசி கிடைத்தது. அமெரிக்காவிலும் பல வகையான பஸ்மதி அரிசிகள் கிடைக்கின்றன. இது அப்போதுதான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் போலும். புதுக்கருக்கு மாறாமல் இருந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு மாதம் இஸ்ரேலில் தங்கியிருக்க வந்திருந்த யூத நண்பருக்கு என் சமையல் என்றால் பிடிக்கும். அவருக்குச் சமைப்பதற்காக அரிசியைத் தேடிக்கொண்டிருந்த போது இது கிடைத்தது.

புராதன நகருக்குள் தனியாகச் சென்றால் எல்லா இடங்களையும் அவற்றின் தொன்மையையும் சிறப்புக்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதால் ஒரு பயண வழிகாட்டியை (guide) ஏற்பாடு செய்துகொண்டோம். அவர் ஒரு அரேபிய முஸ்லீம். முந்திய தினமே தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு மறு நாளைக்கு எங்கு, எத்தனை மணிக்குச் சந்திப்பது என்று முடிவுசெய்துகொண்டோம்.

காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை அவர் எங்களைப் புராதன நகருக்கும் அதற்கு வெளியேயுள்ள ஜெருசலேமின் மற்ற இடங்களுக்கும் கூட்டிப் போவதாக ஏற்பாடு. அரேபியர்கள் முதலில் இருந்த இடங்களைச் சுற்றி இஸ்ரேல் அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய குடியிருப்புகளும் இதில் சேர்த்தி

நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் புராதன நகருக்கு மிகவும் அருகில் இருந்தது. மொத்த தூரம் அரை மைல்தான் என்றாலும், ஏற்ற இறக்கங்களையுடைய அந்தத் தெருக்களைக் கடப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. சில சமயங்களில் அப்பார்ட்மெண்ட் சொந்தக்காரர் யோசியின் (Yosi) உதவி கிடைத்தால் டாக்ஸி கிடைத்துவிடும்.

பக்கத்து இடங்களுக்குச் செல்ல ஜெருசலேமிலும் டாக்ஸிக்காரகள் வர விரும்புவதில்லை. அந்த மாதிரி நேரங்களில் நடந்துதான் சென்றோம். இந்த நடையோடு புராதன நகருக்குள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்லவேண்டும். மதிய உணவைப் பயண வழிகாட்டியே எங்களுக்கு, அவருக்குத் தெரிந்தவர் கடையில் வாங்கிக் கொடுத்தார்.

நம் நாட்டு இட்லி, தோசை போன்றது ஃபலாஃபல் (Falafel) என்னும் பலகாரம். இது எல்லாத் தெருக் கடைகளிலும் கிடைக்கும்.

இது காபூல் சன்னா என்று அழைக்கப்படும் பெரிய வெள்ளைக் கொண்டைக்கடலையை நனையவைத்து, வெங்காயம், வெள்ளப்பூடு, சீரகம், கொத்தமல்லித்தழை, பார்ஸ்லி கீரை (Parsley) ஆகிய சாமான்களைச் சேர்த்து ஒரு விதப் பக்குவத்தில் அரைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவது.

இன்னொரு பலகாரம் நம் சப்பாத்தி போன்றது. அது பீட்டா ரொட்டிக்குள் தக்காளி, வெங்காயம், லெட்டஸ் என்னும் கீரை, மற்றும் ஃபலாஃபல் ஆகியவற்றை உள்ளே வைத்துத் தயாரிப்பது. சில இடங்களில் பயண வழிகாட்டிகள் இதையும் மதிய உணவாகக் கொடுத்தார்கள். ஃபலாஃபல்லோடு ஆரஞ்சுப் பழச்சாறும் எல்லா இடங்களிலும் உணவோடு பரிமாறப்படுகிறது.

ஜெருசலேமை ஒட்டியுள்ள இடங்களில் நிறைய ஆரஞ்சு விளைகிறது. பயண வழிகாட்டி புராதன நகரில் ஒரு கடையில் ஆரஞ்சுப் பழச்சாறு வாங்கிக் கொடுத்தார்.

ஒரு பெரிய தம்ளர் சாற்றின் விலை பத்து ஷெக்கல் (shekel). ஷெக்கல் இஸ்ரேலின் நாணய முறை. நான்கு ஷெக்கல் ஒரு அமெரிக்க டாலருக்குச் சமம். அதாவது ஒரு ஷெக்கல் 13 ரூபாய்க்குச் சமம்

மதியம் ஒரு மணிக்கு புராதன நகரப் பயணத்தை முடித்துக்கொண்டு (புராதன நகரைப் பார்ப்பதற்கு அரை நாள் போதாது. மறுபடி நாங்களாக ஒரு முழு நாள் முழுவதும் அதற்குள் சுற்றினோம். ஆனால் அங்கு நடப்பதற்கு நிறையத் தெம்பு வேண்டும்.) பயண வழிகாட்டி வாங்கிக் கொடுத்த உணவை உண்டுவிட்டு, சிறிது இளைப்பாறிவிட்டு மறுபடி புராதன நகருக்கு வெளியேயுள்ள இடங்களைப் பார்க்கச் சென்றோம்.

ஜெருசலேம் நகரம் இப்போது மிகவும் விரிந்திருக்கிறது. 1948-இல் ஐ.நா. செய்த பிரிவினையின் போது ஜெருசலேமை இஸ்ரேலுக்கும் கொடுக்கவில்லை; பாலஸ்தீனத்திற்கும் கொடுக்கவில்லை.

அது ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் 1967 சண்டையில் இஸ்ரேல் ஜெருசலேமைப் பிடித்துக்கொண்டதால், அதைத் தன் தலைநகரம் என்று கூறிக்கொண்டு அங்குதான் தன்னுடைய நெஸ்ஸெட் (Knesset) என்று அழைக்கப்படும் பார்லிமெண்டைக் கட்டியிருக்கிறது.

ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் அதிகாரபூர்வ இருப்பிடங்கள் அங்குதான் இருக்கின்றன. இஸ்ரேலின் பழைய, பெயர்பெற்ற ஹீப்ரு பல்கலைக்கழகமும் இஸ்ரேலில்தான் இருக்கிறது. ஆயினும், தென் அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா, எல் சல்வடார் என்ற இரண்டு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் – அமெரிக்கா உட்பட – டெல்விவ்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்பது போல் அங்கு தங்கள் தூதரகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றன.

1948-இல் பாலஸ்தீனத்தில் ஐ.நா. தனக்குப் பிரித்துக் கொடுத்த இடங்கள் இஸ்ரேல் எதிர்பார்த்ததற்கு மேலேயே இருந்ததால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாளே – 1948 மே மாதம் பதினாலாம் தேதியே – வேக வேகமாக பென் குரியன் போன்ற, இஸ்ரேலை உருவாக்கியே தீருவது என்பதில் தீவிரமாக இருந்த யூதத் தலைவர்கள் இஸ்ரேல் நாடு உருவாகிவிட்டது என்று பிரகடனப்படுத்திவிட்டனர்.

ஐ.நா.வின் இந்தப் பிரிவினையை ஒத்துக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் சிரியாவில் கூட்டம் போட்டு ஐ.நா.வின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்தனர். பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தவர்களுக்கு அதை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு அதில் ஒரு பகுதியைக் கொடுத்து யூத நாடு உருவாக ஆதாரமாக இருந்த ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இஸ்ரேல் உருவான மறு நாளே எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்தன. முதலில் அரபு நாடுகள் யுத்தத்தில் ஜெயிப்பது போல் தோன்றினாலும் இஸ்ரேல் சண்டையில் வெற்றிபெற்றதோடு 1949 ஜனவரி ஏழாம் தேதி சண்டையின் முடிவில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தத்திற்குப் (cease fire) பிறகு இஸ்ரேல், ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் பாதியளவு இன்னும் சில இடங்களைப் புதிதாகப் பிடித்துக்கொண்டது.

இப்படிப் பிடித்துக்கொண்ட இடங்களில் ஜெருசலேமின் ஒரு பகுதியும் அடங்கும். 1956-இல் நடந்த சண்டையில் ஐ.நா.வும் அமெரிக்காவும் வற்புறுத்தியதால் இஸ்ரேல் யுத்தத்தில் பின்வாங்கியது. 1967-இல் மீண்டும் அரபு நாடுகளோடு நடந்த ஆறு நாள் யுத்தத்தில் சிரியா, ஜோர்டன், எகிப்து ஆகிய நாடுகளைத் தோற்கடித்து, ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் போல் இரண்டு மடங்கு இடங்களைப் பிடித்துக்கொண்டது.

சிரியாவின் கோலன் ஹைட்ஸ் (Golan Heights), எகிப்தின் சினாய் தீபகற்பம் (Sinai Peninsula), ஜோர்டானின் வெஸ்ட் பேங்க் (West Bank), ஜெருசலேமின் புராதன நகரம் என்று பல இடங்களைப் பிடித்துக்கொண்டது. 1977-இல் எகிப்தில் அன்வர் சதாத் ஜனாதிபதியாக இருந்தபோது இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் போடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதால், அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேலும் எகிப்தும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன.

ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் லெபனானில் செயல்பட்டு வந்தபோது இஸ்ரேல் லெபனானைத் தாக்கியது. அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்தும் இஸ்ரேல் அங்கு பிடித்த எல்லா இடங்களையும் விட்டு வரவில்லை. சிரியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த ஒப்பந்தத்தை லெபனானும் ரத்துசெய்தது.

இஸ்ரேல் உருவானதும் அங்கிருந்த பல பாலஸ்தீனிய அரேபியர்கள் பக்கத்து அரபு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டிருந்தனர். மிஞ்சியவர்கள் இப்போதைய இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம். இப்படி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டே போனதால், இஸ்ரேலிலும் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களிலும் வாழ்ந்த அரேபியர்களுக்கும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன. இஸ்ரேல் தான் பிடித்துக்கொண்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனது. இதுவும் அரேபியர்களின் கோபத்தைக் அதிகப்படுத்தியது.

இது வரை இஸ்ரேல் என்ற நாடு இருப்பதையே பாலஸ்தீனத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர். ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் (Yasser Arafat) இந்த நிலையை மாற்றி முதல் முதலாக இஸ்ரேலுக்குத் தனி நாடாக இயங்கும் உரிமை இருக்கிறது என்றும் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் பக்கத்து பக்கத்து நாடுகளாக இருக்கலாம் என்றும் கூறினார். இதற்கிடையில் 1992-இல் இஸ்ரேலின் பிரதம மந்திரியான யிட்சக் ராபின் (Yitzhak Rabin) இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்தினார்.

இதையடுத்து 1993-இல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் (Oslo Accord) என்றுபெயர். இதன்படி வெஸ்ட் பேங்கும் காஸாவும் (Gaza) (காஸா எகிப்து-இஸ்ரேல் எல்லையில் இருக்கிறது.) சுயாட்சி அமைத்துக்கொள்வதென்றும் ஐந்து வருஷங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. (இந்த ஒப்பந்தத்தினால் அராபத்துக்கும் ராபினுக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.) 1994-இல் யாசர் அராபத் Palestine Authority-யின் தலைவரனார்.

1995-இல் ராபின் ஒரு யூத தீவிரவாதியால் கொலைசெய்யப்பட்டார். 1996-இல் பிரதமர் பதவிக்கு வந்த பெஞ்சமின் நேத்தன்யாஹு (Benjamin Netanyahu) என்பவர் ஒரு வலதுசாரி. (இவருடைய லிக்விட் (Likud party) கட்சிதான் 2013 ஜனவரியில் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் பார்லிமெண்ட்டின் 120 இடங்களில் 31-ஐப் பிடித்திருக்கிறது. இன்னும் இரண்டு கட்சிகளோடு சேர்ந்து இவர் அரசு அமைப்பார். மூன்றாவது முறையாகப் பிரதம மந்திரி பதவியை வகிப்பார்.)

ஆஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனர்களுக்கு அதிகச் சலுகை கொடுத்துவிட்டதாகவும் அதைப் பின்பற்றினால் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளையலாம் என்றும் கூறி ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை. காஸாவில் ஹமாஸ் (Hamas) என்னும் தீவிரவாத பாலஸ்தீனியக் கட்சி தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

1997-இல் ஹமாஸ் கட்சியைச் சேர்ந்த தீவிரவாத தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து இருபது இஸ்ரேலியர்கள் உயிர் இழக்கக் காரணமாயினர். இதைத் தொடர்ந்து நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு மாறாகப் பல காரியங்கள் செய்தார். இஸ்ரேலில் வேலைபார்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பல நிபந்தனைகள் கொண்டுவந்தார்.

பாலஸ்தீனிய அத்தாரிட்டிக்குச் சேர வேண்டிய வரிப் பணத்தை அதற்குக் கொடுக்காமல் நிறுத்தி வைத்தார். இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களில் குடியிருப்புகளை அரசு தொடர்ந்து கட்டியதோடு பல வலதுசாரி இஸ்ரேலியர்கள் அமைத்துக்கொள்ள ஆதரவு கொடுத்தார். இப்படியாக இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே சண்டை வலுத்துக்கொண்டே போனது.

யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிக்கொண்டே போனபோது ஜெருசலேமிலும் பலர் குடியேறினர். ஜெருசலேமைச் சுற்றிலும் நிறைய யூதக் குடியிருப்புகள் இருக்கின்றன. 1967 சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் அரசு நிறையக் குடியிருப்புகளைக் கட்டியது.

இவற்றில் சில அமெரிக்காவில் வாழும் பணம் படைத்த யூதர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான இடங்களை / வீடுகளை அவர்களிடமிருந்து நிறையப் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ வாங்கிக் கட்டப்பட்டவை. 1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் பலவற்றைப் பிடித்துக்கொண்டது.

இஸ்ரேலைத் தாக்க பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேல் பகுதிக்குள் வந்தபோது 2001-இல் பிரதம மந்திரியாக இருந்த ஏரியல் ஷேரன் (Ariel Sharon) பாலஸ்தீன இளைஞர்களை வரவிடாமல் தடுக்க உயர்ந்த மதில்களை அரேபியர்கள் வசிக்கும் பகுதிக்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிக்கும் இடையே கட்டத் தொடங்கினார். 2002-ஆம் ஆண்டில் ஆரம்பித்த சுவர் கட்டும் வேலை இன்னும் நடக்கிறது.

ஷேரனால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுவர் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காகக் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும் இதனுடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனியர்களை வெஸ்ட்பேங்கிலிருந்து வெளியேற்றி அந்த இடங்களையும் இஸ்ரேலுடன் இணைத்து பாலஸ்தீனத்தில் யூதர்கள் மட்டுமே வாழும் நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று ஐ.நா.வைச் சேர்ந்த மனித உரிமைக் கழகத்தின் அதிகாரி ஒருவர் 2003-லேயே கூறியிருக்கிறார்.

ஜெருசலேமின் பல இடங்களில் இந்தச் சுவரைக் காண முடிந்தது. இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனியர்கள் வாழும் இடங்களுக்கு இடையே ஓடுகிறது. பாலஸ்தீனியர்கள் வாழும் வீடுகள் சுவருக்கு ஒரு புறமும் அவர்களுடைய ஆலிவ் மரங்கள் அடங்கிய தோப்புகள், விவசாயப் பண்ணைகள் மறுபுறமும் இருக்கின்றன.

இந்தச் சுவர்களைத் தாண்டிப் போவதற்கு சுவரில் ஆங்காங்கே வாயில்களும் சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன. இவற்றைத் தாண்டுவதற்கு இஸ்ரேல் அரசிடம் அனுமதி அட்டை பெற வேண்டும். அவற்றை இஸ்ரேல் அரசு எளிதாகக் கொடுப்பதில்லையாம். மேலும் அவை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்லுபடியாகுமாம். சுவரின் இஸ்ரேல் பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் வசிப்பதற்கே அரசிடம் அனுமதி பெற வேண்டுமாம்.

இந்தச் சுவர் நகர்ப் புறப் பகுதிகளில் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருக்கிறது. சில இடங்களில் 26 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.

கட்டி முடிக்கப்பட்டதும் 440 மைல் நீளம் கொண்டதாக இருக்குமாம். பெர்லின் சுவரை விட இரண்டு மடங்கு உயரமாம். கிராமப் புறப் பகுதிகளில் மின்சாரம் பாயும் இரும்புக் கம்பிகளால் ஆன வேலி காணப்படுகிறது. வேலிக்கு இரு புறமும் ஆழமான அகழிகள் இருக்கின்றன.

சண்டையில் பிடித்துக்கொண்ட இடங்களில் ஏற்படுத்திய குடியிருப்புகளையும் இன்னும் எதிர்காலத்தில் அமைக்கக் கூடிய குடியிருப்புகளுக்கான இடங்களையும் உள்ளடக்கி இந்தச் சுவர் கட்டப்பட்டிருப்பதால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது.

சுயேச்சையான பாலஸ்தீன நாடு உருவானாலும் அது பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாடாக இருப்பதற்குரிய அபாயம் இருக்கிறது. வெஸ்ட் பேங்கின் செழுமை வாய்ந்த பகுதியின் பெரும் பகுதி இந்தச் சுவரின் இஸ்ரேல் பகுதியில் இருக்கிறது.

இஸ்ரேலில் வேலை பார்க்கும், சுவரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் வேலைக்கு வருவதற்கு இந்தச் சுவரின் சோதனைச் சாவடிகள் மூலமாகத்தான் வர வேண்டும்.

நாங்கள் வெஸ்ட் பேங்கில் இருக்கும் பெத்லஹேம், ராமல்லா ஆகிய நகரங்களுக்குச் சென்றபோது இந்தச் சுவரின் வழியாக அதிலுள்ள சோதனைச்சாவடி மூலமாகத்தான் சென்றோம்.

பயண வழிகாட்டி எங்களை யூதக்குடியிருப்புகளுக்கு நடுவே வசிக்கும் பாலஸ்தீனர்களின் வீடுகளுக்குக் கூட்டிச் சென்றார்.

அவர்கள் தங்கள் சோகக் கதைகளை எங்களிடம் கூறினர். பாலஸ்தீனர்களுக்குரிய வீடுகளை ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி இஸ்ரேலிய அரசு எடுத்துக்கொள்வதால் சிலர் தங்கள் வீடுகளை விட்டுப் போகவே பயப்படுகிறார்களாம்.

அப்படிப் போகும் பட்சத்தில் அரசு அவற்றை கையகப்படுத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறதாம். நான் ஒரு எழுத்தாளர் என்றதும் ‘எங்களைப் பற்றி ஒரு முறையல்ல, பல முறை எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்’ என்றார்கள்.

3000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து வாழ்ந்துவந்ததாக யூதர்கள் ஜெருசலேம் நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள் (இஸ்ரேல் பயணம் 7)

Share.
Leave A Reply

Exit mobile version