சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக்குழு சமீபத்தில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றை கைப்பற்றி மத்தியகிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஹூத்திக்களின் இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளனர்.

துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பலை ஏமன் அருகில் தெற்கு செங்கடல் பகுதியில் இந்த குழு ஹெலிகாப்டர் வாயிலாக கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த உறுதி செய்யப்படாத வீடியோ ஒன்றும் பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து ஏமன் ஹூத்தி கிளர்ச்சியாளர் குழுவின் செய்தி தொடர்பாளர்கள், இது கடலில் போர் தொடங்குவதற்கான ஆரம்பம் மட்டுமே என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே காஸா மீது இஸ்ரேல் நடத்தியதற்கு எதிராக தங்கள் எல்லைக்குள் எந்த இஸ்ரேலிய கப்பல் வந்தாலும் கைப்பற்றப்படும் என்று ஹூத்திக்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேலிய கப்பலை கைப்பற்றி ஏமன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார் ஹூத்தி கிளர்ச்சிக்குழுவின் ராணுவ செய்தி தொடர்பாளர்.
விளம்பரம்

எனினும் இந்தக் கப்பல் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட, இஸ்ரேலிய கோடீஸ்வரர் பங்குதாரராக இருக்கும் கப்பல் எனத் ஆவணங்களில் தெரியவருகிறது.

இப்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளையும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையே அச்சுறுத்தும் ஹூத்தி கிளர்ச்சி குழு என்பது யார்? அதன் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

கப்பல் வரைபடம்
யார் இந்த ஹூத்தி அமைப்பினர்?

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் தனது கட்டுக்கடங்காத எதிர்தாக்குதலை தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான பாலத்தீனிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பல அரபு நாடுகள் காஸா பக்கம் நிற்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை அறிவித்தது ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சியாளர் குழு.

2014ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றிய ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சி குழு, சௌதி அரேபிய ஆதரவு பெற்ற ஏமன் அரசை 2015ல் அங்கிருந்து வெளியேற்றினர்.

ஏமன் அதிபரும் அதற்கு அடுத்த ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி சௌதி அரேபியா சென்று விட்டார். ஒரு நாட்டின் தலைமையையே விரட்டும் அளவிற்கான சக்தி கொண்ட ஹுதி குழுவின் எழுச்சி 1990களில் இருந்தே தொடங்கி விட்டது.

1990ம் ஆண்டில் ஏமனின் வடக்குப்பகுதியில் இருந்த ஜைதிஷம் எனப்படும் ஷியா இஸ்லாத்தின் மரபுகளை பாதுகாக்கும் இளைஞர்களின் மறுமலர்ச்சி குழுவாக உருவாகியதுதான் இந்த ஹூத்திக்கள் என்று அழைக்கப்படும் அன்சார் அல்லாஹ்ஹ் (கடவுளின் கட்சிக்காரர்கள்) கிளர்ச்சி குழுவினர்.

ஆனால், இவர்களின் மரபுரீதியான வரலாறு பண்டைய காலத்திலிருந்து தொடங்கியதாகும்.

தங்களை முகமது நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்ளும் ஜைதிக்கள் பண்டைய ஏமனில் 1000 வருடங்களுக்கும் மேலாக 1962ம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்த ஜைதி இமாம் ராஜ்ஜியத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் புதிய ஏமன் குடியரசு ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு அச்சுறுத்தலாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டனர்.

அண்மைக்கால பதற்றங்களை அடுத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்.

1990-க்கு பிறகு தோற்றம்

அதன்பிறகு 1990 தாராளவாத காலகட்டத்தில் இந்த சதாக்களில் சிலர் குடியரசு ஆட்சியில் தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்காக அல்-ஹக் (உண்மை) மற்றும் இத்திஹாத் அல்-குவா

அல்-ஷாபிய்யா (மக்கள் சக்திகளின் கூட்டமைப்பு) என்ற இரு கட்சிகளை தொடங்கினர். அதே சமயம் ஜைதி பாரம்பரியத்தை புதுப்பிக்க ஹுசைன் அல்-ஹூத்தியால் அன்சார் அல்லாஹ்வின் முன்னோடியான அல்-ஷபாப் அல்-முமினின் (நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதுதான் ஹூத்தி கிளர்ச்சியாளர் குழுவின் முன்னோடி ஆகும்.

ஆனால், அப்போதைய அதிபர் அலி அப்துல்லா சலேவின் அடக்குமுறை தாக்குதலே இந்த அமைப்பை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.

ஹுசைனை பிடிப்பதற்கான ஏமன் ராணுவத்தின் செயல்பாடு வடக்கு பிராந்தியத்தில் பெரும்பகுதி மக்களுக்கு அரசிடம் இருந்து இடைவெளியை ஏற்பட்டது.

சலே ஆட்சி, அதன் இராணுவம் மற்றும் ஹஷித் பழங்குடியினர் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக வளர்ந்து வந்த வெறுப்பை பயன்படுத்தியே அன்சார் அல்லாஹ்வுக்கு ஆதரவு பெறுகியது.

அன்சார் அல்லாஹ் வடக்கு ஏமன் சமூகத்தையும், பழங்குடியின அமைப்புகளையும் மிக நெருக்கமாகவே அறிந்து வைத்திருந்தது.

அதே போல், ஒரு எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக போராட வரும் மக்கள், ஜைதி மத நம்பிக்கைகளை பாதுகாக்க போராட வரமாட்டார்கள் என்பதையும் அது அறிந்து வைத்திருந்தது.

 

 

ஏமன் நாட்டு குடிமக்களில் பெரும்பாலானோர் ஹுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே வசிக்கின்றனர்.

ஹூத்திக்களின் வெற்றியும், சலேவின் தோல்வியும்

வடக்கு பகுதியில் இந்த அமைப்பின் வெற்றி சலேவின் ஆட்சியில் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இதே போன்றதொரு எதிர்ப்பு மனப்பான்மை தெற்கு ஏமனில் இருந்தபோது அங்கு வலுவான அரசியல் தலைமை இல்லாமல் இருந்தது.

சலேவை எதிர்த்த அனைவரையும் ஒன்றிணைத்தது அன்சார் அல்லாஹ். குறிப்பாக தெற்கில் சலேயின் ஆட்சியை எதிர்த்தவர்கள் , தைஸ்ஸின் மத்தியப் பகுதிகள், கிழக்குப் பாலைவனமான மாரிப் மற்றும் ஜாஃப் மற்றும் சனாவின் படித்த இளைஞர் ஆர்வலர்களிடமும் இருந்தும் அந்த இயக்கம் ஆதரவை பெற்றது.

ஒரே தசாப்தத்தில் ஏமனின் முக்கிய சக்தியாக மாறிய இந்த அமைப்பு 2000த்தில் தீவிரமான ராணுவ கிளர்ச்சியை நடத்தியது.

தன்னையும் தனது சகாக்களையும் பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. பின்னர், 2011ம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி மற்றும் ஆயுத போராட்டங்கள் தொடங்கிய போது, அதற்கான முக்கிய ஆதரவாளராக இது இருந்தது.

மேலும் பிராந்திய சுயாட்சி, ஜனநாயக அரசு மற்றும் பன்முகத்தன்மைக்கான மரியாதை உள்ளிட்ட முக்கிய நோக்கங்களை நோக்கி பயணிக்க தொடங்கியது.

தலைநகரை கைப்பற்றிய ஹூத்திக்கள்

பின்னர் 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி அப்த்ரப்புஹ் மன்சூர் ஹாடியின் இடைக்கால அரசாங்கம் ஆட்சியில் வலுவிழந்து போன தருணத்தில் வடக்கு பகுதியில் தீவிரமான ராணுவ செயல்பாடுகளை தொடங்கியது ஹூத்தி அமைப்பு.

மேலும் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த ஜெனரல் அலி மொஹ்சென் அல்-அஹ்மர் மற்றும் இஸ்லாஹ் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய இராணுவப் பிரிவுகளைத் தோற்கடித்தது.

அப்படிதான் செப்டம்பர் 2014இல் தலைநகரான சனாவில் தனது முகாமை அமைத்தது ஹுதி கிளர்ச்சியாளர் குழு. அதன் பின் முன்னாள் அதிபர் சலேவுடனே கூட்டணி அமைத்து கொண்டு அடுத்த ஆண்டே மார்ச் மாதம் 2015ம் தேதி அப்த்ரப்புஹ் மன்சூர் ஹாடி நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் விழித்து கொண்ட அரபு நாடுகள் மீண்டும் அப்த்ரப்புஹ் மன்சூர் ஹாடியின் ஆட்சியை கொண்டுவருவதற்காக ஹூத்தி கிளர்ச்சியாளர் குழுவின் மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

காரணம் இந்த குழுவிற்கு இரானின் ஆதரவு இருப்பது என்று அது கூறுகிறது. மேலும், இரான் மூலமாக ஹூத்திக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறது.

மேலும், சௌதியின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உளவுத்துறை மற்றும் தளவாட ஆதரவை வழங்கி வருகிறது.
ஹூத்தி

 

2015ம் ஆண்டு இந்த கூட்டணியின் தரைப்படை ஏடனில் இறங்கி சண்டையிட்டு ஹூத்தி குழுவை அங்கிருந்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அனுப்பிவிட்டது. ஆட்சியின் தலைமையிடமும் அங்கு அமைக்கப்பட்டது. ஆனால், அதிபர் சௌதியில் இருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அதிபர் சலே ஹூத்திக்களுடன் இணைந்து வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்தார். ஆனால், அவர்களது கூட்டணியும் 2017ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

அதே ஆண்டு ஹூத்திக்கள் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரின் ஆதரவாளர்கள் சௌதி கூட்டணியோடு சேர்ந்து கொண்டு பலமாக ஹுதி கிளர்ச்சி குழுவை எதிர்த்தனர். துறைமுக நகரமான ஹுதைதாவை கைப்பற்ற கடும்போர் நடந்தது. இது 6மாதம் வரை தொடர்ந்தது.

இந்த துறைமுகம் தான் ஏமன் மக்களின் முக்கியமான வாழ்வாதாரம் என்பதால் இரு தரப்பினரும் பரஸ்பரமான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

இதற்கு பிறகு 2021ம் ஆண்டில், வடக்கில் அரசாங்கத்தின் கடைசி கோட்டையாகவும் எண்ணெய் வளம் நிறைந்த மாகாணத்தின் மையமாகவும் இருக்கும் மாரிப் மீது ஹூத்திகள் தாக்குதலைத் தொடங்கினர், இதனால் அங்கிருந்து பல மக்கள் வெளியேற வேண்டிய சூழல் உருவாகியது.

இப்படி இரு தரப்பிலும் தொடர் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோனது. இந்நிலையில் , 2022ம் ஆண்டு இரு தரப்பிற்கு மத்தியிலும் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வந்தது ஐக்கிய நாடுகள் சபை. இருப்பினும் அதை அடுத்த 6 மாதத்திற்கு பிறகு புதுப்பிக்க தவறி விட்டது.

இந்நிலையில் சமீபத்திய பாலத்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேலிய கப்பலை கைப்பற்றிய சம்பவம் ஆகியவை மீண்டும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version