உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் ஒருவருக்கு பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

செங்குத்தாக துளையிடும் பணி முடிவடைந்ததும், தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வர வசதியாக நீண்ட குழாயும் பதிக்கப்பட்டுவிட்டது. இதனால், 17 நாட்களாக இரவு பகலாக நீண்ட மீட்புப் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் செய்திப்படி, இரவு 8.15 மணி வரை, 41 பேரில் 35 பேரை பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்க, சுரங்கப்பாதை வளாகத்திலேயே தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு வெளியே வந்த தொழிலாளர்களை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலையிட்டு வரவேற்று, அவர்களிடம் நலம் விசாரித்தார்.
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கினர்.

மீட்புப் பணியின் 16-வது நாளான நேற்றிலிருந்து (நவம்பர் 27) இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடைபெற்றது.

அந்தப் பணிகள் முடிவடைந்து, தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் வரை நீண்ட குழாய் பதிக்கும் பணியும் முடித்து, தற்போது ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் தயார்

சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவ உதவியளிப்பதற்காக, சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சுரங்கத்திற்கு வெளியே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

மருத்துவர்களின் முதல் கட்ட பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் நேரடியாக சின்னாலிசூர் சுகாதார நிலையத்திற்கு செல்லப்படுகிறார்கள். அங்கு டாக்டர்கள் கண்காணிப்பில் அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.

சுரங்கப்பாதைக்கு வெளியே காத்திருக்கும் ஆம்புலன்ஸ்

 

“பாபா பௌக் நாக் கருணையாலும், கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பாலும் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக சுரங்கப்பாதையில் குழாய்கள் பதிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது.

அனைத்து தொழிலாளர் சகோதரர்களும் விரைவில் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள்” என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று மதியம் தெரிவித்திருந்தார்.

உறவுகளைக் காண காத்திருந்த பெண்கள்
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர் 17 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினரும், சுற்றியுள்ள கிராமத்தினரும் சுரங்கத்தின் வெளிப்பகுதியில் குவிந்துள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களில் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்த மஞ்சீத் சவுத்ரியும் ஒருவர். அவரது குடுமு்பத்தினரும் சுரங்கப்பாதைக்கு வெளியே காத்திருந்தனர்.

மனைவியின் நகைகளை அடமானம் வைத்து உத்தரகாண்ட் சுரங்கப் பணிக்கு சென்றுள்ளார் மஞ்சீத் சவுத்ரி.

சுரங்கப்பாதையில் சிக்கிய மகனிடம் பேசியதாக மஞ்சீத்தின் தந்தை பிபிசியிடம் கூறினார். தான் நலமாக உள்ளதாக மகன் தந்தையிடம் கூறியுள்ளார்.

மீட்புப்பணி முடிய எவ்வளவு நேரம் ஆகும்?

இதற்கிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் சையத் அடா ஹஸ்நைன், ஒவ்வொருவரையும் குழாயில் இருந்த வெளியே இழுத்து மீட்பதற்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் எடுக்கும் என்றார்.

“இதனால், உள்ளே இருக்கும் 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும்,”என்றார்.

எலி வளைச் சுரங்க முறை என்றால் என்ன?

சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவர்களை மீட்க எலி வளைச் சுரங்க முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மீட்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கைக்கருவிகளைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றிச் சுரங்கப்பாதையை உருவாக்குவார்கள்.

வழியில் இரும்புக் கம்பிகள் போன்ற தடைகள் இருந்தால் லேசர் இயந்திரம் அல்லது பிளாஸ்மா இயந்திரங்களக் கொண்டு அவற்றை வெட்டி அவற்றை அகற்றுவார்கள்.

அவர்கள் இரண்டு மீட்டர் வரை மண்ணை அகற்றியதும் பின்னால் இருந்து ஆகர் இயந்திரம் மூலம் ஒரு குழாய் உள்ளே தள்ளப்படும்.

எலிவளைச் சுரங்க முறை நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தப் படுகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மண்வெட்டிகளை உபயோகப்படுத்தி கரியை வெட்டி, கூடைகளில் அதைச் சேகரிப்பர்.

இதன்மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்குவார்கள்.

இது தொழில்நுட்பப்பூர்வமான முறையல்ல, பாதுகாப்பானதும் அல்ல, ஆனால் இந்த இடத்தில் அது உதவக்கூடும் என்று ஒரு அதிகாரி ‘தி இந்து’ நாளிதழிடம் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version