முதலில் அவை வெறும் கறைகள் போல் இருந்தன. 2002 ஆம் ஆண்டில், சிரியன் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு இடிந்த அரண்மனையை கொண்ட காட்னா என்ற இடத்தில், நீண்ட காலம் முன் மறைந்துவிட்ட ஒரு ஏரியின் கரையில் இது இருந்தது.
மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடம் பயன்பாடற்று கிடக்கிறது. அந்த இடத்தில் , தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவினருக்கு அங்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது . அவர்கள் அரச கல்லறைகளைத் தேடி அங்கு சென்றனர்.
பெரிய தாழ்வாரங்கள் மற்றும் குறுகிய பாதைகள் வழியாக சென்ற பிறகு, இடிந்து கிடந்த படிகளில் இறங்கி, அவர்கள் ஒரு ஆழமான பகுதிக்கு வந்தனர். ஒரு பக்கத்தில், ஒரு மூடிய கதவை பாதுகாக்கும் இரண்டு ஒரே மாதிரியான சிலைகள் இருந்தன. உள்ளே, 2,000 பொருட்கள், நகைகள் மற்றும் ஒரு பெரிய தங்க கை உட்பட பழமையான பொருட்கள் பல இருந்தன.
தரையில் ஆங்காங்கே கருப்பு திட்டுகள் இருந்தன. அவை ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டின. அவற்றின் மாதிரிகளை ஆய்வக சோதனைக்கு அனுப்பினர் – அதில் தூசி மற்றும் துகள்களுக்கு அடியில் இருந்து பளிச்சென்ற ஊதா நிறம் வெளித்தோன்றியது.
அது பண்டைய உலகின் மிகவும் புகழ்பெற்ற பொருட்களில் ஒன்று. இந்த அரிய பொருள் பேரரசுகளை உருவாக்கியது, மன்னர்களை வீழ்த்தியது, உலகளாவிய ஆட்சியாளர்களின் பல தலைமுறைகளின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியது.
அந்த கண்டுபிடிப்பு தான் டிரியன் ஊதா (Tyrian Purple), அல்லது ஷெல்ஃபிஷ் ஊதா என அறியப்பட்டது. இதை அரச ஊதா அல்லது ஏகாதிபத்திய ஊதா என்று கூறுகிறார்கள். இந்த உயரிய சாயம் பண்டைய காலத்தின் மிகவும் விலையுயர்ந்த பொருளாக இருந்ததது. 301 -ல் பிறப்பிக்கப்பட்ட ரோமானிய ஆணையின் படி அதன் எடையின் மூன்று மடங்கு தங்கத்தை விட அதிகம் மதிப்பு கொண்டதாகும்.
ஆனால், இன்று வாழும் எவருக்கும் அதை எப்படி செய்வது என்று தெரியாது. பதினைந்தாம் நூற்றாண்டில், இந்த நிறமி எவ்வாறு எதிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதற்கான குறிப்புகள் தொலைந்துவிட்டன.
இந்த கவர்ச்சியான நிறம் ஏன் தொலைந்துபோய் விட்டது? இதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா?
துனிசியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய குடிசையில், ஒரு காலத்தில் கார்தேஜின் பீனீசியன் நகரம் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில், ஒருவர் கடல் நத்தைகளை உடைத்துக் கொண்டிருக்கிறார். அவற்றின் உட்புறத்தைக் கொண்டு டிரியன் ஊதாவை ஒத்த ஏதோவொன்றைத் தயாரிக்க கடந்த 16 ஆண்டுகளாக முயன்று வருகிறார்.
டிரியன் ஊதா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் மிகவும் சலுகை பெற்றவர்களால் அணிந்து கொள்ளப்பட்டது – இது வலிமை, இறையாண்மை மற்றும் செல்வத்தின் அடையாளமாக இருந்தது. அது ஆழமான சிவப்பு-ஊதா நிறமாக, ஒரு கருப்பு சாயலுடன் கூடிய உறைந்த இரத்தம் போன்றதாகும். ப்ளினி எல்டர் அதை “ஒளிக்கு எதிராக வைத்துப் பார்த்தால் மின்னும் தன்மை கொண்டது” என்று விவரித்தார்.
தனித்துவமான ஆழமான நிறம் மற்றும் மங்காத தன்மையுடன், டிரியன் ஊதா தெற்கு ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா முழுவதும் பண்டைய நாகரிகங்களால் போற்றப்பட்டது. இது கவசங்கள் முதல் பாய்மரங்கள், ஓவியங்கள், கல், சுவர் ஓவியங்கள், நகைகள் மற்றும் கல்லறைத் திரைகள் வரை அனைத்திலும் மிகவும் பிரதானமாக இருந்தது.
கி பி 40 ஆம் ஆண்டில், மவுரிட்டானியாவின் மன்னர் ரோமில் பேரரசரின் உத்தரவின் பேரில் திடீர் படுகொலை செய்யப்பட்டார். காரணம்? – அந்த அரசர் ஒரு மல்யுத்த சண்டைப் போட்டியைப் பார்க்க, ஊதா அங்கியை அணிந்துக் கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்தார்.
ரோமானியர்களின் நண்பனாக இருந்த போதிலும், அந்த உடையை அணிந்ததால், அவர் மிகுந்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக மன்னர் கருதினார். இந்த நிறம் மூட்டிய பொறாமை, தீர்க்க முடியாத ஆசை சில நேரங்களில் ஒருவித பைத்தியக்காரத்தன்மைக்கு ஒப்பிடப்பட்டது.
விசித்திரம் என்னவென்றால், உலகம் அறிந்த இந்த மிகவும் புகழ்பெற்ற நிறமி அதன் வாழ்க்கையை ஒரு அழகான கடல் மாணிக்கம் போல் தொடங்கவில்லை. மாறாக, இது முரெக்ஸ் குடும்பத்தில் உள்ள கடல் நத்தைகளால் உற்பத்தி செய்யப்படும் தெளிவான திரவமாக தொடங்கியது. இன்னும் சொல்ல போனால் அது சளி போன்று இருந்தது.
டிரியன் ஊதா மூன்று வகையான கடல் நத்தை இனங்களின் சுரப்பிகளிலிருந்து தயாரிக்கப்படலாம். ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறம் கொண்டவை- ஹெக்ஸப்ளெக்ஸ் ட்ரன்குலஸ் (நீலம் கலந்த ஊதா), போலினஸ் பிராண்டரிஸ் (சிவப்பு கலந்த ஊதா) மற்றும் ஸ்ட்ராமோனிட்டா ஹீமாஸ்டோமா (சிவப்பு) ஆகியவை தயாரிக்கப்படலாம்.
பாறை கடற்கரைகளில் கையால் அல்லது மற்ற நத்தைகளை இரையாகக் கொண்டு (முரெக்ஸ் கடல் நத்தைகள் வேட்டையாடும் வகையாகும்) நத்தைகளை சேகரித்ததும், அதிலுள்ள திரவத்தை அறுவடை செய்ய வேண்டும்.
சில இடங்களில், திரவம் சுரக்கும் சுரப்பி ஒரு கத்தியால் வெட்டப்பட்டது. ஒரு ரோமானிய ஆசிரியர், “கண்ணீர் போல் வெளியேறும்” என்று, நத்தையின் காயங்களிலிருந்து குருதி வெளியேறும் விதத்தை விளக்கினார். பின்னர் , உரல்களில் அரைக்கப்பட்டன. சிறிய இனங்கள் முழுமையாகவே நசுக்கப்படலாம்.
ஆனால் இதுவரை மட்டுமே நிச்சயமாக தெரியும். நிறமற்ற நத்தை திரவம் எப்படி மதிப்புமிக்க சாயமாக மாறியது என்பது தெரியவில்லை. அது குறித்து தெளிவற்ற, முரண்பட்ட மற்றும் சில நேரங்களில் தவறான கருத்துகள் இருந்தன.
அரிஸ்டாட்டில் திரவ சுரப்பிகள் ஒரு “ஊதா மீனின்” தொண்டையிலிருந்து வந்ததாகக் கூறினார். விஷயங்களை மேலும் சிக்கலாக்கும் வகையில், சாயம் உற்பத்தி துறை மிகவும் ரகசியமாக இருந்தது – ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் தங்கள் சொந்த செய்முறை இருந்தது, மேலும் இந்த சிக்கலான, பல படிநிலை கொண்ட உற்பத்தி முறை குறித்த தகவல்கள் ரகசியமாக காக்கப்பட்டன.
“முக்கியமான செய்முறைத் தந்திரங்களை மக்கள் எழுதவில்லை என்பதே பிரச்னை” என்று போர்ச்சுகல்லில் லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அறிவியல் பேராசிரியர் மரியா மெலோ கூறுகிறார்.
மிகவும் விரிவான பதிவை பிளினி எழுதியிருக்கிறார். அவர் கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் இந்த செயல்முறையை விளக்கினார். அவர் கூறியதாவது : திரவம் சுரக்கும் சுரப்பிகளை தனிமைப்படுத்திய பிறகு, அவை உப்பு சேர்க்கப்பட்டு மூன்று நாட்கள் புளிக்க விடப்பட்டன.
அடுத்து தகரம் அல்லது ஈய பாத்திரங்களில் “மிதமான” தீயில் சூடு செய்யப்பட்டது. முழு கலவையும் அதன் அசல் அளவில் ஒரு பகுதியாக கொதிக்க வைக்கப்படும் வரை இது தொடர்ந்தது. பத்தாவது நாளில், சரியான நிறம் கிடைத்துள்ளதா என்று சாயம் சோதிக்கப்பட்டது .
ஒவ்வொரு நத்தையிலும் மிகச் சிறிய அளவிலான திரவம் மட்டுமே இருப்பதால், வெறும் ஒரு கிராம் சாயம் தயாரிக்க 10,000 நத்தைகள் தேவைப்பட்டன. ஒரு காலத்தில் அதை உற்பத்தி செய்த பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட கடல் நத்தை ஓடுகளின் கோடிக்கணக்கான குவியல்கள் இருந்துள்ளன. உண்மையில், டிரியன் ஊதா உற்பத்தியே முதல் வேதியியல் செய்முறை என்று விவரிக்கப்படுகிறது.
“நிறத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல” என்று கிரீஸின் தெசலோனிகா அரிஸ்ட்டாட்டில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அறிவியல் பேராசிரியர் ஐயோனிஸ் கரபனகியோடிஸ் கூறுகிறார். மற்ற நிறங்களுக்கான நிறமிகள் இலைகள் போன்ற மூலப்பொருட்களில் ஏற்கனவே இருக்கும். ஆனால், அவற்றிலிருந்து டிரியன் ஊதா முற்றிலும் வேறுபட்டது என்று அவர் விளக்குகிறார்.
கடல் நத்தை திரவத்தில் வேதியியல் பொருட்கள் உள்ளன, அவற்றை சரியான நிலையில் மட்டுமே சாயமாக மாற்ற முடியும். “இது மிகவும் அற்புதமானது” என்று அவர் கூறுகிறார். இருப்பினும், செயல்முறையின் பல முக்கிய விவரங்கள் நீண்ட காலமாக கிடைக்கவில்லை.
1453 மே 29 ஆம் தேதி அதிகாலையில், கான்ஸ்டான்டினோபில் பைசண்டைன் நகரம் ஒட்டோமான்களால் கைப்பற்றப்பட்டது. இது கிழக்கு ரோமானிய பேரரசின் முடிவாக இருந்தது – அதுவே டிரியன் ஊதாவையும் அங்கிருந்து எடுத்துச் சென்றது. இந்த நிறம் கத்தோலிக்க மதத்துடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது – கார்டினல்களால் அணிந்துகொள்ளப்பட்டது.
மத நூல்களின் பக்கங்கள் இந்த நிறத்தை கொண்டிருந்தன. ஆனால் அதிகப்படியான வரிகளுக்குப் பிறகு அது ஏற்கனவே அழிவை சந்திக்க தொடங்கியிருந்தது. இப்போது தேவாலயம் சாய உற்பத்தியின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துவிட்டது. எனவே, கிறிஸ்தவ அதிகாரத்தின் புதிய அடையாளமாக சிவப்பு நிறம் இருக்கும் என்று போப் விரைவில் முடிவு செய்தார். செதில் பூச்சிகளை நசுக்கி சிவப்பு நிறத்தை எளிதாகவும் மலிவாகவும் செய்யலாம்.
எனினும், டிரியன் ஊதாவின் வீழ்ச்சிக்கு வேறு காரணங்களும் இருந்திருக்கலாம். 2003 ஆம் ஆண்டில், தெற்கு துருக்கியில் ஆண்ட்ரியாகே என்ற பண்டைய துறைமுகத்தின் தளத்தில் கடல் நத்தை ஓடுகளின் குவியலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அவை கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். சுமார் 300 கன மீட்டருக்கு (10,594 கன அடி) நத்தைகளின் எச்சங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர்.
அதாவது தொராயமாக 60 மில்லியன் நத்தைகளின் எச்சங்கள் என்று அர்த்தம். மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குவியலின் அடிப்பகுதியில் – அதாவது முதலில் வீசப்பட்ட நத்தை எச்சங்கள்- பருமனான, வயதானதாக இருந்தன. சமீபத்தில் வீசப்பட்டவை கணிசமாக சிறியதாகவும் இளமையாகவும் இருந்தன.
ஒரு விளக்கம் என்னவென்றால், கடல் நத்தைகள் அதிகமாக சுரண்டப்பட்டு, இறுதியில், முதிர்ந்த நத்தைகள் எதுவும் இல்லை. இது இந்த பகுதியில் ஊதா நிற உற்பத்தியின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்த கண்டுபிடிப்புக்கு சில ஆண்டுகள் கழித்து, மற்றொன்று இந்த பண்டைய நிறத்தை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்ற நம்பிக்கையை எழுப்பியது.
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள், முகமது கசன் நௌரா, துனிசியாவின் தூனிஸ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கடற்கரையில் தனது வழக்கமான மதிய உணவுக்கு பிறகான நடையை மேற்கொண்டிருந்தார். “கடந்த இரவு ஒரு பயங்கரமான புயல் இருந்தது, எனவே மணல் நண்டு, கடல் பாசிகள், சிறிய நண்டுகள் போன்ற பல இறந்த உயிரினங்கள் மணலில் இருந்தன” என்று அவர் கூறுகிறார். பின்னர் அவர் ஒரு நிறத்தை கவனித்தார் – ஒரு தீவிரமான சிவப்பு-ஊதா திரவம் ஒரு உடைந்த கடல் நத்தையிலிருந்து வெளிப்பட்டது.
ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் நௌரா, பள்ளியில் தான் கற்ற ஒரு கதையை உடனடியாக நினைவு கூர்ந்தார் – டிரியன் ஊதா பற்றிய புராணம். அவர் உள்ளூர் துறைமுகத்திற்கு விரைந்து சென்றார். அங்கு கடற்கரையில் அவர் பார்த்த நத்தைகள் போன்றே பல நத்தைகளை அவர் கண்டறிந்தார். அவற்றின் சிறிய சுருள் உடல்கள் முட்களால் மூடப்பட்டிருந்ததால், அவை பெரும்பாலும் மீனவர்களின் வலைகளில் சிக்கிவிடும். “மீனவர்கள் அவற்றை வெறுக்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.
அங்கிருந்த ஒருவர் அவற்றை தனது வலைகளிலிருந்து பிடுங்கி, அவற்றை ஒரு பழைய தக்காளி கூடையில் வைத்தார். பின்னர் நௌரா அவற்றை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். ஆரம்பத்தில், நௌராவின் பரிசோதனை மிகவும் ஏமாற்றமளித்தது.
அந்த இரவு, அவர் நத்தைகளை திறந்து கடற்கரையில் பார்த்திருந்த தெளிவான ஊதா திரவங்களை தேடினார். ஆனால் வெளிறிய சதை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் எல்லாவற்றையும் மறுநாள் வீசி எறிவதற்காக ஒரு பைக்குள் வைத்துவிட்டு, படுக்கைக்குச் சென்றார். அடுத்த நாள், பையில் இருந்த பொருட்கள் ஒரு மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தன. “அப்போது நான், ஊதா ஆரம்பத்தில் தண்ணீர் போல நிறமற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இது உடனடி டிரியன் ஊதா அல்ல. இது உண்மையில் பல வேறுபட்ட நிறமி மூலக்கூறுகளால் ஆனது, அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. நீல நிறமுள்ள இண்டிகோ, ஊதா நிறமுள்ள “புரோமினேற்றப்பட்ட” இண்டிகோ மற்றும் சிவப்பு நிறமுள்ள இண்டிரூபின் உள்ளன என்று மெலோ விளக்குகிறார். தேவையான நிறம் கிடைத்தும் கூட, நிறமிகளை ஒரு சாயமாக மாற்ற இன்னும் பல செய்முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அவற்றை துணிகளில் ஒட்டிக்கொள்ளும் சாயங்களாக மாற்றுதல்.
டிரியன் ஊதா தயாரிப்பின் தொலைந்துபோன முறையைக் கண்டுபிடிப்பதன் 16 ஆண்டுகால மோகத்தின் தொடக்கமாக நௌராவுக்கு இந்த தருணம் இருந்தது. ஏற்கனவே மற்றவர்கள் கடல் நத்தைகளின் சுரப்புகளை ஆராய்ச்சி செய்துள்ளனர். 12,000 நத்தை எச்சங்களிலிருந்து தொழில்துறை நுட்பங்களைப் பயன்படுத்தி 1.4 கிராம் தூய தூள் நிறமியாக மாற்றியிருந்தார் ஒரு விஞ்ஞானி. எனினும் நௌரா அதை பழைய முறையில் செய்ய விரும்பினார், மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றப்படும் உண்மையான நிற சாயத்தை மீண்டும் கண்டுபிடிக்க விரும்பினார்.
2007 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அந்த கடல் நத்தைகளை முதலி எடுத்துக் கொண்டபோது, அவருக்கு திருமணமாகி ஒரு வாரம் முடிந்திருந்தது. “என் மனைவி அந்த வாசனையால் அதிர்ச்சியடைந்தார்; அவள் என்னை கிட்டத்தட்ட வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாள்.. ஆனால் நான் அதைத் தொடர வேண்டியிருந்தது” என்று அவர் கூறுகிறார்.
இறுதியில் அவர் உண்மையான டிரியன் ஊதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக அவர் நினைக்கும் தூய நிறமிகள் மற்றும் சாயங்களை கண்டுபிடித்தார். “ பண்டைய புகழ்வுக்கு ஏற்ப, இது [நிறம்] மிகவும் உயிருடன் இருக்கிறது, மிகவும் இயக்கமுள்ளது” என்று அவர் கூறுகிறார். “ஒளியைப் பொறுத்து, அது மாறி மின்னும்… அது தொடர்ந்து மாறி உங்கள் கண்களில் தந்திரங்களை விளையாடும்.” என்றார்.
பல பத்தாண்டுகளாக கடுமையான பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் பாஸ்டனில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள கண்காட்சிகளில் தனது நிறமிகள் மற்றும் சாயம் பூசப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த நௌரா அழைக்கப்பட்டார். அவர் கடல் நத்தை சமையல் குறிப்புகளில் ஓரளவு உணவு நிபுணராகவும் ஆகிவிட்டார்; அவர் காரமான துனிசியன் முரெக்ஸ் பாஸ்டா அல்லது வறுத்த முரெக்ஸை பரிந்துரைக்கிறார்.
“இது மிருதுவானது, நம்பமுடியாத சுவை கொண்டது” என்று அவர் கூறுகிறார். ஆனால் டிரியன் ஊதா மீண்டும் ஆபத்தில் உள்ளது. இன்று இந்த சவால் படையெடுப்போ, அதை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த ரகசியமோ அல்ல , மாறாக அதன் அழிவு. முரெக்ஸ் கடல் நத்தைகள் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட மனித தாக்கங்களினால் அழிந்து கொண்டு வருகிறது.
சிவப்பு நிறத்தை அளிக்கும் ஸ்ட்ராமோனிட்டா ஹீமாஸ்டோமா என்ற நத்தை இனம் ஏற்கனவே கிழக்கு மத்திய தரைக்கடலில் இருந்து அழிந்துவிட்டது. எனவே, டிரியன் ஊதா இறுதியாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, ஒன்று மட்டும் உறுதி: அது மீண்டும் எளிதாக இழக்கப்படலாம்.
பிபிசி தமிழ்