அடுத்த ஐந்து நாள்களுக்கு இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு, அடுத்த இரு தினங்களுக்குக் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

நேற்றிரவு முதல் தற்போதுவரை சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

கனமழை எச்சரிக்கை

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “தற்போது இலங்கையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது.

இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதோடு, அடுத்த இரு தினங்களுக்குக் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

மேலும், டிசம்பர் 2, 3 தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை
கனமழை

அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று அளவுக்கு அதிகமாக வீசும் என்பதால், அடுத்த மூன்று நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஆழ்கடலிலிருக்கும் மீனவர்கள் இன்றைக்குள் கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றார்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்திலும் கடந்த 3 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை தொடர்வதால், சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதனால், வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

மக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டுமென்று அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

அதேபோல, நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 4 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழையால், 6.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 5 இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தகவல்.

கனமழையின் காரணமாக, சென்னையில் உள்ள 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை (நவ.30) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழையின் காரணமாக, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version