இலங்கை தேசம் ஆபத்தான போதைப்பொருட்களின் கடத்தல் மையமாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை அன்றாடம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மற்றும் அவை பற்றிய செய்திகள் ஏற்படுத்துகின்றன.

30 ஆண்டுகால இனவாதப் போரால் சின்னாபின்னமான நாடு அபிவிருத்தியில் முழுமையாக மீண்டெழ முடியாத வண்ணம் கொவிட், பொருளாதார வீழ்ச்சி என அடுத்தடுத்து அடிகள் விழுந்த வண்ணமுள்ளன. அந்த வகையில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் போதைக் கடத்தலும் பாவனையும் நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

நாட்டுக்குள் போதைவஸ்துகளை கடத்தி வரும் செயற்பாடுகள் மிக அதிகளவில் அதிகரித்து வருகின்றன. நாட்டுக்குள் போதைப்பொருட்களை கடத்திவருவோர் மற்றும் அதனை பயன்படுத்துவோரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், அதன் கண்களில் மண்ணை தூவிவிட்டு நாட்டுக்குள் போதைப்பொருட்கள் நுழைந்துவிடுகின்றன.

நாட்டுக்குள் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோரில் அதிகமானோர் பெண்களும் சிறுவர்களுமே என்ற தகவல் அதிர்ச்சியையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியில் சில தினங்களுக்கு முன் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது மாத்திரம் பெண்கள் உட்பட 50க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன?

இலங்கைக்கு ஆகாய மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. ஆகாய மார்க்கமாக கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் பாதுகாப்புப் பிரிவினரால் அல்லது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பெரும்பாலும் கைப்பற்றிக்கொள்ள முடிந்தாலும் கடல் மார்க்கமாக கடத்தப்படும் போதைப்பொருளை கைப்பற்றுவது சவாலானதாகவே இருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கடத்தி கொண்டு வரப்படும் போதைப்பொருள் நடுக்கடலில் படகுகளுக்கு ஏற்றப்பட்டு கரையை நோக்கி எடுத்து வரப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைத்த பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு கடத்திக் கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களே சிக்கியுள்ளன.

மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் இலங்கைக்கு கடல் மார்க்கமாகவும் கொள்கலன்கள் வாயிலாகவும் போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றை கட்டுப்படுத்த இலங்கை, இந்திய கடற்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டும் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளே காணப்படுகின்றன. கடந்த ஆண்டு பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட 529 கிலோ ஐஸ், 221 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 13 கிலோ ஹெரோயின் ஆகியவற்றை இந்திய கடற்படையின் கூட்டுக் குழு குஜராத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கைப்பற்றியது.

பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இந்திய – இலங்கை கடற்படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய கடற்படையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஈரானியப் படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மொத்தம் 200 கிலோ உயர்தர ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு ஆறு ஈரானிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்தியா, மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளின் உதவியுடன் 2022 டிசம்பர் மற்றும் 2023 ஏப்ரல் காலங்களில் இலங்கை கடற்படையினர் நடத்திய இரண்டு நடவடிக்கைகளில் 19 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதோடு 286 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 128 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 2023 மார்ச் இந்திய கடற்படை உளவுப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் மூலம் தாய்லாந்து கப்பல் ஒன்றிலிருந்து 134 மூடைகள் மெத்தம்பெட்டமைன் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்துக்குரிய பாகிஸ்தானியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

அதிகரிக்கும் போதை பாவனை!

இலங்கையில் சிறுவர்கள் உட்பட சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது ஹெரோயின் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை சில மாதங்களுக்கு முன் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் அடிமையாகியுள்ளனர் என்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

வடக்கில் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள்

வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் போதை பாவனையில் பெண்களும் சிறுவர்களும் கணிசமான அளவில் ஈடுபடுவதாகவும் அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

வட மாகாணத்தின் பல பிரதேசங்களில் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது குறித்த செய்திகள் தினந்தினம் வெளிவருகின்றன.

வட மாகாணத்தில் கடல் மார்க்கமாக அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அவை கொண்டு வரப்படுவதோடு கடற்தொழிலாளர்களின் துணையுடன் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், பேசாலை, வங்காலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு, அல்லைபிட்டி, புங்குடுதீவு, காரைநகர், அணலை தீவு, காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை, முள்ளிவாய்க்கால் ஆகிய வட கரையோரப் பகுதிகளில் மட்டுமல்லாது தென் கரையோரப் பகுதிகளுக்கும் போதைப்பொருட்களும் போதை மாத்திரைகளும் கொண்டுவரப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இவை பாகிஸ்தானின் கராச்சி மற்றும் இந்தியாவின் கேரளா, தூத்துக்குடி மார்க்கமாக இலங்கைக்கு கடல் வழியாக கொண்டுவரப்பட்டு பின்னர் நாட்டின் இதர பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.

இவற்றுக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லை வழியாகவும் காலி அம்பாந்தோட்டை பகுதிகளுக்கு கப்பல்கள் மூலம் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டு சிறிய மீன்பிடி படகுகளால் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கடத்தல் விற்பனை செயற்பாடுகளை மேற்கொள்ள பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்கள், இளைஞர்கள், போதை பாவனைக்கு அடிமையானவர்கள், வேலை வாய்ப்பற்றோர் ஆகியோர் பயன்படுத்தப்படுகின்றனர்.

சூட்சுமமாக கடத்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் கடற்படையினரால் ஒருசில வேளைகளில் கடத்தல் செயற்பாட்டை தடுக்க முடியாமல் போகிறது.

கடற்படையினரும் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு நாட்டின் இன்றைய பொருளாதார நிலைமை பெரும் சவாலாக காணப்படுகிறது.

எவ்வாறெனினும், வடக்கில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு என்பன முற்றுமுழுதாக இல்லாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடைவிடாத ரோந்து பணிகளை மேற்கொள்ளும் பாதுகாப்பு படையினர் பல தேடுதல் வேட்டைகளையும் கடல் பகுதியில் மேற்கொள்கின்றனர்.

இதன்போது பல கோடிக்கணக்கான பெறுமதியான போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள் மீட்கப்படுகின்றன.

அதிகமான இளைஞர்கள் போதை பாவனைக்கு உள்ளாவதற்கு காரணம், இலகுவில் போதைப் பொருட்கள் அவர்கள் கைகளில் கிடைப்பதேயாகும். முதலில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக கொடுத்து, அவர்கள் அதற்கு அடிமையானதன் பின்னர் பணத்துக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு நுட்பமான முறையில் போதை பாவனைக்கு பலரை அடிமையாக்குகின்றனர்.

பாடசாலை மாணவர்களும் போதை பாவனைக்கு உள்ளாகி வருவதனையும் அண்மைய ஆய்வுகள் மற்றும் பொலிஸாரின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

மன்னாரில் பிரபல பாடசாலை ஒன்றின் குப்பைமேட்டிலிருந்து போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை அதற்கு ஒரு சான்றாகும். பாடசாலை மாணவர்களை குறிவைத்து பல கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன.

அவர்கள் திட்டமிட்டு மாணவர்களை அதில் சிக்கவைக்கின்றனர். வட பகுதியில் காணப்படும் தனியார் கல்வி நிலையங்களை அண்டியதாகவும் திட்டமிடப்பட்டு போதைவஸ்துக்கள் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஹோட்டல் ஒன்றில் சமூக ஊடகம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வுகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டமை வெளிக்கொணரப்பட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியை ஒரு சில கும்பல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதுவும் வட மாகாணத்தையும் இளைஞர்களையும் மையப்படுத்தி இதனை மேற்கொள்கின்றனர். இதனை அறியாத இச்சமுதாயம் அம்மாயவலையில் சிக்கி சின்னாபின்னமாகிறது.

இலங்கையை பொறுத்தவரையில், யாழ் மாவட்டத்தில்தான் அதிகமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அசாதாரண தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளதை காணலாம்.

சமூக சீரழிவுகள், பாலியல் தொல்லைகள், கடத்தல்கள், திட்டமிடப்பட்ட கொலைகள், களவு மற்றும் கொள்ளைகள், சண்டைகள், தற்கொலைகள் போன்ற பல்வேறு துன்பியல் நிகழ்வுகள் இடம்பெற போதை பாவனை முக்கிய காரணமாக அமைகிறது.

போதை பாவனையாளருக்கு மட்டுமன்றி அவர் சார்ந்த சமூகமும் இதனால் பாதிப்பை எதிர்கொள்கிறது. இவ்வாறான செயற்பாட்டால் எமது இருப்பும் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இது எதிர்காலத்தில் பல்வேறு தாக்கங்களை தமிழர்கள் மீது ஏற்படுத்தலாம்.

போதை பாவனையை கட்டுப்படுத்த அரசும் பாதுகாப்பு தரப்பும் செயற்படுவதற்கு அப்பால் நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இதனை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கண்காணிப்பை அதிகரித்தல், போதை விற்பனையாளர்களை இனங்கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தல், அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளல், பாடசாலை மற்றும் தனியார் நிலையங்களை அண்டி போதை எதிர்ப்பு விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்களை காட்சிப்படுத்தல்.

தண்டனைகளை கடுமையாக்கல், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், விளையாட்டில் அதிக நேரம் செலவிட இளைஞர்களை ஊக்குவித்தல், பொலிஸாரின் தேடுதல் வேட்டையை அதிகரித்தல், ஆன்மீக மார்க்கங்களையும் அல்லது அதன் முக்கியத்துவம் பற்றிய தகவல்களையும் வெளியிடல் போன்ற செயற்பாடுகள் மூலம் நாம் எமது எதிர்கால சந்ததியினரை மீட்டெடுக்க முடியும்.

இல்லாவிட்டால், தமிழ் இனம், அவ்வினத்தின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், பண்டைய மரபுகள் என்பனவும் அழிந்துபோய்விடும்! அதை தடுக்கும் பொறுப்பு எம் ஒவ்வொருவரினதும் கைகளில் உள்ளது.

(மனோஜ்)Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version