தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தா சாமியார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறினார். பின் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதனை தான் ஆட்சி செய்துகொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார்.

கைலாசா என்ற நாடு எங்கே இருக்கின்றது என்பது யாருக்கும் தெரியாத போதிலும் நித்தியானந்தா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் காணொளிகளினால் கைலாசா பிரசித்தி பெற்றது.

அதேவேளை, அது வெறும் கற்பனை தேசமே என்று விமர்சிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கைலாசாவினால் பரகுவே நாட்டின் அமைச்சர் ஒருவர் தனது பதவியை இழந்துள்ளார்.

இந்த சுவாரஸ்யமான விடயம் தொடர்பில் மேலும் பார்ப்போம்,

சைவ கடவுளான சிவபெருமானின் பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றான திருவண்ணாமலை ஆலயம் அமைந்துள்ள திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன.

கர்நாடகாவின் பிடதியில் 200 ஏக்கர் பரப்பில் அவரது தலைமை ஆசிரமமான பிடாதி பீடம் செயற்படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவருக்கு பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன.

ஆயினும், பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தா கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் தலைமறைவானார். அதே ஆண்டு டிசம்பரில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அவர் அறிவித்தார். அந்த நாட்டுக்கு தனிக்கொடி, கடவுசீட்டு, நாணயத்தாள்கள் என்பனவற்றையும் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் ஒன்றில் கைலாசாவின் சார்பில் கடந்த மார்ச் மாதம் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் சிலர் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அமெரிக்காவின் 30 நகரங்கள், பிரான்ஸ், கினீ நாடுகளின் நகரங்களுடன் ‘சிஸ்டர் சிட்டி’ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கைலாசாவின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தென் அமெரிக்க நாடான பராகுவேவின் வேளாண்துறை மற்றும் கைலாசா இடையே கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக கைலாசாவின் இணையதளம், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், ஒப்பந்த நகல்கள் வெளியிடப்பட்டன.

இந்த விவகாரம் பராகுவேவின் முன்னணி ஊடகங்களில் வெளியாகி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பராகுவே பாராளுமன்றத்திலும் கைலாசா விவகாரம் எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக பராகுவே அரசு விசாரணை நடத்தியதில் கைலாசா எனும் கற்பனை தேசத்துடன் வேளாண் துறை ஒப்பந்தம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வேளாண் அமைச்சர் அர்னால்டோ சாமோரா நேற்று (30) பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அர்னால்டோ கூறும்போது, “கைலாசா நாட்டை சேர்ந்த 2 பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். எங்கள் நாட்டுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தனர். பல்வேறு திட்டங்களை முன்வைத்தனர். அவர்களை நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்” என்று தெரிவித்தார். இந்த செய்தி தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

நித்தியானந்தா ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், அவரால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் தற்போது ஒரு நாட்டின் அமைச்சரே ஏமாற்றப்பட்டு தனது பதவியை இழந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

(சுகுணா)Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version