திங்கட்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் சூடுப்பிடித்திருந்தன. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் ஜனாதிபதி குறித்து சபையில் முன்வைத்த விமர்சனங்கள் சபையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலும் பேசப்பட்ட விடயமாகியது. இந்த சர்ச்சையின் பின்னர் பிரதான எதிர்க்கட்சியில் முக்கிய பதவியில் ரொஷான் ரணசிங்க அமர்த்தப்படுவார் என்றே கருதப்பட்டது.
ஆனால் எதிரக்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக தகவல்களின்படி சஜித் பிரேமதாசவின் சில செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்புகள் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்து வருவதாக கூறுகின்றன.
மறுபுறம் புதிய அரசியல் கூட்டணியும் தனது தேர்தல் சின்னத்தை தெரிவு செய்துவிட்டுள்ளதுடன் அதனை ஜனவரியில் கன்னி சம்மேளனத்தின்போது அறிவிக்க தீர்மானித்துள்ளது.
இவ்வாறு தேசிய அரசியலில் பல்வேறு சம்வங்கள் இடம்பெறுகையில் ஜனாதிபதி அதரடியாக அமைச்சரவை கூட்டத்தில் வைத்து ரொஷான் ரணசிங்கவின் பதவியை பறித்து வெளியேற்றிருந்தார்.
அமைச்சரவை கூட்டம்
பரபரப்பான சூழலில் திங்கட்கிழமை மாலை அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. வரவு செலவு திட்டம் மீதான விவாதங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்றமையினால் அமைச்சர்கள் அதில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
எனவே, அமைச்சரவை கூட்டத்தை பாராளுமன்றத்தில் குழு அறை 3இல் நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.
பொதுவாக அமைச்சரவை கூட்டத்திற்கு வரும் போது ஜனாதிபதி எந்தவொரு ஆவணங்களையும் கையில் எடுத்து வருவதில்லை. ஆனால் திங்கட்கிழமை சில ஆவணங்களை கையில் ஏந்தியவாறு அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற குழு அறைக்குள் ஜனாதிபதி நுழைந்தார்.
முற்பகல் சபை அமர்வுகளில் இடம்பெற்ற முக்கிய விடயங்களை ஆசு மாரசிங்க ஏற்கனவே ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியிருந்தார். ரொஷான் ரணசிங்கவும் அன்று அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ரொஷான் ரணசிங்க தொடர்பில் முக்கிய தீர்மானத்துடன் ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டதை யாரும் அறிந்திருக்க வில்லை.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ரொஷான் ரணசிங்கவை நோக்கு ஜனாதிபதி இரு குற்றச்சாட்டுக்களை இதன்போது முன்வைத்தார்.
அதாவது எதிரக்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்று கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் சஜித் பிரேமதாச மற்றும் லக்ஷமன் கிரியெல்ல ஆகியோருடன் கலந்துரையாடினீர்களா?
இந்த கலந்துரையாடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை அழைத்துப் பேசினீர்களா என்ற கேள்வியை ஜனாதிபதி முன்வைக்க, இதனை சற்றும் எதிர்பாராத ரொஷான் ரணசிங்க மௌனித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையை இந்தியா ஊடாக நீக்கிக்கொள்ளும் நோக்கில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட நீங்கள் முயற்சித்தீர்கள், அப்படித்தானே என்று ஜனாதிபதி தொடர்ந்தும் ரொஷான் ரணசிங்கவை நோக்கி கேள்வி எழுப்பினார்.
எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்காமல், ரொஷான் ரணசிங்க தொடர்ந்தும் மௌனித்திருந்தார். மொத்த அமைச்சரவையும் மௌனம் காத்தது. சற்று உரத்த குரலில் ‘மஹாவலி வலயத்தின் காணிகளை, உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு வழங்க அமைச்சரவை பத்திரம் முன்வைத்துள்ளீர்கள்’ இது குறித்து என்ன கூறப் போகின்றீர்கள் என்று ஜனாதிபதி மீண்டும் ரொஷான் ரணசிங்கவை நோக்கி கேள்வியெழுப்பினார்.
எந்தவொரு கேள்விக்கும் ரொஷான் ரணசிங்க பதிலளிக்காதிருந்த நிலையில் ஜனாதிபதி, அமைச்சரவையின் செயலாளரை நோக்கி திரும்பினார்.
ஜனாதிபதி அமர்ந்திருந்த மேசையின் இடது புறத்தில் காணப்பட்ட நீண்ட கடித உரையை எடுத்து ரொஷான் ரணசிங்விடம் அமைச்சரவை செயலாளர் வழங்கினார். அதனை திறந்து பார்த்ததும் மௌனத்தை களைத்த ரொஷான் ரணசிங்க ஜனாதிபதியை நோக்கி ‘நான் ஊழல் மோசடிகளுக்கு எதிரானவன்’ என்று கூறினார்.
‘உங்களை போன்று நானும் ஊழல் மோசடிகளுக்கு எதிரானவன்தான்’ என்று ஜனாதிபதி ரொஷான் ரணசிங்கவுக்கு பதிலளிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் காதில் ஏதோ முனுமுனுக்கையில், ரொஷான் ரணசிங்க பதவிகளை பறிகொடுத்த நிலையில் அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
வெளியில் வந்து, கடித உரையில் இருந்த பதவி நீக்கம் செய்யப்பட்ட கடிதத்தை முழுமையாக வாசித்த ரொஷான் ரணசிங்க, “இரண்டு பதவிகளையும் பறித்துவிட்டார்கள்” என்று சத்தமாக கூறியுள்ளார்.
இலங்கையின் அமைச்சரவை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு அமைச்சரையும் அமைச்சரவை கூட்டத்தில் வைத்து பதவி நீக்கம் செய்திருக்கவில்லை என்று அமைச்சரவை கூட்டத்திலிருந்த அமைச்சர்கள் ஒருவருக்கு ஒருவர் முனுமுனுத்துக்கொண்டனர்.
புதிய அமைச்சர்கள் நியமனம்
அமைச்சரவை கூட்டத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில், பாராளுமன்றத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவையும் அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சியையும் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்திருந்தார்.
ரொஷான் ரணசிங்க வகித்த அமைச்சுப் பொறுப்புக்களில் ஹரின் மற்றும் பவித்ரா ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்தனர்.
பாராளுமன்ற சம்பாஷணைகள்
செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு சபை கூட்டத்தை நிறைவு செய்த பின்னர், நேரடியாக பாராளுமன்றத்துக்கு சென்றார். ஜனாதிபதி தனது அலுவலகத்துக்குள் நுழைகையில் அமைச்சர்கள் பலர் அவரை சந்திக்கும் நோக்கில், அலுவலக அறைக்குள் சென்றனர்.
ரொஷான் ரணசிங்க அமைச்சராக பதவி வகிக்கையில், உங்களை கடுமையாக விமர்சித்தார். ஆனால், அதற்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று அமைச்சர்கள் ஜனாதிபதி நோக்கி வினாவினர்.
‘என்னை விமர்சிக்க அனைவராலும் முடியும். ஆனால், அமைச்சரவை கூட்டுப்பொறுப்பினை மீறி செயற்பட யாராலும் முடியாது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாட அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டிருக்கையில், ரொஷான் ரணசிங்க செயற்பட்ட விதம் தவறானது’ என்று ஜனாதிபதி கூறினார்.
‘ரொஷான் ரணசிங்க தன்னை சந்தித்ததாகவும் இந்தியாவுடன் கலந்துரையாடியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஏற்றுக்கொண்டிருந்தார்’ என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன்போது தெரிவித்தார்.
‘புதிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தற்போது பொறுப்புகள் அதிகம். ஐசிசி தடையை நீக்குவது மாத்திரமன்றி, சித்ரசிறி அறிக்கையையும் செயல்படுத்த வேண்டும்’ என்று அனைவரையும் நோக்கி ஜனாதிபதி கூற, அனைவரும் தலையசைத்தனர்.
‘ரொஷான் ரணசிங்கவின் பின்னணியில் பல முக்கியஸ்தர்கள் இருப்பதாகவே தெரிகின்றது. பிரபல நாடுகள் கூட இருக்கலாம்’ என்று ஆசு மாரசிங்க ஜனாதிபதியை நோக்கி கூறினார்.
‘அனைவரும் தற்போது கிரிக்கெட் குறித்து மாத்திரமே பேசுகின்றனர். வரவு செலவு திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி கருத்தில் கொள்வதே இல்லை.
பொதுவாகவே வரவு செலவு திட்டம் என்றால் எதிர்க்கட்சியின் விவாதமாகவே கருதப்படும். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எதுவுமே தற்போது பேசுவதில்லை’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க கூறினார்.
‘ஆம். நீங்கள் கூறுவது உண்மைதான். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவே வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்காமல் தடுக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு விவாதத்தில் கலந்துகொள்ள அவர் வாய்ப்பு அளிப்பதில்லை என்றே அவர்கள் எம்மிடம் கூறுகின்றனர்’ என்று வஜிர அபேவர்தண குறிப்பிட்டார்.
‘பின்வரிசை 20 குழு’ என்று சிலர் ஒன்றிணைந்துள்ளனர் என்று ஆசு மாரசிங்க புதிய விடயம் ஒன்றை இதன்போது கூறினார்.
‘அது ஒரு சிறந்த விடயம். பாராளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்கள் வலுப்பெறுவது சிறந்த விடயமாகும்’ என்று ஜனாதிபதி ஆசு மரசிங்கவை நோக்கி கூறினார்.
‘ஜனாதிபதி வேட்பாளராக ரொஷான் ரணசிங்கவை ஏற்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர் பதவியும் அவருக்கு கிடைக்காமல் போகும் நிலையே உள்ளது. முதலில் பாராளுமன்ற தேர்தலே நடைபெறும் என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும்’ என்று நிமல் லான்சா இதன்போது கூறினார்.
இவ்வாறு ஜனாதிபதிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சம்பாஷணை இடம்பெறுகையில், அவ்விடத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களான தலதா அத்துக்கோரல மற்றும் ராஜித சேனாரத்ண ஆகியோர் வந்தனர். ரொஷான் ரணசிங்கவிடம் பறிக்கப்பட்ட அமைச்சுக்களை இவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி வழங்குவார் என்றே நாங்கள் கருதினோம் என்று அமைச்சரொருவர் கூற அனைவரும் பேரொலியுடன் சிரித்தனர்.
புதிய பொலிஸ்மா அதிபர் சர்ச்சை
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கும் நோக்கில் புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்றார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (முன்னாள்) தேசபந்து தென்னக்கோனையும் அமைச்சர் டிரான் அலஸ் அழைத்துச் சென்றிருந்தார்.
இருவருடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் இனி 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என்ற விடயத்தை கூறினார்.
இதன் பிரகாரம், பொலிஸ்மா அதிபராக பதவி ஏற்கும்போது, வயது எதுவாக இருந்தாலும் 3 வருடங்கள் மாத்திரமே அந்த பதவியில் இருக்க முடியும்.
மறுபுறம் பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்று இரு வருடங்களில் 60 வயதானால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற விடயத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இடம்பெற்ற பல்வேறு சந்திப்புகளின் பின்னர், மூன்று மாத காலத்துக்கான பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமித்து, அரசியலமைப்பு பேரவைக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தார்.
டளஸ், கெஹேலிய, லான்சா
பாராளுமன்றத்தில் உள்ள பாராளுமன்ற உணவக பகுதியில் கெஹேலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும மற்றும் சரித ஹேரத் ஆகியோர் கலந்துரையாடிக்கொண்டிருக்கையில், புதிய அரசியல் கூட்டணியில் செயற்பாட்டாளரான நிமல் லான்சா அவர்களருகில் சென்று ‘ஏதும் இரகசியமா’ என்று வினாவினார்.
“ரொஷான் ரணசிங்கவின் வாகனங்கள் தொடர்பான விவகாரத்தை பெரிதாக்க பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸவுக்கு நீங்கள்தான் ஆலோசனை வழங்கினீர்கள் என்று அரசல் புரசலாக பேசப்படுகிறது என டளஸ் அழகப்பெரும நிமல் லான்சாவை நோக்கி கூறினார்.
‘ஐயோ, இல்லை. அவ்வாறு செய்யவேண்டிய தேவை எனக்கு இல்லை. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக எனது கருத்துக்களை கூறுவேன். யாரையும் அநாவசியமாக விமர்சிக்க மாட்டேன்’ என்று கூறி அவ்விடத்திலிருந்து நிமல் லான்சா சென்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி
சபை அமர்வுகளின்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் சந்திப்பு பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்காத நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கலந்துகொண்டிருந்தார்.
மேலும் 20க்கும் குறைவான எதிர்க்கட்சி உறுப்பினர்களே பங்கேற்றிருந்தனர். இதனை கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பாராளுமன்ற கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்று ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.
“சஜித் எமது தலைவர். வேறு தலைவர்கள் எமக்கு இல்லை. ஆனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என்று ரஞ்சித் மத்தும பண்டார கலந்துரையாடலை ஆரம்பிக்கும் வகையில் கூறினார்.
‘எதிர்க்கட்சி தலைவரே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். தேவையானதற்கும் தேவையற்ற விடயங்களுக்கும் இவர் கருத்து கூற செல்வதாலேயே பிரச்சினை’ என்று கபீர் ஹாசிம் கூறினார்.
‘எதிர்க்கட்சி தலைவருக்கு இதற்கு முன்னரும் கூறினேன். அனைத்து விடயங்களுக்கும் நீங்கள் கருத்து கூறுவது முறையல்ல என்ற விடயத்தை தெளிவாக கூறினேன். கேள்விகளை சுருக்கி கேட்குமாறும் கூறினேன். ஒரு வாரம் பின்பற்றினார். மீண்டும் பழைய நிலைமைக்கு சென்றுவிட்டார்’ என்று ராஜித சேனாரத்ன இதன்போது குறிப்பிட்டார்.
‘அவ்வாறு கூற வேண்டாம். எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்களில் முக்கியமான விடயங்கள் உள்ளன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து பேசியிருந்தனர். அவர்களது பிரச்சினையை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்திருந்தார். அதற்கு சிறந்த வரவேற்பும் கிடைத்தது’ என நளின் பண்டார கூறினார்.
‘தேசிய பிரச்சினைகள் குறித்து பேசுவது நல்லதுதான். கிரிக்கெட் பிரச்சினையை எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டும். ஆனால், முச்சக்கரவண்டி சாரதிகளின் பிரச்சினையையும் பேசுவது ஏற்புடையதல்ல’ என்று பலரும் கருத்துக்களை கூற, ஒரே அடியாக “அனைத்தையும் மாற்றிவிட இயலாது” என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.