தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை, உருவாகிறார்கள். அதுவே உலக மரபு. ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு சிலர் முயன்றிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் துவாரகா என்ற அறிமுகத்துடன், வெளியிடப்பட்ட காணொளி ஒன்று, சில நாட்களாக சமூக ஊடகங்களில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
சிலர் அதனை சிலாகிக்கின்றனர். பலர் வெறுப்பை உமிழ்கின்றனர்.
பிரதான ஊடகங்கள் இந்தக் காணொளியையோ அந்த உரையில் கூறப்பட்டுள்ள விடயங்களையோ பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால், இது ஏற்கெனவே ஊகிக்கப்பட்ட ஒன்று.
மாவீரர் நாளன்று துவாரகாவின் உரையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்னரே ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
ஆனால், தங்களுக்கு அவ்வாறான எந்த எச்சரிக்கையும் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் தான், மாவீரர் நாளன்று, “தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன்” என்ற அறிமுகத்துடன் ஒரு காணொளி உரை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதாக துறைசார் வல்லுநர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.
இல்லையில்லை, இந்த உரை நேரில் பதிவு செய்யப்பட்டது தமக்குத் தெரியும் என்று இன்னும் சிலர் கூறுகின்றனர்.
துவாரகா உயிருடன் இருக்கிறார் என சில காலத்துக்கு முன்னர் ஒரு தகவல் கசிய விடப்பட்டது. இப்போது, அவர் தான் இவர் என்று ஒரு உருவம் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
சரி, துவாரகா உயிருடன் இருந்தால், இதுவரை ஏன் அவர் அமைதியாக இருந்தார்? இப்போது ஏன் அவர் வெளியில் வரவேண்டும்?
2009இல் போர் முடிவுக்கு வந்தபோது, புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை அரசாங்கம் காண்பித்த போது, அதனை போலியானது என்றும், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்றும் சிலர் நம்ப வைக்க முயன்றனர்.
பிரபாகரனின் மரணத்தை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது உண்மை. அதுவே அவர் சாகவில்லை என்ற பிரசாரத்தின் மீது பலரும் நம்பிக்கை கொண்டதற்குக் காரணம்.
14 ஆண்டுகளாக அவர் உயிருடன் இருக்கிறார், மீண்டும் வருவார் என்று கூறிக் கூறியே காலத்தைக் கடத்தி விட்டனர்.
இனிமேலும் அந்தப் பருப்பு வேகாது என்று தெரிந்து விட்ட நிலையில் தான், இப்போது துவாரகாவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றனர். அவ்வாறாயின் இதுவரை கூறப்பட்டு வந்தது போல, இனி பிரபாகரன் வரமாட்டார் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?
இனி, துவாரகாவை வைத்து தான் அரசியல் செய்யப் போகின்றனர். அதற்கான முன்னோடி தான், துவாரகாவுக்கு தலைமகள், தேசத்தின் புதல்வி என்ற அடைமொழிகள்.
துவாரகாவின் உரையில், மக்களுக்காக போராடப் போவதாக கூறப்பட்டிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது.
தமிழ் மக்களுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக யாரும் போராட்டங்களை முன்னெடுக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோரும் தலைவராகிவிட முடியாது. ஏனென்றால், தலைவர்கள் யாரும் பிறப்பதில்லை. இன்னொருவரால் உருவாக்கப்படுவதும் இல்லை. தலைவர்கள் தாங்களாகவே உருவாகிறார்கள். தங்களின் செயல்களினால் தான் அவர்கள் தலைமைத்துவ இடத்தை தங்களுக்கென்று உருவாக்கிக்கொள்கின்றனர். பிரபாகரனை எடுத்துக்கொண்டால், அவர் பெரும்பாலான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருந்தார்.
அவரது போராட்டமும், அதில் இருந்த உறுதியும், அதற்காக செய்யத் துணிந்த தியாகமும், தலைமைத்துவ ஆற்றலும் தான் அவரைத் தேசியத் தலைவர் எனக் கொண்டாடும் நிலைக்கு உயர்த்தியது.
1970களின் தொடக்கத்திலேயே ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய அவர், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தான், பெரும் தலைவர் என்ற நிலையை அடைந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் என்பதற்காக துவாரகா தமிழர்களின் தலைவராகி விடுவார் என்றில்லை. அவ்வாறானதொரு வாரிசு அரசியலை நிலைநிறுத்த பிரபாகரன் முயன்றதும் இல்லை.
தனக்குப் பின்னால் என்று தன் பிள்ளைகளை அவர் கைகாட்டவுமில்லை. அவர் ஒரே ஒருமுறை தான், தனக்கு பின்னரான தலைமையை சுட்டிக்காட்டினார்.
1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு இணங்க வைப்பதற்காக இந்தியா தனது விமானப்படை ஹெலிகொப்டரை அனுப்பி, பிரபாகரனை சுதுமலையில் இருந்து அழைத்துச் சென்றது.
இந்திய விமானப்படை ஹெலிகொப்டரில் ஏறுவதற்கு முன்னர் அவர், தாம் தாயகம் திரும்பும் வரை, மாத்தயா இயக்கத்தை வழிநடத்துவார் என்று கூறியிருந்தார். மாத்தயாவின் விவகாரத்துக்குப் பின்னர், அவர் யாரையும் அடுத்த தலைவராக கைகாட்ட விரும்பவில்லை.
அவ்வாறு தனது குடும்பத்தினரை முன்னிலைப்படுத்த அவர் விரும்பியிருந்தால், அவர்களை பிரபாகரன் மக்கள் முன் அறிமுகப்படுத்தியிருப்பார்.
சாள்ஸ் அன்ரனியின் செயற்பாடுகள் மட்டும் இயக்கத்தில் ஓரளவுக்கு வெளிப்படையாக இருந்தனவே தவிர, துவாரகா அல்லது பாலச்சந்திரன் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
எனவே பிரபாகரனின் அடையாளத்தை வைத்துக் கொண்டு, துவாரகாவை தலைமகள் என்று அறிமுகப்படுத்துவது அபத்தம்.
பிரபாகரனின் மகள் என்பதற்காக அவர், தலைவராகி விட முடியாது. அதற்கான தகைமையும், தலைமைத்துவ ஆற்றலும், அர்ப்பணிப்பும், அவசியம்.
பிரபாகரனுக்கு இருந்த ஜனவசீகரம், நடையிலும், உரையிலும் காணப்படும் கம்பீரம், பேச்சில் இருக்கும் தெளிவு எல்லாமே, தலைமைத்துவத்துக்கான பண்புகளாக வெளிப்பட்டன.
அவற்றில் எதையுமே, துவாரகாவின் உரையில் காண முடியவில்லை.
செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு உருவத்தினாலோ, தலைமையிலோ அவ்வாறான பண்புகளை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது.
உயிர்ப்பற்ற – வெறும் வார்த்தைகளால் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பவும் முடியாது. அதற்கென ஒரு வசீகரம் இருக்க வேண்டும். ஈர்ப்பு வர வேண்டும்.
துவாரகா எனக் கூறப்படுபவரின் இந்த வெளிப்படுத்தல், தமிழர்களுக்கென ஒரு தலைமையை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல.
அவ்வாறான நோக்கத்தைக் கொண்டிருந்தால், இந்த வெளிப்படுத்தலில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கும். பிரபாகரனின் மாவீரர் நாள் உரையும் சரி, அவரது படங்கள் வெளியிடப்படும் போதும் சரி, புலிகள் மிக கவனமாக இருப்பார்கள்.
தலைமைத்துவ ஆற்றலுக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய விதத்திலான படங்களையோ, வீடியோக்களையோ புலிகள் ஒரு போதும் வெளியிட்டதில்லை.
ஆனால், துவாரகா எனக் கூறப்பட்டு வெளியிடப்பட்ட காணொளியில் அத்தகைய எந்த நேர்த்தியும் இல்லை. உரையில் கூறப்பட்ட விடயங்களில் இருந்த கனதி, உச்சரிப்பில் இருக்கவில்லை.
14 ஆண்டுகள் மறைந்திருந்த ஒருவர், வெளியே வரும் போது, ஆற்றலுள்ளவர் என எடுத்த எடுப்பிலேயே, கணிக்கத்தக்க ஒருவராகவே வெளிவந்திருக்க வேண்டும்.
14 ஆண்டுகளாக அவரை தலைவராக உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், புடம் போடுதல் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
ஆனால், துவாரகா என்ற பெயரில் வெளிக் கொண்டு வரப்பட்ட உருவம், அந்தப் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி மாத்திரமே.
எதற்காக துவாகா இப்போது வெளியே கொண்டு வரப்பட்டிருக்கிறார்? இது முக்கியமான கேள்வி.
2009இல் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர், தமிழர் மத்தியில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் தீர்வும் கிட்டவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் சிதைவடைந்து போய் விட்டது.
தமிழ் மக்களுக்குச் சரியான தலைமைத்துவம் இல்லை என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
பிரபாகரனின் தேவையை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மக்கள் இன்று உணர்கிறார்கள். பலமான ஒரு தலைமைத்துவம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.
இத்தகைய தருணத்தில் தான் துவாரகா என்ற பெயரில் ஒரு தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கு என்ன காரணம், இதனால் யாருக்கு என்ன இலாபம்?
பலரும் இதனை புலம்பெயர் தமிழர்கள் சிலரின் வேலை என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் இது இந்திய அல்லது இலங்கைப் புலனாய்வு அமைப்புகளின் சதி என்கிறார்கள்.
பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்யாமல், அவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறி, ஒரு கும்பல் புலம்பெயர் மக்களிடம் நிதி வசூல் செய்வதாக தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
இப்போது, துவாரகாவை வைத்து அவர்கள் நிதி திரட்ட முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இது வெறுமனே நிதி திரட்டுவதற்கான வேலை அல்ல. அதுமட்டுமன்றி இது தனியே புலம்பெயர் தமிழர்கள் சிலரின் கைங்கரியமும் அல்ல.
அதற்கு அப்பாலும், சில மறைகரங்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றன.
அவர்களின் இலக்கு, தமிழ் மக்களை நிரந்தரமாக குழப்ப நிலைக்குள் வைத்திருப்பது தான்.
கடந்த 14 ஆண்டுகளாக அவர்கள் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தை உருவாக்கி, அதனை வெற்றிகரமாக செய்து கொண்டிருந்தனர்.
பிரபாகரன் வருவார், மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பார் என்று நம்பி நம்பியோ பலர், அமைதியாக இருந்து விட்டனர். அடுத்த கட்டம் பற்றிச் சிந்திப்பதற்கு அவர்கள் முனையவில்லை.
அந்த நிலையை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு இப்போது துவாரகா தேவைப்பட்டிருக்கிறார்.
துவாரகா என்ற கற்பனை தலைமையை உலாவ விடுவதன் மூலம், அவர்கள் தமிழர்களுக்கான ஒரு வலுவான, ஆற்றலுள்ள தலைமை கட்டியெழுப்பப்படுவதை தடுக்க முற்படுகிறார்கள்.
இதன் மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளையும் அடிமைப்படுத்தவும், தமிழர்களை ஒன்றுபடாமல் கூறுகளாக்கி வைத்திருக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள்.
தமிழர்களுக்கு வலுவான தலைமை தேவை என்ற உணர்வை இல்லாமல் செய்வது இன்னொரு தலைமை கட்டியெழுப்பப்படுவதை சிக்கலுக்குள்ளாக்கும்.
அதனைத் தான் துவாரகாவின் மூலம் அதனைச் செய்ய முயன்றிருக்கின்றனர். இதன் மூலம் தமிழர்களை குழப்பி- பிளவுபடுத்தி ஒன்றுபட முடியாமல் செய்ய முற்படுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் கமல் குணரட்ண வெளியிட்ட கருத்து ஒன்று முக்கியமானது.
“பிரபாகரனின் போராட்ட முறை தவறாக இருக்கலாம், ஆனால் அவர் தனது கொள்கைக்காக உண்மையாக போராடினார், அதற்காகவே அவர் தன்னையும் தனது குடும்பத்தையும் அர்ப்பணித்தார், பிரபாகரனின் மகிமையை கெடுத்து விடாதீர்கள் என்று, புலம்பெயர் தமிழர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
எதிரியும் மதிக்கும் தலைவராக இருந்தவர் பிரபாகரன். அவ்வாறான ஒருவரை, அவரது குடும்பத்தினரை வைத்து சிலர் ஈனப் பிழைப்பு நடத்த முனைகின்றனர்.
துவாரகா என்ற பெயரில் வெளிப்படுத்தப்பட்ட உரை அதனைத் தான் உறுதி செய்கிறது.
-என்.கண்ணன்-