உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை பகுதியில் உதவி கண் வைத்தியராக பணிபுரிந்து வந்தவர் அருண் சிங்(வயது 45). இவர், மனைவி அர்ச்சனா (வயது 40) மற்றும் அரிபா (வயது 11), அர்னவ் (வயது 4) ஆகிய 2 குழந்தைகளுடன் நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.

இதனிடையே, வைத்தியராக அருண் சிங் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். இதற்காக அவர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அருண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரை யாரும் தொடர்புகொள்ள முடியாதநிலை இருந்தது. அருண் சிங் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அருண் சிங் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அருண் சிங், மனைவி அர்ச்சனா, குழந்தைகள் அரிபா, அர்னவ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அருண் சிங், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த மனைவி, குழந்தைகளை சுத்தியலால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், தனக்கும் மயக்க மருத்தை செலுத்திய அருண் சிங், வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை தொடர்ந்து 4 பேரின் உடலையும் கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version