மூத்த குடிமக்களுக்கு அல்லது அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஒரு பழமையான மரத்திற்கு கிடைக்கும் ஓய்வூதியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒரு மரத்திற்கு ஓய்வூதியம் என்பது கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். பஞ்சாப்பின் அண்டை மாநிலமான ஹரியாணாவில், 75 வயதுக்கு மேற்பட்ட மரங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் பெயர் ‘பிரான் வாயு தேவதா யோஜனா’. மரங்களை பராமரிப்பதே இதன் நோக்கம்.
குறைந்தபட்சம் 75 வயது நிரம்பிய மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இத்திட்டம் முதல்வரால் கொண்டு வரப்பட்டு, ஹரியாணா தினத்தன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தனியார், பஞ்சாயத்து அல்லது வேறு எந்த இடத்திலும், 75 வயதுக்கு மேற்பட்ட பழமையான மரம் இருந்தால், அதற்கு மாதம் 2,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஹரியாணா அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
எந்தெந்த மரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன?
பழமையான மரங்களின் எண்ணிக்கை குறித்து ஹரியாணாவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது தவிர, பழமையான மரங்களை தங்கள் நிலத்தில் வைத்திருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்கள் அந்த மரங்களை முறையாக பராமரித்து வந்தால் அரசாங்கம் அவர்களுக்கு ஓய்வூதியத்தை அளிக்கும்.
வனத்துறை அதிகாரி ஜெய் குமார் கூறுகையில், “மாநிலத்தில் உள்ள 3810 பழமையான மரங்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 112 மரங்கள் ஓய்வூதியத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.”
“அத்தகைய 200 மரங்களுக்கான விண்ணப்பங்கள் கர்னால் மாவட்டத்திலிருந்து பெறப்பட்டன, இவற்றில் 50 சதவீத மரங்கள் பஞ்சாயத்து நிலத்தில் உள்ளன. இது தவிர குருக்ஷேத்திரத்தில் 68 மரங்கள் உள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசிடம் இருந்து ஓரளவு நிதியுதவி கிடைக்கும் போது, இந்த மரங்களை அவர்களால் சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதே இத்திட்டத்தின் பலன்” என்கிறார் ஜெய் குமார்.