மாத்தறை கோட்டையிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்திற்கு முன்பாக மின்கம்பத்தை நிறுவுவதற்காக தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையைச் சேர்ந்த ஊழியர்கள், ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் பல எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர்.

கடந்த புதன் கிழமை CEB ஊழியர்கள் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அதனையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, இந்த விடயம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மாத்தறை நட்சத்திரக் கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள எலும்புக்கூடு எச்சங்களையும், மீட்கப்பட்ட ஏனைய கலைப்பொருட்களையும் நீதவான் ஆய்வு செய்தார்.

அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் பல மனித எலும்புத் துண்டுகள், பீங்கான் துண்டுகள், புகைப்பிடிக்கும் குழாய் மற்றும் பல்வேறு மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துண்டுகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும் எனவும், இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்புகள் ஒல்லாந்தர் காலனித்துவ காலத்தை சேர்ந்தவை என தொல்பொருள் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

மாத்தறை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version