இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளதை அக்கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் தலைமைப்பதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைமை தாங்குவதற்கான இயலுமை கொண்டவர்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே விண்ணப்பம் செய்ததாக சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் புதிய தலைமையை தெரிவு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி விண்ணப்பம் கட்சியின் தற்போது பொதுசெயலாளராக செயற்படும் வைத்தியர்.பத்மநாதன் சத்தியலிங்கத்தினால் கோரப்பட்டதோடு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான முடிவுத்திகதியாக கடந்த மாதம் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோர் தலைமைப் பதவிக்கு போட்யிடுவதென தீர்மானித்து விண்ணப்பங்களைச் செய்திருந்தனர்.
அவர்களைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இறுதி நேரத்தில் தலைமைக்குப் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை அனுப்பிவைத்துள்ளார். எனினும் குறித்த விண்ணப்பம் இறுதி நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டமையால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் குழப்பமான நிலைமைகள் நீடித்து வந்தன.
இந்நிலையில் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் வைத்தியர்.பத்மநாதன் சத்தியலிங்கம், தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்காக எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர். அவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதனையடுத்து புதிய தலைமைக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக மாவட்டக் கிளைகளுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தலைமைக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் யாராவது தமது விண்ணப்பத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக இருந்தால் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக உத்தியோக அறிவிப்பின் அடிப்படையில் அதனை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற விடயமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக விண்ணப்பங்களை யாராவது மீளப்பெற்று போட்டியற்ற நிலைமைகள் காணப்பட்டால் ஏகமனதாக ஒருவர் தெரிவு செய்யப்படுவார். அவ்வாறில்லாது விட்டால் புதிய தலைமைக்கான தெரிவு பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இடம்பெறும் என்றார்.
இதேவேளை, சீனித்தம்பி யோகேஸ்வரன், திடீரென கட்சித்தலைமைப் பதவிக்கு போட்டியிடும் தீர்மானத்தினை எடுத்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இருந்தவர்கள் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்கள்.
தற்போதைய நிலைமையில் அதன் தலைமையானது வடக்கில் இருந்துதான் தெரிவாக வேண்டுமென்ற நிலைப்பாடுகள் அதிகாமாக பிரசாரம் செய்யப்படும் நிலையில், கிழக்கிலிருந்தும் தமிழரசுக்கட்சிக்கு தலைமை தாங்குவதற்கு இயலுமை உடையவர்கள் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைமைகள் எமக்கு ஏற்பட்டுள்ளன.
அந்தவகையில் தான், தலைமைப்பதவிக்கு போட்டியிடும் தீர்மானத்தினை நான் எடுத்து, அதற்கான விண்ணப்பத்தை அனுப்பி வைத்திருக்கின்றேன். இதில் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால், கிழக்கு மாகாணத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையே முக்கியமான விடயமாகின்றது என்றார்.