சென்னை: “நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக ஏன் சர்ச்சையான செயல்களில் ஈடுபடுகிறார்? எதற்காக அவர் ஊடகங்களை சந்திக்கிறார்? அவருக்கு வேறு பணி இல்லையா?” என்று சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

சம்பந்தப்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, ‘எனது சக திரைநாயகி த்ரிஷாவே, என்னை மன்னித்துவிடு’ என்று மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம், “இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்? எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில் பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா?” என கேள்வி எழுப்பி, பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு அவரது தரப்பு வழக்கறிஞர் குரு தனஞ்ஜெயிடம் நீதிபதி கூறினார்.

மேலும், “மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக இதுபோன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுகிறார்? எதற்காக அவர் ஊடகங்களை சந்திக்கிறார்? அவருக்கு வேறு பணி இல்லையா? தாம் எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலிகான் கைது நடவடிக்கைகளில் தப்பிப்பதற்காகவா நிபந்தனை அற்ற மன்னிப்புக் கோரினார்?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர், தாம் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், தம்மை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை த்ரிஷா நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அப்போது நடிகை த்ரிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.பாபு, “மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில் இந்த விவகாரம் முடிந்து விட்டது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக உள்ள நிலையில் தற்போது எதற்கு அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை” என கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மன்சூர் அலிகானின் மனுவுக்கு நடிகைகள் த்ரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version