யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.நகர் பகுதியை அண்டிய முட்டாஸ்கடை சந்தி பகுதிகளில் இரவு வேளைகளில், வீதியில் பயணிப்போரை வழிமறித்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை வீதி – ஸ்ரான்லி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளும் சந்திக்கும் சந்தி பகுதியான குறித்த சந்தியில் மின் விளக்குகள் பொருத்தப்படாமையால், இருளில் மறைந்து இருக்கும் கொள்ளையர்கள், வீதியில் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேர்ஸில் இருக்கும் சிறு தொகை பணத்தினை மட்டுமே கொள்ளையடித்து வருவதனால், பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய பின்னடிக்கின்றனர். இதனால் போதை ஆசாமிகளின் வழிப்பறிக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

அதனால் சந்தி பகுதியில் மின் விளக்குகளை பொருத்துவதற்கு யாழ்.மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாண பொலிஸார் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version