விதுர்ஷாவுக்கு 19 வயதாகிறது. ஆனால் அவரின் உயரம் 02 அடிகளுக்கும் குறைவாகவே உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வரை – விதுர்ஷாவின் தோற்றத்தை கேலியாக பார்த்த பலரும், இப்போது அவரை ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் பார்க்கின்றனர். இந்த நிலைக்கு கல்வியில் அவர் பெற்ற உயரம் கைகொடுத்திருக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பலாச்சோலை எனும் சிறிய கிராமமொன்றில் விதுர்ஷா வசித்து வருகின்றார்.

அவரின் அப்பா சாந்தலிங்கம் அம்மா புஷ்பலதா ஆகியோருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் விதுர்ஷா மூத்தவர்.

உடற்குறைபாடுகளுடனே விதுர்ஷா பிறந்ததாக அவரின் அம்மா கூறுகின்றார். விதுர்ஷாவின் தம்பியொருவரும் இவ்வாறு உடற் குறைபாடுகளுடன் பிறந்த நிலையில், கடந்த வருடம் அவரின் ஒன்பதாவது வயதில் காலமானார்.

உறவு முறைக்குள் திருமணம் செய்ததால் இவ்வாறு குழந்தைகள் பிறந்ததாக வைத்தியர்கள் கூறியதாக விதுர்ஷாவின் அம்மா சொல்கிறார். தனது சொந்த மாமாவின் மகனைத்தான் விதுர்ஷாவின் அம்மா புஷ்பலதா திருமணம் செய்துள்ளார்.

விதுர்ஷா உடற் குறைபாடுயுடையவராக உள்ளபோதிலும், படிப்பில் சிறந்து விளங்குகிறார். அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேசிய ரீதியில் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய விதுர்ஷா, அதில் சிறப்பாக சித்தியடைந்து, 12ஆம் வகுப்பு படிப்பதற்கு தகைமை பெற்றுள்ளார்.

இந்தச் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியமையை அடுத்து, தேசியளவில் விதுர்ஷா தற்போது அறியப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version