1915 ஜூலை 7 இந்நாட்டில் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை குறித்த நீதி விசாரணை நூற்றாண்டு கடந்து தற்போது மீள இடம்பெறவிருக்கிறது.

108 வருடங்களுக்கு முன் நிறைவேற்றபட்ட குறித்த் மரணதண்டனை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு நேற்றைய தினம் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மரண தண்டனை தொடர்பாக விசாரணை செய்யவும் தகவல்களை வெளிப்படுத்தவும் தொடர்புடைய விடயங்களை ஆய்வு செய்யவும் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதியை வழங்கவும் அமைச்சரவையில் பரிந்துரைகள் அடங்கிய

அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன தலைமையிலான மூவரடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொல்லபட்டவர் யார்? நூற்றாண்டு கடந்தும் நீதிகோரி நிற்கும் தேவை என்ன என்பது குறித்து அறிய வரவாற்றை பின்நோக்கிப்பார்ப்பது அவசியம் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைப் பணயம் வைத்து போராடிய பல மாவீரர்கள் உள்ளனர்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த அனைவரும் சுதந்திர நாட்டில் வாழ முடியவில்லை. காரணம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் காலனித்து ஆட்சியாளர்களால் பல்வே காரணங்களை குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொல்லப்பட்டனர். அப்படி கொல்லப்பட்ட ஒரு போராட்ட வீரர் ஹென்றி பெட்ரிஸ்.

யார் இந்த ஹென்றி பெட்ரிஸ்?

ஹென்றி பெட்ரிஸ் ஆகஸ்ட் 16, 1888இல் காலியில் மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார், டியூனுகே டிசான் பெட்ரிஸ் மற்றும் மல்லினோ பெர்னாண்டோ பெட்ரிஸ் ஆகியோரின் ஒரே மகனாக பிறந்த அவருக்கு நான்கு சகோதரிகள். பெட்ரிஸின் குடும்பம் நாட்டின் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக இருந்தது.

பெட்ரிஸ் முதலில் பெட்டாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொழும்பு அகாடமியில் (தற்போது ரோயல் கல்லூரி) பயின்றார். அங்கிருந்து செயின்ட் தோமஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விளையாட்டில் சிறந்து விளங்கிய அவர் பாடசாலையின் கிரிக்கெட் அணிக்காக விளையாடி நல்ல துடுப்பாட்ட வீரராக பிரகாசித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும் ரோயல் கல்லூரிக்குத் திரும்பினார்.

அங்கு அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடினார் மற்றும் பிற விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

பெட்ரிஸ் ஒரு நாள் தனது வணிக நிறுவனங்களை கையகப்படுத்தி வணிக உலகில் ஒரு தலைவராக மாறுவார் என்று அவரது தந்தை பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில தான் முதலாம் உலகப் போர் வெடித்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கை பாதுகாப்புப் படையைத் திரட்டியதுடன், கொழும்பைத் தாக்கினால் அதைக் காக்க தன்னார்வத் தொண்டர்களின் படைப்பிரிவை கொழும்பு நகரக் காவல்படையை உருவாக்கியது. துடிப்பான இளைஞராக இருந்த ஹென்றி பெட்ரிஸ் அந்த படைப்பிரிவில் இணைந்தார்.

அங்கு குறுகிய காலத்தில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக மாறினார். அவரது சிறந்த குதிரையேற்றத்தின் காரணமாக நிர்வாகப் பிரிவில் அதிகாரியானார்.

அபாரமான திறமை, எதிலும் அலாதியாக ஆர்வம்ரூபவ் நேர்மை, அறிவுத்திறன் என்ப ஒரு வருடத்துக்குள் அவரை கேப்டன் பதவிக்கு உயர்த்தியது. அவரது அபரிமிதமான வளர்ச்சி பலரை பொறாமை கொண்டு பார்க்க வைத்தது.

ஆங்கிலேய அதிகாரிகள் உட்பட உள்ளூர் பிரபுக்கள் செல்வந்தர்கள் அவரை வீழ்த்த தருணம் பார்த்துக் காத்திருந்தனர்.

1915 சிங்கள முஸ்லிம் கலவரம்

சிங்கள முஸ்லிம் கலவரம் (1915 கலவரம் என அறியப்படுகிறது) கண்டியில் ஒரு முஸ்லிம் குழு பௌத்த ஊர்வலத்தின் மீது கல் வீச்சு தாக்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் சிங்கள முஸ்லிம் கலவரம் வெடித்தது.

கொழும்பில் பெரும் அமைதின்மை ஏற்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் சேர் ரொபர்ட் சால்மர்ஸ், காலனித்துவத்தின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று அஞ்சினார் மற்றும் பிரிகேடியர் ஜெனரல் மால்கமின் ஆலோசனையின் பேரில், ஜூன் 2, 1915இல் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

கலகக்காரர் என்று கருதும் எவரையும் விசாரணையின்றி சுட்டுக்கொல்ல பொலிஸார் மற்றும் இராணுவத்துக்கு உத்தரவிட்டார். இவ்வாறு கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்ததாக கூறப்படுகிறது.

வன்முறைகள் அதிகரித்ததையடுத்து, கொழும்பில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நேரத்தில் கேப்டன் ஹென்றி பெட்ரிஸரூபவ் நகரத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்ததார். வெறுமனே அரசின் கட்டளையை நிறைவேற்றும் அதிகாரியாக செய்ற்படாமல் உண்மையான அமைதியை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினார்.

தனக்கான கடமையையும் அதிகாரத்தையும் பொறுப்போடும் தேசப்பற்றோடும் பயன்படுத்திய அவரால் நியாயமான பேச்சுவார்த்தைகள் மூலம் பல கலகக் குழுக்களை வெற்றிகரமாக கலைக்க முடிந்தது.

எனினும் பிரித்தானிய அதிகாரிகளும் சில பிரபுக்களும், ஹென்றி பெட்ரிஸின் நடவடிக்கைளில் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

ஹென்றி பெட்ரிஸ் அப்பாவி முஸ்லிம்கள் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பேலியகொட பகுதியிலிருந்து கொழும்பு நகருக்கு பேரணியாக செல்ல மக்களை தூண்டியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஹென்றி பெட்ரிஸ் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் வெளிப்படையான கிளர்ச்சிக்கு அஞ்சி, 80க்கும் மேற்பட்ட சிங்களத் தலைவர்களை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் டி.எஸ்.சேனாநாயக்க, டி.ஆர்.விஜேவர்தன, எட்வின் விஜேயரத்ன, கலாநிதி காசியஸ் பெரேரா, ஈ.டி.டி.சில்வா, எப்.ஆர். டயஸ் பண்டாரநாயக்க, எச். அமரசூரிய ஏ.எச்.மொலமுரே ஆகியோரும் அடங்குவர்.

1915ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி இராணுவ நீதிமன்றத்தால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஸ்லேவ் ஐலண்ட் (கொம்பனித்தெரு) மலாய் வீதியிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஃபீல்ட் ஜெனரல் கோர்ட் மார்ஷியல் முன் நிறுத்தப்பட்டார். கேப்டன் பெட்ரிஸ் மூன்று இராணுவ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு துரோகி என்று முத்திரை குத்தப்பட்டார். எந்த வித மேல்முறையீடும் இல்லாமல் 1915 ஜூலை 7 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இராணுவச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டதால், மரண தண்டனையை ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும். இருப்பினும், ஹென்றி பெட்ரிஸின் வழக்கு பிரிகேடியர் ஜெனரல் லீ மால்கத்தால் ஆளுநரிடம் அறிவிக்கப்படவில்லை.

அவரது தண்டனையைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அதற்கு அப்போதைய தலைமை நீதிபதி சேர் அலெக்சாண்டர் வூட் ரெண்டன் மற்றும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அனுமதியை மறுத்தது.

பிரிட்டிஷ் மற்றும் இலங்கையர்கள் உட்பட பல முக்கிய குடிமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். ஹென்றி பெட்ரிஸ் தேசத்துரோகி அல்ல, அப்போதைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தின் விளைவாகவே இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என உறுதிப்படுத்தும் முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. ஹென்றி பெட்ரிஸுக்கான நீதி மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது என்ற கருத்து வரலாற்றாசிரியர்களால் முன்வைக்கப்படுகிறது.

மரண தண்டனைக்கு எதிர்ப்பு

ஹென்றி பெட்ரிஸின் மரண தண்டனை நாடு முழுவதும் பொரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணியாக வந்தனர். அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் மக்கள் பேரணியை பிரிட்டிஷ் படைகளை கொண்டு தடுத்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஹென்றி பெட்ரிஸின் உடல் அவரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு தேசத்துரோகியை அடக்கம் செய்யும் இராணுவ பாரம்பரியத்தின்படி, அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் புதைக்கப்பட்டது.

பின்னர், 1987ஆம் ஆண்டில் ஹென்றி பெட்ரிஸின் சந்தேகத்துக்கிடமான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் எச்சங்கள் அவருடையது என சரிபார்க்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.

ஹென்றி பெட்ரிஸின் மரணம், சுதந்திர இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற மற்றைய இலங்கைத் தலைவர்களுக்கும் மரணதண்டனைக்குப் பிறகும் ஒரு எச்சரிக்கையாக இருந்தது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது பெட்ரீஸ் அமர்ந்திருந்த இரத்தம் தோய்ந்த நாற்காலி, டி.எஸ்.சேனநாயக்க உட்பட பல சிங்களத் தலைவர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு ‘அடுத்தது நீங்கள்’ என்ற எச்சரிக்கையுடன் அவர்களுக்குக் காட்டப்பட்டது.

பெட்ரிஸின் மரணம் இலங்கை சுதந்திர இயக்கத்தின் தொடக்கத்துக்கு வித்திட்டது. குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் அதில் பங்கு வகித்தனர். அவர்களின் நடவடிக்கையின் விளைவாக 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.

1916ஆம் ஆண்டில் ஹென்றி பெட்ரிஸின் தந்தை டி.டி. பெட்ரிஸ் கொல்லப்பட்ட தனது மகனின் நினைவாக கொழும்பு, ஹெவ்லாக் டவுனில் இசிபதனாராமய ஆலயத்தைக் கட்டினார். ஹென்றி பெட்ரிஸின் இரண்டு சிலைகள்

ஹெவ்லாக் டவுன் மற்றும் அவரது சொந்த ஊரான காலியில் நிறுவப்பட்டுள்ளன.

எனவே, ஜூலை 7, 1987இல் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது. பெட்ரிஸின்

தாயார் மல்லினோ பெட்ரிஸ் தனது மகனின் நினைவாக 1920ஆம் ஆண்டு தெமட்டகொடையில் உள்ள மல்லிகாராம ஆலயத்திற்காக காணியை அன்பளிப்பாக வழங்கினார்.

27 வயதில் நாட்டுக்கான போராடி தேசத்துரோகி என்ற பெயரோடு மரணத்தை தழுவிய 27 ஹென்றி பெட்ரிஸின் மரணம் தொடர்பான விசாரணை 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீளவும் நடத்தப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த பிரேரணையின் அடிப்படையில் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பெட்றிஸின் மரணம் தொடர்பான உண்மைத் தகவல்களைக் கண்டறிந்து அமைச்சரவையில் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. காலம் தவறியிருந்தாலும் நீதி தவறுவதில்லை.

Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version