எங்கிருந்தாலும் அவர் தன் நாட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரது கட்டளைப்படி அங்கு தினசரி நிகழ்ச்சிகள் நடந்தன. அபு அம்மார் என்ற புனைப்பெயர் வைத்துக்கொண்டு இடையில் மூன்று தடவை ரகசியமாக பாலஸ்தீனம் வந்துபோனார் அராபத்.
2004 நவம்பர்… பாரீஸின் பெர்ஸி ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் கோமாவில் இருந்தார் 75 வயது யாசர் அராபத். வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தில் அவர் இருக்க, வாசலில் அவருக்காக பிரார்த்தனை செய்தபடி இருந்த இளைஞர் ஒருவர் இப்படிச் சொன்னார்.
‘‘கடந்த நூற்றாண்டு மூன்று தேசப்பிதாக்களை உலகத்துக்குத் தந்தது. அவர்களில் மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவை தன் மரணத்துக்கு முன்பு பார்த்துவிட்டார்.
மண்டேலாவின் கனவு நிஜமாகி கறுப்பினத்தவர்கள் தென்னாப்பிரிக்காவை ஆள்கிறார்கள். அராபத்தின் பாலஸ்தீனக் கனவு நிராசையாகவே முடிந்துவிடும் போலிருக்கிறது.’’
இந்த மனிதர்களின் வருகைக்கு முன்பும் அவர்களது நாடுகள் இருந்தன. காந்தியும், மண்டேலாவும் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் தங்கள் மக்களுக்கு மீட்டுத் தந்தார்கள்.
அவர்களது அகிம்சை ஆயுதமும், மனஉறுதியும் ஆதிக்க சக்திகளை தலைவணங்க வைத்தது.
ஆனால் அராபத்தின் கதை வேறு! இஸ்ரேல் என்ற முரட்டுப் பிடிவாத மலையில் அவர் வெறுந்தலையோடு முட்ட வேண்டி நேர்ந்தது.
சமாதான ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பாலஸ்தீன சுயாட்சி அரசின் அதிபராக அவர் இருந்து, நோபல் பரிசையெல்லாம் வாங்கிய கடைசி காலத்தில் அவர் மனம் வெறுத்து இப்படிச் சொன்னார்: ‘‘பெயரளவில் நான் பாலஸ்தீனத்துக்கு அதிபர். சொந்தமாக ஒரு பிடி நிலம் கிடையாது. ஆள்வதற்கு நாடு கிடையாது. கௌரவம் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது.’’
‘மேற்கு ஆசியப் பிரச்னை’ என ஒற்றை வரியில் உலகம் முழுக்கச் சொல்லப்படும் பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டம் இஸ்ரேல் உருவான 1948-ல் தொடங்கி இப்போது வரை தொடர்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் என உலகின் வல்லரசுகள் எல்லாம் இஸ்ரேல் பக்கமிருந்தாலும் இந்த விடுதலை வேட்கையை நசுக்க முடியாதபடி அவர்களுக்கு ஒரே தடைக்கல் அராபத்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையின் சந்தோஷங்கள் என்று அவருக்கு எதுவும் கிடையாது. நண்பர்கள் கிடையாது.
கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குப் போவது கிடையாது. புத்தகங்கள் படித்தது கிடையாது. குடும்பத்தோடு செலவிட நேரமில்லை.
அவரது தாடி பற்றி நிருபர் ஒருவர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், ‘‘எனக்கு ஷேவ் செய்யக்கூட நேரமில்லை. என் நாட்டுப் பிரச்னைகள் என்னை பிஸியாக வைத்திருக்கின்றன.’’ மரணத்துக்குப் பிறகே அவர் பாலஸ்தீனத்தை மனதளவில் பிரிந்தார்.
முகம்மது அப்துல் ரகுமான் அப்துல் ரவூஃப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்ற நீளமான பெயர் கொண்ட யாசர் அராபத் 1929-ம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலஸ்தீன பெற்றோருக்குப் பிறந்தார்.
அவர் அப்பா ஜவுளி வியாபாரி. அவர் பெரிதும் நேசித்த அம்மா நான்கு வயதிலேயே இறந்துவிட, ஜெருசலேமில் இருக்கும் தாய்மாமன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலஸ்தீனத்தில் அவர் கால்பதித்தது அப்போதுதான்.
யாசர் அராபத்
அப்போது பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் பாலஸ்தீனம் இருந்தது. ஒருநாள் பிரிட்டிஷ் ராணுவம் அவரது மாமா வீட்டுக்குள் புகுந்து எல்லோரையும் அடித்து சித்திரவதை செய்து, வீட்டிலிருந்த சாமான்களை நொறுக்கிவிட்டுப் போனது.
இது அராபத்தின் இளம்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அடுத்த நாள் அக்கம்பக்கத்து சிறுவர்களை சேர்த்துக்கொண்டு அவர் மிலிட்டரி விளையாட்டு விளையாடினான். சிறுவர்கள் அணிவகுப்பு நடத்தி பிரிட்டிஷ் படைகளைத் தாக்குகிற மாதிரி விளையாட்டு. கையில் பிரம்பு வைத்துக்கொண்டு தன் படைகளை ஒழுங்குபடுத்திய அராபத்தை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
கெய்ரோ பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படிக்கச் சேர்ந்தார் அராபத். பாலஸ்தீன மாணவர்கள் நிறைய பேர் அங்கு படித்தனர்.
அந்த மாணவர்களைச் சேர்த்து அமைப்பு ஆரம்பித்து அதற்கு தலைவர் ஆனதுதான் அவரது அரசியல் வாழ்க்கையில் முதல் படி. அப்போதே பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அரபுப் போராளிகளுக்கு ஆயுதங்கள் கடத்திச் சென்று கொடுத்தார் அவர்.
1948-ல் இஸ்ரேல் உருவானபோது அரபு நாடுகள் கூட்டணி சேர்ந்து அதன்மீது போர் தொடுத்தன.
எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்பில் சேர்ந்து, 19 வயது இளைஞராக அராபத் அதில் பங்கேற்றார்.
அந்தப் போரில் இஸ்ரேல் வென்றது. விரக்தி அடைந்த அராபத், கெய்ரோ போய் படிப்பை முடித்துவிட்டு குவைத் பொதுப்பணித்துறையில் இன்ஜினீயராக சேர்ந்தார்.
கொஞ்ச நாளில் அங்கேயே கான்டிராக்டர் ஆகி நிறைய சம்பாதித்தார் அங்கிருந்த பாலஸ்தீன இளைஞர்க்ளை ஒருங்கிணைத்து ஃபதா அமைப்பை ஆரம்பித்தார். இப்போது பாலஸ்தீன சுயாட்சி அரசை அந்தக் கட்சியே ஆள்கிறது.
ஆரம்பத்தில் அவரது பாதை தீவிரவாதம்தான். ஃபதா அமைப்பை 1959-ல் ஆரம்பிக்கும்போது இஸ்ரேல் என்ற நாட்டையே அழிக்கும் வெறி இருந்தது.
இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கொரில்லா தாக்குதல்கள், விமானக்கடத்தல்கள், முக்கிய அலுவலகங்களில் குண்டு வைப்பது என இந்த அமைப்பு தாக்குதல்கள் நடத்தியபடி இருந்தது.
அந்த நாட்களில் பல்வேறு அரபு நாடுகளும், பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்களுக்கு உதவிகள் செய்தன.
அதனால் அங்கு நிறைய குழுக்கள் இருந்தன. அராபத் இந்தப் பாதையை நிராகரித்தார். ஏதோ ஒரு நாட்டின் உதவியைப் பெற்றால், அந்த நாட்டு அரசின் கட்டளைப்படி செயல்பட வேண்டியிருக்கும் என்று தயங்கினார். வெளிநாடுகளில் வசிக்கும் பாலஸ்தீன செல்வந்தர்களின் உதவியைப் பெற்று அமைப்பை வளர்த்தார்.
ஐந்து ஆண்டுகளில் இந்த அமைப்பு கணிசமான செல்வாக்கு பெற்றபிறகு ஒரு போர் வந்தது.
அப்போது ஜோர்டான் நாட்டின் கராமே அகதிகள் முகாமில் இருந்தபடி அராபத்தின் அமைப்பு செயல்பட்டது.
இஸ்ரேல் ராணுவம் அவர்களைத் தாக்க வந்தபோது, ‘பின்வாங்கி ஓடுங்கள்’ என்று ஜோர்டான் ராணுவத் தளபதி அவருக்கு யோசனை சொன்னார்.
‘‘பாலஸ்தீனர்கள் பின்வாங்கி ஓடாமல் துணிச்சலுடன் நின்று போர் செய்வார்கள் என்று இந்த உலகத்துக்குக் காட்ட விரும்புகிறேன்’’ என்று பதில் சொன்னார் அராபத். துணிச்சலுடன் போரிட்ட அவரது வீரர்கள், இஸ்ரேல் ராணுவத்துக்குப் பேரிழப்பை
ஏற்படுத்தினர். அதைப் பார்த்து ஜோர்டான் ராணுவமும் அவர்களுக்கு உதவியது.
பாலஸ்தீனத்தில் இயங்கும் பல்வேறு விடுதலைக் குழுக்களையும் இணைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற பொது அமைப்பு உருவாகியிருந்தது.
அதில் அராபத் அமைப்பும் இருந்தது. அதுவரை சாதாரண உறுப்பினராக இருந்த அராபத்தை இந்தத் தாக்குதலுக்குப் பிறகு தலைவராக ஏற்றது பாலஸ்தீன விடுதலை இயக்கம். தன் மரணம் வரை இதன் தலைவராக அவர் செயல்பட்டார்.
பெரிய அளவில் ராணுவத்தை உருவாக்கினார்… அதன் தளபதி அராபத். தன் நாட்டுக்குள்ளே ஒரு தனி படையோடு அராபத் வலம்வருவது ஜோர்டான் மன்னர் ஹுஸைனுக்கு உறுத்தலாக இருந்தது. அராபத் மீது அரபு சகோதர நாடு என்ற பாசம் இருந்தாலும் தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் அவரை வெளியேற்றினார்.
அராபத் அங்கிருந்து லெபனான் போனார். லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்து நெருக்கடி கொடுக்க, அங்கிருந்தும் வெளியேற நேர்ந்தது. சிரியாவில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு, அப்புறம் ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் அடைக்கலம் புகுந்தார் அவர்.
ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியைத் தோற்றுவித்த பிம் சிங்குடன் சிரியாவில் யாசர் அராபத் (1970களில்…)
எங்கிருந்தாலும் அவர் தன் நாட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரது கட்டளைப்படி அங்கு தினசரி நிகழ்ச்சிகள் நடந்தன. அபு அம்மார் என்ற புனைப்பெயர் வைத்துக்கொண்டு இடையில் மூன்று தடவை ரகசியமாக பாலஸ்தீனம் வந்துபோனார் அவர்.
இஸ்ரேல் உளவுப்படை பாலஸ்தீன தலைவர்கள் பலரை ரகசியமாகத் தாக்கி கொன்றிருக்கிறது. ஆனால் நாற்பது தடவைகள் முயற்சி செய்தும் அராபத் தப்பித்துவிட்டார்.
யாரையுமே அவர் நம்ப மாட்டார். தன் மெய்க்காப்பாளர்களைக் கூட அடிக்கடி மாற்றுவார். ஒவ்வொரு நாளும் அவர் எங்கே தங்குவார் என்பது யாருக்குமே தெரியாது.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் தூங்க மாட்டார். விமானப் பயணத்தைக் கூட கடைசி நேரத்தில் முடிவு செய்து, அவசரமாக ஏர்போர்ட்டுக்கு போவார்.
92-ம் ஆண்டு அவர் பயணம் செய்த விமானம் லிபிய பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. அதிசயமாக அவர் தப்பித்தார்.
தலைக்குள் ரத்தம் கட்டிக்கொள்ள ஆபரேஷன் செய்து அதை அகற்றினார்கள். அதன் விளைவாக அதன்பிறகு அவருக்கு பக்கவாதம் வந்தது. தன் அபார மன உறுதியால் அவர் எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டார்.
அந்த நாட்களில் யூதர்கள் பகுதியில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் ஏதாவது தாக்குதல் நடத்தி சிலரைக் கொல்வார்கள். பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தும்.
இது தொடர்கதையாக ஆனது. 1972-ல் மியூனிச் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது ஒலிம்பிக் கிராமத்தில் புகுந்த பாலஸ்தீன தீவிரவாதிகள், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் நான்கு பேரைக் கொன்று, வேறு சிலரைக் கடத்திச் செல்லவும் முயன்றனர்.
பாதுகாப்புப்படை தீவிரவாதிகளோடு தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றது. உலகையே அதிரவைத்த இந்த தாக்குதல், ‘இனிமேலும் பாலஸ்தீன விவகாரத்தை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்ற கசப்பான நிஜத்தை உலக நாடுகளுக்கு அறிவித்தது.
ஐ.நா பொதுச்சபையில் பேச அராபத் அழைக்கப்பட்டார். அவருக்குள் வசியம் செய்யும் ஒரு பேச்சாளர் இருந்தார். உருக்கமாக அவர் அங்கு வேண்டினார்.
‘‘ஒரு கையில் சமாதானத்துக்கான ஆலிவ் இலையும், இன்னொரு கையில் விடுதலைப் போராளிக்கான துப்பாக்கியும் ஏந்தி வந்திருக்கிறேன். என் கையிலிருக்கும் ஆலிவ் இலையைக் கீழே போட வைக்காதீர்கள்.’’
1993-ல் பில் கிளிண்டனுடன் யாசர் அராபத்
உலகின் எந்த மூலையில் பிரச்னை வந்தாலும் சமாதானக் கொடி பிடிக்கும் நார்வே நாடு தான் இந்த பிரச்னையிலும் சமாதான பேச்சுக்களைத் துவக்கி வைத்தது.
93-ம் ஆண்டு இஸ்ரேல் அதிபர் இஷாக் ராபின், முஸ்லிம்கள் அதிகம் வாழும் மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளை பாலஸ்தீன சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க, அவரோடு முதல்தடவையாக கைகுலுக்கி அதை ஏற்றார் அராபத்.
நோபல் பரிசு அவர்களைத் தேடி வந்தது. பாலஸ்தீனத்தின் முதல் அதிபர் ஆனார் அராபத். இஸ்ரேல் நாட்டுக்கு உட்பட்ட சுயாட்சி பிரதேசமாக அது இருந்தது. முறையாக தேர்தல் நடத்தப்பட்டு அதிலும் அராபத் ஜெயித்தார்.
ஆனால், பாலஸ்தீனர்கள் அதன்பின்னும் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஜெருசலேம் நகரை உரிமை கொண்டாடினார் அராபத். ஆனால், இஸ்ரேல் அதை நிராகரித்தது. அத்துடன் ‘வெளிநாடுகளில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் திரும்பவும் நாட்டுக்குள் வரக்கூடாது… அவர்களுக்காக கூடுதலாக இடத்தையும் கேட்கக்கூடாது’ என்றது. அதனால் அராபத் சமாதானப் பேச்சுக்களை முறித்துக் கொண்டார்.
Also Read
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் 7: ஹமாஸ் இயக்கத்தின் ரத்த வரலாறு!
அதன்பின் அவர்பட்ட அவமானங்கள் அதிகம். மேற்குக் கரையில் இருக்கும் ரமல்லா நகர் அவருக்கு தலைநகரம். அங்கே அதிபர் மாளிகை இருக்கிறது.
அதை இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் சூழ்ந்துகொண்டு நொறுக்கின. சில அறைகள் மட்டுமே மிஞ்சின. மின்சாரம் கிடையாது. ‘எங்காவது வெளிநாட்டுக்கு போய்விடுங்கள். உயிர்ப்பிச்சை தருகிறோ தருகிறோம். ஆனால் திரும்ப இங்கே வரக்கூடாது’ என்றது இஸ்ரேல்.
ஆனால் முற்றுகைக்கு நடுவே தனது மக்களோடு சேர்ந்து வாழ்ந்தார் அவர். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வேலைபார்த்தார். தண்ணீர் கிடையாது… அவசரத் தேவைக்கு மருந்துகள் கிடையாது. நல்ல சாப்பாடு கிடையாது. எந்த நேரத்தில் எங்கிருந்து குண்டுவிழுந்து மடிந்து போவோமோ என்ற பயத்தோடு நகரும் வாழ்க்கை!
மூன்றரை ஆண்டுகளாக முற்றுகையில் இருந்த அராபத்துக்கு இறுதிக்காலத்தில் சிகிச்சை பெற மட்டுமே மனிதாபிமான அடிப்படையில் பிரான்ஸ் செல்ல அனுமதித்தது இஸ்ரேல்.
அராபத் மரணப்படுக்கையில் இருந்த நேரத்தில் இஸ்ரேலில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ‘அராபத் சாகவேண்டும்’ என முக்கால்வாசி யூதர்கள் கருத்து தெரிவித்தனர்.
யாசர் அராபத்தின் தற்காலிக நினைவிடம் – ரமல்லா
தான் மறைந்தபிறகு ஜெருசலேம் நகரில் இருக்கும் அல்-அக்ஸா மசூதி அருகே புதைக்கப்பட வேண்டும் என்று அராபத் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இஸ்ரேல் அதற்கு சம்மதிக்கவில்லை. ஜெருசலேம் நகர்மீது பாலஸ்தீனர்கள் உரிமை கொண்டாடுவதை இது வலுவாக்கிவிடும் என்று அஞ்சியது.
கடைசியில் ரமல்லா நகரில் அவர் புதைக்கப்பட்டார். ‘சுதந்திர பாலஸ்தீனம் அமைந்ததும், அவர் மீண்டும் ஜெருசலேமில் புதைக்கப்படுவார்’ என்று பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது.
சுயாட்சி அரசு அமைந்தபிறகு அராபத் ஊழல் செய்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டி அவர் இமேஜைக் குலைக்க முயன்றது.
‘முழு விடுதலை என்ற இலக்கைக் கைவிட்டு இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொண்டு பாலஸ்தீன மக்களுக்குத் துரோகம் செய்தார்’ என்று போட்டி அமைப்புகள் குற்றம் சாட்டின. என்றாலும், பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் யாசர் அராபத்தின் பங்கை யாராலும் நிராகரிக்க முடியாது.
சரி, இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் இஸ்ரேல் எப்படி ஜீவித்திருக்கிறது?