குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது.

இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடி கொண்டிருக்கிறது.

திருநெல்வேலியில் நிரம்பி வழியும் அணைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது.

இதனால் இங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நீடித்து வரும் கனமழையால் பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீர் வந்துள்ளது.

அதேபோல் மாஞ்சோலை மலைப்பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து 17,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணை 143 அடி கொள்ளவு மட்டுமே என்பதால் ஏற்கனவே அது 85 சதவீதம் நிரம்பிய நிலையில் விரைவில் அது நிறைய வாய்ப்புள்ளது.

எனவே பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து வெறும் 3000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் தற்போது வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருநெல்வேலி நகரம்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர், பெருமாள்புரம், என் ஜி ஓ காலனி போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மேலும் திருநெல்வேலி டவுன், களக்காடு, திசையன்விளை பகுதியில் உடன்குடி சாலை, நேருஜி கலையரங்கம் மற்றும் செட்டிகுளம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீனவர்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது

தூத்துக்குடி சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகு மீனவர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகு மீனவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் மழைநீரோடு கழிவுநீர் கலந்துள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காலையிலிருந்து பெய்த தொடரும் கனமழையின் காரணமாக திருவேங்கடம் சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வெள்ளப்பெருக்கு போல் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில் நிலைமை என்ன?

கூடங்குளம் பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், கூடங்குளம் அனு விஜய் நகரியம் வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.

இந்த பகுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

சனிக்கிழமையன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், ஞாயிறு(இன்று) அன்று பெய்த கனமழையால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுத்துள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 18ம் தேதியன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் அடிப்படை தேவைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு இயங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழை

சமீபத்தில் சென்னையில் பெய்த மழையே வரலாறு காணாத மழை என்று வானிலை நிபுணர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது பாளையங்கோட்டையில் 4.30 மணிநேர நிலவரப்படி 26செமீ மழை பெய்துள்ளது. இதுவே 29ஐ தாண்டினால் கடந்த 150 வருடங்களில் இந்த பகுதியில் பெய்த அதிகமான மழை இதுவே என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வானிலை நிபுணர் பிரதீப்.

தென்மாவட்டங்களுக்கு விரைந்த மீட்புக்குழு

கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மற்றும் தென்காசிக்கு தேசிய பேரிடர் மீட்புகுழு விரைந்துள்ளது. என்டிஆர்ஃஎப் சார்பில் ஒரு அணிக்கு 25 பேர் என்ற கணக்கில் 4 அணிகள் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு சென்றுள்ள அணியே திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி மருந்துகள், படகுகள், இயந்திரங்கள் என தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மக்களை தங்க வைக்கும் முகாம்கள், மீட்பு பணிகள் மற்றும் தேவையான அவசர பணிகளை தயார் படுத்தி வருகின்றனர்.
2 நாட்களில் 50 செ.மீ. மழை பெய்யும் என எச்சரிக்கை

தற்போது பெய்யும் மழை கனமழை முதல் அதிகனமழையாக தொடரும் என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அரசு நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த மழை இன்னும் அதி கனமழையாக உருவாகும் என்றும் செவ்வாய்க் கிழமைதான் இதன் வேகம் குறையும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப். அடுத்த 48 மணி நேரத்திற்கு 30 முதல் 50 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version