தாம்பரம் அருகே மனைவியைக் கொலைசெய்த குற்றத்துக்காக, கணவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கூத்தனூர் பகுதியில், அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக்கிறது. இங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைலாஷ் (30), அவரின் மனைவி பிரியங்கா குமாரி (25) ஆகியோர் வந்தனர்.
இவர்களோடு பிரியங்காவின் அக்காளும், அவரின் கணவரும் வந்து, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்திலேயே தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது பிரியங்கா தலையில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடந்தார்.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியங்காவின் உறவினர்கள், உடனடியாக மணிமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர்.
பின்னர் பிரியங்காவின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரியங்கா கொலைசெய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து மணிமங்கலம் போலீஸார் பேசுகையில், “பிரியங்கா கொலைசெய்யப்பட்ட பிறகு அவரின் கணவர் பிரதீஷ் மாயமாகியிருந்தார். அதனால் அவர்மீது எங்களுக்குச் சந்தேகம் எழுந்தது.
உடனடியாக அவரின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தோம். அப்போது அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தன்னுடைய சொந்த மாநிலத்துக்குச் செல்ல ரயிலுக்காகக் காத்திருந்தார்.
உடனடியாக அங்கு சென்று அவரைப் பிடித்து விசாரணைக்காக மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தோம்.
சம்பவத்தன்று பிரியங்காவுக்கும் பிரதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திமடைந்த பிரதீஷ், பிரியங்காவின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலைசெய்துவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
பிரதீஷ் அளித்த தகவலின்படி அவர்மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம். பிரியங்கா கொலைசெய்யப்பட்ட தகவலை அவரின் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்.
இந்தச் சம்பவத்தில் பிரியங்கா உயிரிழந்துவிட்டார். அவரின் கணவர் பிரதீஷ் சிறைக்குச் செல்லவிருக்கிறார்.
அதனால் இவர்களின் மூன்று குழந்தைகளும் ஆதரவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த மூன்று குழந்தைகளையும் பிரியங்காவின் உறவினர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு பிரதீஷைக் கைதுசெய்து, சிறையில் அடைக்கவிருக்கிறோம்” என்றனர்.