தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3,200 குடும்பங்ளைச் சேர்ந்த 10,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் மாத்திரம் 1,708 குடும்பங்களைச் சேர்ந்த 5,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் 863 குடும்பங்களைச் சேர்ந்த 3,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை தங்கவைக்கும் நோக்கில் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்காக வட மாகாணத்தின் 16 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் ஒரு பாடசாலையும் அடங்கலாக 16 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.