தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர் – தாடி வைத்துள்ளமையைக் காரணம் காட்டி, ‘அவர் கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியாது’ என, அந்தப் பல்கலைக் கழகம் அண்மையில் தடை விதித்தது.

இதனையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் ‘ரிட்’ (WRIT) மனு ஒன்றை ஸஹ்றி தாக்கல் செய்தார். குறித்த வழக்கு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிராக மாணவர் கோரிய இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களான மணிகண்டு திருக்குமார், கவுரியல் எலியாஸ் கருணாகரன் ஆகியோரும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேற்படி மாணவர் – தாடி வைத்துள்ள ஒரே காரணத்துக்காக, வைத்தியசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், விரிவுரைகளில் கலந்து கொள்வதையும் பிரதிவாதிகள் தடுத்ததாகவும், குறித்த மாணவரின் அடிப்படை மற்றும் மனித உரிமைகைள் இவ்விடயத்தில் மீறப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மேலும், மாணவர் ஸஹ்றியின் கலாசார அடையாளமான தாடியை வைத்துக் கொள்வதற்கு பிரதிவாதிகள் தடையை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதே போன்று தாடி வைத்திருந்தமையினால் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இன்னொரு மாணவரும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக – ஏற்கனவே வழக்கு ஒன்றைத் தொடர்ந்து, இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ள நிலையில், தாடி வைத்திருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிவாதிகள் தடுத்துள்ளமையினையும் நீதிமன்றின் கவனத்துக்கு சட்டத்தரணிகள் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து மாணவர் ஸஹ்றி – வைத்திய சாலையில் நடைபெறும் பயிற்சிகளில் பங்கு பற்றுவதையும், கள விஜயங்கள் செல்வதையும், பரீட்சைகளில் தோற்றுவதையும் தடுப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவினை வழங்கியுள்ளது.

என்ன நடந்தது? – மாணவர் ஸஹ்றி விளக்கம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சுகாதார- பராமரிப்பு அறிவியல் பீடத்தின் கீழ் மருத்துவப் படிப்பு உள்ளது. இதற்குப் பொறுப்பான பீடாதிபதி ரி. சதானந்தன். இவர்தான், தனது பீடத்தில் கற்கும் மாணவர்கள் தாடி வைக்கக் கூடாது என்கிற நெறிமுறையொன்றினை முதலில் கொண்டு வந்ததாக – மாணவர் ஸஹ்றி கூறுகின்றார்.

“அவ்வாறான தீர்மானமொன்றை எடுப்பதென்றால் பல்கலைக்கழக மூதவை (Senate) மற்றும் பேரவை (Council) ஆகியவற்றின் ஒப்புதல்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த ஒப்புதலையும் பெறாமலேயே, தாடி வைக்கக் கூடாது என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என அவர் குறிப்பிட்டார்.

ஒரு தடவை பல்கலைக்கழக நிகழ்வொன்றில் தான் கலந்து கொண்ட போது, தாடி வைத்திருப்பதைக் காரணம் காட்டி, தன்னை பீடாதிபதி சதானந்தன், அங்கிருந்து விரட்டியதாகவும் பிபிசி தமிழிடம் ஸஹ்றி கூறினார்.

அதன் பின்னர் இம்மாதம் 04ஆம் தேதி மீண்டும் அந்தப் பிரச்சினை ஆரம்பித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

” மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் களக் கற்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன். பேராசிரியர் திருக்குமரன் மற்றும் பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் அந்தக் கற்கைக்கு பொறுப்பானவர்கள்.

அங்கு பேராசிரியர் திருக்குமாரின் விரிவுரை ஆரம்பமானது. தொப்பி மற்றும் ‘மாஸ்க்’ அணிந்து – தாடியுடன் நான் அந்த விரிவுரைக்குச் சென்றிருந்தேன். அப்போது பேராசிரியர் திருக்குமார் என்னை தொப்பியை கழற்றுமாறு கூறினார். பின்னர் ‘மாஸ்க்’கையும் அகற்றச் சொன்னார். பிறகு, ‘தாடிடன் தனது விரிவுரை வகுப்புகளுக்கு வர முடியாது’ என்று கூறிய அவர், ‘தாடி, மீசையை மழித்துக் கொண்டுதான் நாளை நீங்கள் வரவெண்டும். இல்லையென்றால் உங்கள் எம்.பி.பிஎஸ் (MBBS) படிப்புக்கு விடைகொடுக்க வேண்டிவரும்’ என்று சொன்னார்” என, ஸஹ்றி தெரிவிக்கின்றார்.

பின்னர் ஏனைய மாணவர்கள் ‘வார்ட்’ (Ward) க்கு சென்றதாகவும், தன்னை வீட்டுக்குச் சென்று, அவர் கூறியபடி தாடியில்லாமல் நாளை வருமாறும் பேராசியர் திருக்குமார் அறிவுறுத்தியதாகவும் ஸஹ்றி குறிப்பிடுகின்றார்.

”ஆனாலும், நான் அவரின் பின்னால் சென்று, விரிவுரை வகுப்புகளுக்கு என்னை அனுமதிக்குமாறு கேட்டேன். மத நம்பிக்கையின் அடிப்படையில் நீண்ட காலமாக நான் தாடி வைத்துள்ளதை விளக்கினேன். ஆனால், அவர் முடியாது என்று கூறிவிட்டார்”.

பிறகு மறுநாளும் அதற்கு மறுநாளும் பேராசிரியர் திருக்குமாரைச் சந்தித்து தாடியுடன் அவரின் விரிவுரை வகுப்புகளில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் ஸஹ்றி கூறினார்.

இதனையடுத்து 07ஆம் தேதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் சென்று – இது தொடர்பில் ஸஹ்றி முறைப்பாடு செய்தார்.

அதனையடுத்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவித் தவிசாளர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து, பல்கலைக்கழகப் பீடாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பில் தான் பேசியுள்ளதாகவும், பீடாதிபதியைச் சந்திக்குமாறும் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

”அதன்படி 08ஆம் தேதி பல்கலைக் கழகம் சென்று எமது பீடாதிபதி ரி. சச்சிதானந்தனைச் சந்தித்தேன். அவர் நிறையப் பேசினார். பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவித் தவிசாளர் இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என்றார். மேலும், பல்கலைக்கழகத்துக்கு வெளியில் – வைத்திய சாலையில் விரிவுரைகள் மற்றும் பயிற்சிகளை நடத்தும் பேராசிரியர்கள் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

‘முன்னரும் நுஸைஃப் எனும் மாணவருக்கு – தாடி வைக்கக் கூடாது என்று பல்கலைக் கழகம் கூறியது. அதற்கு எதிராக அவர் நீதிமன்றம் சென்று தடையுத்தரவைப் பெற்றார். தேவையானால் அதுபோன்று நீங்களும் முயற்சிக்கலாம்’ எனவும் பீடாதிபதி கூறினார்” என ஸஹ்றி குறிப்பிட்டார்.

இதன் பின்னர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடந்த ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக ஸஹ்றி சென்று, அங்கிருந்த பேராசிரியர் கருணாகரனுடன் பேசியுள்ளார். அதன்போது அவருடம் – தாடியுடன் அனுமதிக்க முடியாது என கூறி விட்டதாக, பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

இதன் பிறகுதான் நீதிமன்றம் சென்று, தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டுள்ளார் ஸஹ்றி.

Share.
Leave A Reply

Exit mobile version