இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் ‘யுக்திய’ என்ற பெயரில் விசேட சோதனை நடவடிக்கைகளை இலங்கை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
இடைக்கால போலீஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவியேற்று, ஓரிரு தினங்களிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு தழுவிய ரீதியில் போலீஸார் 24 மணிநேர சோதனைகளை நடாத்தி வருகின்றனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக, இதுவரை 8,000-திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிழல் உலக கோஷ்டிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளின் போது, எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார்.
”பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் போலீஸார் மற்றும் முப்படைகளுடன் இணைந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள். நாடு தற்போது யுத்தத்திற்கு சமமாக ஒரு நிலைமையையே எதிர்நோக்கியுள்ளது. பேசிக் கொண்டு மாத்திரம் இருக்காது, இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்தியுள்ளோம்,” என்கிறார் டிரான் அலஸ்.
மேலும், “இந்த உண்மையான தேடுதல் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமக்கு கிடைக்கும் அனைத்து விதமான தகவல்கள் குறித்தும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்,” என அவர் கூறுகின்றார்.
”தமது குழந்தைகள், குடும்பம் தொடர்பில் சிந்தித்து, இந்த பேரழிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு போலீஸாரிடத்திலிருந்து எந்தவித மன்னிப்பும் கிடையாது.
சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் தொடர்பிலும் இவ்வாறான நடவடிக்கைகளே எடுக்கப்படும். போலீஸாருக்கு எதிராகவோ அல்லது வேறு ஏதேனும் குற்றங்களுக்காக அந்த ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு முன்னதாகவே போலீஸார் தமது ஆயுதங்களை பயன்படுத்த வேண்டி ஏற்படும்,” என்கிறார் அவர்.
“இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடக்கும். தமது குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் என குடும்பத்தின் மீது அன்பு கொண்ட அனைவரும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்,” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார்.
நாட்டில் நிலைக்கொண்டுள்ள குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் ‘யுக்திய’ என்ற பெயரில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய, கடந்த சில நாட்களாக 24 மணிநேர தொடர் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளின் ஊடாக, இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாங்களில் மாத்திரம் 2,008 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், யுக்திய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 17-ஆம் தேதி முதல் நேற்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த காலப் பகுதி வரை 6,583 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், மேலும் பல சந்தேக நபர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குழுக்களுக்கு சொந்தமான சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
பேருந்துகள், கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், வீடுகள், தங்காபரணங்கள், பணம் உள்ளிட்ட சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதுடன், இந்த சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் வலையமைப்பை வீழ்த்துவதே, போலீஸ் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தேடுதல் நடவடிக்கைகளின் நோக்கம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
”இந்த யுக்திய தேடுதல் நடவடிக்கை கடந்த 17-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. போலீஸ் திணைக்களத்தின் முழுமையான படையணி இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழிப்பதே எமது திட்டம். இந்த தேடுதல் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும்,” என்கிறார் நிஹால் தல்துவ.
”இந்த போதைப்பொருள் வலையமைப்பில் இதற்கு முன்னர் நாம் அடையாளம் கண்டுக்கொண்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்றும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இலக்காகக் கொண்டு இந்தச் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த வலையமைப்பை வீழ்த்தி, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோன்று, இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யும் இயலுமை கிடைக்கும்,” என்கிறார்.
”அதன்பின்னர், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். கைது செய்யப்படும் நபர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் எதிர்கால தேடுதல்களை முன்னெடுப்போம்,” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களின் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.
2005-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் ‘போதைக்கு முற்றுப்புள்ளி’ என வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் போலீஸாரினால் ‘ஒபரேஷன் க்ளீன் அப்’ தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த பெருந்தொகையான போதைப்பொருட்களை அரச புலனாய்வு பிரிவு, போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகி, பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மாகந்துர மதுஷ் உள்ளிட்ட பல சந்தேகநபர்களை பாதுகாப்பு பிரிவினர் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
இவ்வாறான திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த பின்னணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில், இடைக்கால போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இணைந்து தற்போது யுக்திய திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பிபிசி தமிழ்