உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதன்படி, 850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 வீதத்தால் குறைந்துள்ளதோடு, 3,000க்கும் மேற்பட்ட புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 17ஆம் திகதி நிலவரத்தின்படி, கொவிட் வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து மொத்தமாக 772 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 7 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வைத்தியசாலைகளில் 118,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 1,600க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 18ஆம் திகதி வரை கொவிட் வைரஸ் திரிபான BA.2.86 ஒமிக்ரோனின் புதிய துணை வகையான JN.1 வைரஸின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், JN.1 வைரஸின் ஆபத்து தற்போது குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்குவதால், JN.1 பல நாடுகளில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும்.

தொடர்ந்து, JN.1 வைரஸ் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அது இடர் மதிப்பீட்டை தேவைக்கேற்ப புதுப்பிக்கும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொவிட் தடுப்பூசிகள் JN.1 மற்றும் SARS-CoV-2இன் பிற மாறுபாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கும்.

கொவிட்-19 வைரஸால் பரவும் சுவாச நோய் மட்டுமல்லாது இன்ஃப்ளூயன்ஸா, ஆர்எஸ்வி மற்றும் குழந்தைகளிடையே நிமோனியா பரவல் ஆகியனவும் அதிகரித்து வருகின்றன.

இதனால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்தல், கொரோனா பரிசோதனை செய்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version