ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014 ஆம் ஆண்டின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவராவார்.

இவர் பல்கலைக்கழக பரீட்சைக்கு தோற்றாத காரணத்தினால் இதுவரை பட்டம் பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, கண்ணொரு பிரதேசத்தில் ஹாஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடத்திலிருந்து 15 கிராம் நிறையுடைய ஹாஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் கண்டி, முறுத்தலாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவருடன் மேலும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோதனையின் போது இவர்கள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version