”நாங்கள் கோழைகள் என நினைக்க வேண்டாம். வீதியில் செல்லும் நாய் ஒன்றின் மீது கல்லை எறிந்து தாக்கினால், அது குரைத்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால், சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால், யார் கல்லை எறிந்தார்கள் என்று அது திரும்பிப் பார்க்கும். அதுபோலத்தான் நாங்கள். எம் மீது கல்லை எறிய வேண்டாம்.
நாம் திரும்பிப் பார்ப்போம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது கல் எறிய வேண்டாம். நாங்களும் திரும்பிப் பார்ப்போம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை மக்களின் கடும் போராட்டம் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே கட்சியின் மாநாடு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 2016ஆம் ஆண்டு பஷில் ராஜபக்ஷவால் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது. தாமரை மொட்டு சின்னத்தில் இந்தக் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பதுடன், இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது.
தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2018ஆம் ஆண்டு முதல் தடவையாகப் போட்டியிட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பாரிய வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.
எனினும், கோவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் மீது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்த நிலையில், ஆட்சி பீடத்திலிருந்த ராஜபக்ஷ குடும்பத்தை வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், ஆட்சியிலிருந்து வெளியேற ராஜபக்ஷ குடும்பம் மறுத்த பின்னணியில், நாடு தழுவிய ரீதியில் பாரிய தன்னெழுச்சி போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இவ்வாறான நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, 2022ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியிருந்தனர்.
இந்த நிலையில், மொட்டு சின்னத்திலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது.
எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியை மீண்டும் நாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு
அத்துடன், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
தமது ஆட்சியில் பொருளாதாரம் பாரிய முன்னேற்றத்தைக் கண்டிருந்த போதிலும், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றதுடன், அவ்வாறு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்த நாட்டையே கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டதாக மாநாட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோவில் கூறப்பட்டது.
அதன் பின்னர் தமது ஆட்சியில் கோவிட் பெருந்தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற தாம் எடுத்த முயற்சிகள் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததாக கட்சியின் மாநாட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குறித்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோவிட் தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற முயற்சி எடுத்தமை, நாடு முடக்கப்பட்டிருந்த தருணத்தில் மக்களுக்கு மூன்று தடவைகள் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டமை, அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் உரிய சம்பளம் வழங்கப்பட்டமை, ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்டமை, நிவாரண திட்டங்கள் உரிய வகையில் வழங்கப்பட்டமை, நாடு முடக்கப்பட்ட தருணத்தில் அனைத்து மக்களுக்கும் உதவிகள் செய்தமை ஆகியவையே பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமாக அமைந்ததைப் போன்று வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் டாலர் வருமானம் பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சி அடைந்ததாக அந்த வீடியோ தொகுப்பில் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை முழுமையாக இல்லாது போனதாகவும், வெளிநாட்டு பணியாளர்களின் வருமானம் முழுமையாக இல்லாது போனதாகவும், வெளிநாட்டு முதலீடுகள் இல்லாது போனதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டது.
பொருளாதார, சமூக, அரசியல் சூழலை பயன்படுத்திக் கொண்ட சில குழுக்கள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்ததாக இந்த மாநாட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோவில் குறிப்பிடப்பட்டது.
‘விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்றினோம்’
”எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் மாத்திரமே ஆகியுள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி வெற்றியீட்டியது.
மூன்று தேர்தல்கள் மாத்திரமே நடத்தப்பட்டன. அந்த அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி வெற்றி பெற்றது. எதிர்வரும் காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் உங்களின் பொதுஜன பெரமுன கட்சியே வெற்றி பெறும் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதுவரை காலம் நீங்கள் எங்களுக்காக செய்ய சேவையை நாம் வரவேற்க வேண்டும். இலங்கையர்களுக்கு வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில் மரண பயம் ஏற்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் காலத்திலும், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்கு மரண பயம் ஏற்பட்டது.
அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மக்களைக் காப்பாற்றியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் என்பதை கூறிக் கொள்கின்றேன்,” என கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
‘இலங்கை மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கைகள் நடந்தன’
”கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களினால் நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருந்தது. அவ்வாறான பொருளாதார பின்னடைவுகளின் போதே நாட்டை நாம் பொறுப்பேற்றுக் கொண்டோம்.
அப்படியான சூழ்நிலையிலேயே யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கோவிட்-19 பெருந்தொற்று வந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. யுத்தத்தில் மக்கள் கொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திய நாம், கோவிட் தொற்றில் மக்கள் உயிரிழப்பதைத் தவிர்ப்பதற்கு வேலை செய்தோம் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும்.
கோவிட் தொற்றை வெற்றிகொண்ட போதிலும், அதற்கு முன்னர் பின்னடைவைச் சந்தித்திருந்த நாட்டை மீட்டெடுக்கப் பாரிய பிரயத்தனம் மேற்கொண்டோம். அப்போதுதான் மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நாடு கடனில் இருப்பதால் பொறுப்பேற்க அச்சப்பட்டார்கள்.
அவர்களின் இருப்பிற்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திலேயே நாட்டைப் பொறுப்பேற்க அச்சப்பட்டார்கள். அவ்வாறானவர்களே தற்போது ஆட்சியைக் கோருகின்றார்கள். அவ்வாறான தலைவர்களுக்கு நாட்டின் பொறுப்பைக் கொடுக்க நாம் தயார் இல்லை.
அடுத்த தேர்தலில் எமது கட்சியே பாரிய சவாலான கட்சியாக இருக்கும். கட்சியைப் பலப்படுத்த இன, மத, கட்சி வேறுபாடின்றி எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். நாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி,அரசியல் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்,” என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
”அரகலயவில் (போராட்டம்) எமது கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இன்று வரை அதற்கான நியாயம் கிடைத்தது என்று என்னால் கூற முடியாது. எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடு வீதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்களுக்கு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் கோருகின்றேன். உண்மையான குற்றவாளிகள் இன்றும் வெளியில் இருக்கின்றார்கள்.
எனினும், அவ்வாறானவர்களின் முகமூடி தற்போது கழற்றப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு எதிர்காலத்தில் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வோம் என நான் உங்களிடம் கூறிக்கொள்கின்றேன்,” எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
போராட்டக்காரர்களின் பார்வை
ராஜபக்ஷ குடும்பம் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி பீடத்தைக் கைப்பற்றுவதை தவிர்ப்பதற்கான அனைத்து வித நடவடிக்கைகளையும் தாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
”எமது மக்கள் அமைப்பின் ஊடாக நாங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரதேசங்களாக சென்று எங்களுடைய வேலைத் திட்டங்கள் மற்றும் இந்த நாட்டில் எப்படியான அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களுக்குத் தெளிவூட்டவுள்ளோம். அத்துடன், இந்த நாட்டை ஏன் மஹிந்த ராஜபக்ஷ குழு ஆட்சி செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் மக்களுக்குத் தெளிவூட்டி வருகின்றோம்.
இவர்கள் செய்த பிழைகள், அந்த பிழைகளுக்குரிய பொறுப்புக்கூறல், அந்த பிழைகளுக்கான தண்டனைகள் என்ன?
இவர்களை மீண்டுமொரு முறை ஆட்சிக்கு வரவைத்தால், வரப்போகும் பிரச்னை என்ன?
ஒட்டு மொத்த இலங்கையும் இன்றைக்குப் பாரதூரமான பொருளாதாரம் மற்றும் வாழ முடியாத நிலையில் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு மூலக்காரணம் இவர்கள், தமது குடும்பம் மற்றும் தம்மைச் சார்ந்தவர்களின் நலனுக்காக ஒட்டு மொத்த இலங்கையர்களையும் பள்ளத்தில் தள்ளினார்கள் என்பதையும் நாம் மக்களுக்கு கூறி வருகின்றோம்,” என அவர் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜக்ஷே திட்டம் என்ன?
”கடந்த தேர்தலில் 69 லட்சம் வாக்குகளைப் பெற்று, மக்களால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான தளமொன்று இல்லாது போயுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதல்ல மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கம். மாறாக மீண்டும் மக்கள் மத்தியில் தமது பிரசன்னத்தை உறுதிசெய்து கொள்வதே அவர்களின் நோக்கம்.
அந்த வன்முறைக்குப் பின்னரான முதல் நிகழ்வு இது. மக்கள் மத்தியில் முன்பைப் போன்று தலையை காட்டி அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். ரணில் விக்ரமசிங்க அரசியல் கூட்டணியொன்றை உருவாக்க முயல்கிறார். அந்தக் கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதான கூட்டணியாக எடுக்க எண்ணியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பொருத்தவரை, அடுத்த ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
அவர் எதிர்கட்சியின் இடத்தை எடுக்கப் பார்க்கிறார். அப்படியென்றால், பாரிய கூட்டணியொன்றை அமைத்து அந்தக் கூட்டணி ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைத்து, அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியில் அமர்வதே மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணம். மக்கள் மத்தியில் செல்வதற்கும், எதிர்ப்பைத் தணிப்பதற்காகவுமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ்வாறான மாநாடொன்றை நடாத்தியது,” என செய்தியாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
சிங்கத்திற்குக் கல் எறிந்தால், சிங்கம் திரும்பிப் பார்க்கும் என்ற வசனத்தைப் பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அச்சுறுத்தல் விடுக்கின்றார் எனவும் ஆர்.சிவராஜா குறிப்பிடுகின்றார்.
”இப்படிச் சொல்வதன் மூலம் தங்களுடன் மோத வேண்டாம் என பஷில் ராஜபக்ஷ மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கின்றார். இதுவரை எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இனி வரும் காலங்களில் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
சில வேளைகளில் ஆட்சிக்கு வந்து விடுவார்களோ என்ற அச்சம் வந்து விடும். ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ள எம்.பி.களும் தற்போது யோசிப்பார்கள். பஷில் ராஜபக்ஷ அந்த வசனத்தின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கின்றார்,” எனவும் அவர் கூறுகின்றார்.
பிபிசி தமிழ்