“சென்னை:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது.
தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம் மக்கள் வெள்ளத்தில் கோயம்பேடு நோக்கி சென்றது.
கேப்டன் விஜயகாந்தின் உடலை சுமந்து செல்லும் வாகனத்துடன் தொண்டர்களும் ரசிகர்களும் ஓடோடி வந்தனர்.திரையுலகினர், பொதுமக்கள் என அலைகடலென திரண்டு வழிநெடுகிலும் விஜயகாந்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவரதுஉடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.
விஜயகாந்தின் இறுதிச்சடங்கை பொதுமக்கள் காண தே.மு.தி.க. அலுவலகத்தின் முன் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.”