யாழ்ப்பாணம் வலி வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் சீ.வி.கே சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
வலி. வடக்கில் 6,371 ஏக்கர் காணிகளை உயர்பாதுகாப்பு வலயமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. அதனை 2023 ஆம் ஆண்டு நீக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறி இருந்தார். ஆனால் இதுவரையில் அந்த அறிவிப்பு மீள பெறப்படவில்லை.
இந்நிலையில் குறித்த 6,371 ஏக்கர் காணிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட காணிகளின் அறிவிப்பையாவது மீள பெறவேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அதேவேளை, தற்போது உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பிரதேசத்தினுள் உள்ள 14 இந்து ஆலயங்களுக்கும் மக்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும், பலாலியில் விவசாய நடவடிக்கைக்காக 289 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவையும் விடுவிக்கப்படவில்லை. அவற்றையும் விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி உடனடியாக இந்த விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என தெரிவித்தார்.