வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா பொலிசாரால் குண்டுக்கட்டாக தூக்கிச்செல்லப்பட்டு பொலிசாரின் பேருந்தில் ஏற்றப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.