தற்கொலை செய்துக்கொள்வதன் மூலமாக அடுத்த பிறவிக்கு விரைவில் செல்ல முடியும் என போதனை செய்ததை அடுத்து, போதகர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவமொன்று இலங்கையில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ருவன் பிரசன்ன குணரத்ன என்ற 47 வயதான நபரொருவர், பௌத்த மதத்தை திரிவுப்படுத்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதனைகளை நடாத்தியுள்ளார்.
தற்கொலை செய்துக்கொள்வதன் ஊடாக, அடுத்த பிறவிக்கு விரைவில் செல்ல முடியும் என அவரது போதனைகளில் கூறியுள்ளதாக போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் ஆரம்பத்தில் இரசாயன ஆய்வு கூடமொன்றில் கடமையாற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இந்த நபர் இரசாயன ஆய்வு கூடத்திலிருந்து விலகி, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் போதனைகளை நடாத்தியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், குறித்த போதகர் கடந்த மாதம் 28ம் தேதி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
ஹோமாகம பகுதியிலுள்ள வீடொன்றில், நஞ்சு அருந்தி குறித்த நபர் உயிரிழந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த போதகரின் மனைவி, தனது மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை வழங்கி, தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாலபே போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கணவனின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாது, மன அழுத்தம் ஏற்பட்டமையினால், பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்ப கட்டத்தில் போலீஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து, போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த குடும்பத்தாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துக்கொண்ட நபர் ஒருவரை போலீஸார் விசாரணை செய்துள்ளனர்.
அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பீர்த்தி குமார என்ற நபரிடம் போலீஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
தற்கொலை செய்துக்கொண்ட போதகரின் போதனைகளில், பல வருடங்களுக்கு முன்னர் தானும் கலந்துக்கொண்டதாக குறித்த நபர் போலீஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனாலேயே, போதகரின் மனைவி உள்ளிட்ட குழந்தைகளின் இறுதிக் கிரியைகளில் தானும் கலந்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
தற்கொலை செய்வதனை ஊக்குவிக்கும் வகையில், குறித்த போதகர் போதனைகளை நடாத்தியிருந்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
விரைவில் அடுத்த பிறவிக்கு செல்லும் எண்ணத்திலேயே, போதகர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக, குறித்த நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், போலீஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய, போதனைகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் 34 வயதான பீர்த்தி குமாரவும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மஹரகம பகுதியிலுள்ள ஹோட்டல் அறையொன்றிலிருந்து, அவரது சடலத்தை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
குறித்த நபர் ஜனவரி 2ம் தேதி ஒரு வகையான நஞ்சை அருந்தி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை போலீஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு குறித்த நபர் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் நஞ்சு மருந்தை, ஹோட்டல் அறையிலிருந்து போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், நஞ்சு அருந்தி உயிரிழந்ததாக கூறப்படும் தாய் மற்றும் பிள்ளைகளின் இறுதி சடங்குகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் யுவதி ஒருவரும் நஞ்சு அருந்தி உயிரிழந்துள்ளார்.
யக்கல பகுதியிலுள்ள தனது வீட்டிலேயே, குறித்த யுவதி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
பௌத்த மதத்தை திரிவுப்படுத்தி போதனை நடாத்தியதாக கூறப்படும் போதகரின், போதனைகளில், இந்த யுவதி கலந்துக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என போலீஸார் கூறுகின்றனர்.
தற்கொலை செய்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நஞ்சு பொருள், ஒரே தன்மை உடையதா என்பது தொடர்பில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, போதகரின் போதனைகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படும் நபர் தொடர்பிலும் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகளின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒரு தொகுதி குழுவினரிடம் போலீஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்களிடம், ஏதேனும் நஞ்சு வகைகள் காணப்படுகின்றதா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சைனைட் வகையை சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு வகை நஞ்சை அருந்தியே, இவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
”இந்த நான்கு சம்பவங்களிலும் ஒரே வகையாக அடையாளங்கள் காணப்பட்டன. அதாவது, நஞ்சு என சந்தேகிக்கப்படும் பை கிடைக்கப் பெற்றது. சிறிய பக்கெட்களிலேயே இந்த நஞ்சு பொருள் காணப்பட்டுள்ளது. இது சைனைட் என சந்தேகிக்கின்றோம்.
எனினும், இந்த நஞ்சு பொருள் என்ன என்பது குறித்து இரசாயண பகுப்பாய்வு அறிக்கை வந்தவுடனேயே சரியான தகவல்களை கூற முடியும். எனினும், இது நஞ்சு தன்மை வாய்ந்தது என்பது தெளிவாக தெரிகின்றது” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.
”நஞ்சை அருந்தி தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என குறித்த போதகர் போதனை செய்துள்ளமை புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்தால், அடுத்த பிறவியில் சிறந்ததொரு இடத்தில் பிறக்க முடியும் என்ற வகையில் போதனை செய்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் அதனை நம்பும் நபர்கள் இருக்கக்கூடும். இவரது போதனைகளில் கலந்துக்கொண்டவர்களின் உறவினர்கள், அவர் குறித்து ஆராய்ந்து பாருங்கள்.” எனவும் அவர் கேட்டுக்கொள்கின்றார்.
பிபிசி தமிழ்