அமெரிக்க – ஐரோப்பிய – இஸ்ரேலியர்களினால் காஸாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அழிவு தரும் செயற்பாடுகளும் பலஸ்தீனர் மீதான இனப்படுகொலையும் பொது மக்களிடையே கோபக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளை இது தொடர்பில் அரேபிய சர்வாதிகாரிகளோ பெரிதும் அலட்சிய மனோபாவத்துடனேயே உள்ளனர்.
இது அரேபிய கொடுங்கோல் ஆட்சியாளர்களும் இஸ்ரேலும் ஒரே அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இரு வேறு பக்கங்கள் என்பதையே காட்டி நிற்கிறது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸினால் ஆட்சியதிகாரத்தில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பும் பெற்றுவரும் இவர்கள் அனைவரும் சுய இருப்பை உறுதிப்படுத்துவதற்காக தமது மேற்கத்திய எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாம் சார்ந்த மக்களுக்கெதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.
முழு மத்திய கிழக்கிலும் சுதந்திரம் என்று இன்று எதுவும் இல்லை. மக்களை அடக்கி ஒடுக்கி வைக்கும் கொடுங்கோலர்களை மட்டுமே ஏற்கும் மனநிலை கொண்ட மேற்கத்தேய எஜமானர்களால் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் சகித்துக் கொள்ளப்படுவதில்லை. அங்கு ஊடகங்களும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன.
இச்சர்வாதிகாரிகளிடமிருந்து அடிமைப்படுத்தப்பட்ட தமது மக்களுக்குக் கூறப்படும் செய்தி யாதெனில், ஒன்றில் தமது அடிச்சுவட்டை முழுதாகப் பின்தொடர்தல் வேண்டும் இன்றேல் சிறைவாசம் என்பதாகும்.
அங்கு இஸ்லாம் என்பது வெறுமனே மஸ்ஜித்களினுள்ளேயே முடக்கப்பட்டு உள்ளது. இது அரேபிய சர்வாதிகாரிகள் தமது மக்களுக்கு வழங்கி வருகின்ற பொதுவான செய்தியாகும்.
இந்த அடக்குமுறையான நெருக்கடி மிக்க சூழலில் வாழ முடியாது ஆயிரக்கணக்கான அறிஞர்களும் புத்திஜீவிகளும் தம் நாடுகளை விட்டுப் பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஹூஸ்னி முபாரக்
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும், இஸ்ரேலும் ஜனநாயகத்தை தவிடுபொடியாக்குவதற்காக அரேபிய சர்வாதிகாரிகளைப் பயன்படுத்தி வருகின்றன.
உதாரணமாக, 2011 ஆம் ஆண்டு அரபு எழுச்சியை அடுத்து எகிப்திய மக்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான கெடுபிடிமிக்க சர்வாதிகாரி ஹூஸ்னி முபாரக்கை தூக்கியெறிந்தனர்.
அறுபது ஆண்டுகளுக்குப் பின் நடந்த சுதந்திரமான, நியாயமான தேர்தல்களினூடாக இஸ்லாமிய பின்னணியினைக் கொண்ட முஹம்மட் முர்ஸியை மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.
இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, கொலைகளையும் அழிவையும் நிறுத்தக் கோரி உலகளாவிய ரீதியில் மக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது கிழக்கே இந்தோனேஷியா, மலேஷியா முதற்கொண்டு ஏறக்குறைய அனைத்து மேற்குலகத் தலைநகரங்களையும் உள்ளடக்கியிருந்தது.
இது போன்ற ஆர்ப்பாட்டம் ஒன்று சியோனிசத்தை எதிர்க்கும் யூதர்களால் கூட வொஷிங்டனில் நடத்தப்பட்டது.
எனினும், மத்திய கிழக்கில் ஆட்சியிலுள்ள கொடுங்கோலர்கள் அனுமதிக்காத காரணத்தினால் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லை.
மாறாக, அக்டோபர் 8 ஆம் திகதி முதல் நீர், உணவு மற்றும் மருந்துவகைகள் எதுவுமே இல்லாத சூழ்நிலையில் பலஸ்தீனர்கள் பரிதவிக்கும் போது முன்பு சூடானில் உள்நாட்டு நெருக்கடியைத் தூண்டி கிட்டத்தட்ட அந்நாட்டையே கொலைக்களமாக மாற்றிய ஐக்கிய அரபு இராச்சியம், பத்து ட்ரக்குகளில் புத்தம் புதிய உணவு வகைகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தது.
இந்த இனப்படுகொலையானது இதுவரை முழுமையாக 2.3 மில்லியன் பலஸ்தீனர்களையும் பாதித்துள்ளது.
கிழக்கயல் நாடுகளிலுள்ள பலஸ்தீன அகதிகளுக்குரிய ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கான முகவரகத்தின் ஆணையாளர் நாயகமாக 2020ஆம் ஆண்டு முதல் பணியாற்றுகின்ற ஜெனரல் பிலிப் லஸ்ஸாரினி, பலஸ்தீனர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூறும் போது,
‘பலர் உடலியல், உளவியல் ரீதியாக வாழ்நாள் முழுவதும் வடுக்களை சுமப்பார்கள். குழந்தைகள் உட்பட பெரும்பாலானோர் ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர், குறிப்பாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டும், ஊனமுற்றும், அனாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.’
‘குளிர்காலம் ஆரம்பிப்பதானது, குறிப்பாக திறந்த வெளியில் வசிப்பவர்களின் வாழ்க்கையை மென் மேலும் தாங்க முடியாததாக ஆக்கும்’ என்றார்.
எமது UNRWA சகபாடிகள் 146 பேர் உட்பட மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர், யாரும் விட்டுவைக்கப்படவில்லை’ என்று அவர் மேலும் கூறினார்.
இவ்வளவு நடந்தும் கூட அரேபிய சர்வாதிகாரிகளின் இதயங்கள் உருகத் தவறிவிட்டன.
சவூதி அரேபியாவும், எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளும் குறைந்த பட்சம் நீர், உணவு மற்றும் மருந்துப் பொருட்களையாவது வழங்க வேண்டும் என்று உலக முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். மாறாக, அவர்கள் காஸாவை ஒரு கொலைக்களமாக மாற்ற இஸ்ரேலியர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை நிராகரித்து, சவூதி அரேபியா ரியாத்தில் 2023 டிசம்பர் 14- 16, தினங்களில்‘MDLBEAST Soundstorm’ எனும், மத்திய கிழக்கின் மிகப்பெரிய இசைக்களியாட்டத்தை நடத்தியது.
மேலும் இஸ்லாத்தில் இருந்து தூர விலகிய இங்கிலாந்திற்கான சவூதி தூதுவர் காலித் பின் பந்தர் அல் சௌத், ‘எனது அரசாங்கம் ஒருபோதும் மதத் தலைமைத்துவத்திற்கு உரிமை கோரவில்லை’ என்றார்.
எவ்வாறாயினும், இஸ்ரேல் – சவூதி இணக்க நிலை இன்றி சவூதி ஆட்சி இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்க முடியாது என்று இரு தரப்பு மத்தியஸ்தராக பணியாற்றிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது போலவே தற்போதும் அமெரிக்காவுடன் இஸ்ரேலிய – சவூதி இயல்புநிலைக்கான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதை உறுதிப்படுத்தும் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஜனவரி 16 ஆம் திகதி டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றக் குழுவிடம், ‘பிராந்திய அமைதி என்பது இஸ்ரேலுக்கான அமைதியையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்,
ஆனால், அது பலஸ்தீன அரசின் ஊடாக பலஸ்தீனர்களுக்குக் கிடைக்கும் அமைதியின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்’ என்றார். அவரிடம், ‘அவ்வாறு இடம்பெற்றால் சவூதி அரேபியா இஸ்ரேலை ஒரு பரந்த அரசியல் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்குமா?’ என வினவப்பட்டது. அதற்கு அவர், ‘நிச்சயமாக’ என்றார்.
அரபு சர்வாதிகாரிகளின் போலித் தன்மையை அம்பலப்படுத்திய எகிப்துக்கான இஸ்ரேலின் முன்னாள் துணைத் தூதர் ரூத் வாசர்மன் லாண்டே, ‘மிட்ல் ஈஸ்ட் மொனிட்டர்ஸ்’ அமைப்பின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு இராச்சியம்;, சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் காஸா பிரச்சினை குறித்து முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ளன.
இந்த நாடுகள் காஸாவில் போர்நிறுத்தத்தை வரவேற்கவில்லை என்றும், அவர்களது தனிப்பட்டதும் பொது செயற்பாடுகளும் இணங்கிப்போகவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள மக்கள் இந்த போலித்தன்மையையும் துரோகத்தையும் தெளிவாக அறிந்துவைள்ளனர்.
இதன் விளைவாக அப்பிராந்தியம் முழுவதும் வெடித்துச் சிதறப் போகும் எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கின்றது.
காஸா மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மீதான அமெரிக்க – ஐரோப்பிய – இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனம் இவ் வெடிப்புக்கான ஆரம்ப தூண்டலை கொடுத்துவிடுமா என்பதே கேள்விக்குறியாகும்.
லத்தீப் பாரூக்
(தமிழில்: பிஷ்ருன் நதா மன்சூர்)