இம்ரான் கான் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் அலாதி பிரியம். துவண்டு கிடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகின் முதல் வரிசையில் இருக்கச் செய்தவர்களில் அவர் முக்கியமானவர்.
ஆனால், அந்த அளவுக்கு அவர் தனது அரசியல் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சோபிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
அரசியலில் அவர் கால் வைத்தது முதல் அவரது அரசியல் ஆட்டம் தப்பாகவே போய்விட்டது. பாகிஸ்தான் அரசியலின் நெளிவு சுளிவுகளுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதன் விளைவுதான் அவர் எதிர்நோக்கியுள்ள இன்றைய நிலையாகும்.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த விதமான பரபரப்பான சூழலில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது முக்கிய உதவியாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கும் அரச இரகசியங்களை கசியவிட்டது தொடர்பான வழக்கில் (cipher case என்று அழைக்கப்படும்) பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
முன்னதாக குறித்த வழக்கில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகவில்லை.
ராவல்பிண்டியில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்புக்கூறல் நீதிமன்றம் புதன்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியது. இதேவேளை 757 மில்லியன் ரூபாய் ($2.7 மில்லியன்) அபராதமும் விதிக்கப்பட்டது.
அரச இரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த தீர்ப்பு வெளியானது. குறித்த தண்டனைகள் தொடர்ச்சியாக அல்லது ஒரே நேரத்தில் வழங்கப்படுமா? என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ஆகஸ்ட் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக விளங்கிய கான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு நெருக்கடிகள் ஆரம்பமாகின. அரசியல் இரகசியங்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இதேவேளை, கான் மீதான அரச இரகசியங்களை கசியவிட்டது குறித்த குற்றச்சாட்டை விசாரிக்கும் இந்த விசேட நீதிமன்றம், ராவல்பிண்டியில் உள்ள சிறைச்சாலையில் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. குறித்த சிறப்பு நீதிமன்றம் செவ்வாயன்று தனது தீர்ப்பை வழங்கியது.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதுவர் 2022இல் இஸ்லாமாபாத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய ஆவணத்தை கசிய விட்டது தொடர்பில் கான் குற்றம் சாட்டப்பட்டார்.
அமெரிக்க நிர்வாகத்தின் உதவியுடன் தனது அரசியல் எதிரிகளாலும், சக்தி வாய்ந்த இராணுவத்தினாலும் தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அதற்கான ஆதாரம் அந்த ஆவணத்தில் உள்ளதாகவும் கான் தொடர்ச்சியாக கூறிவந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை வொஷிங்டனும் பாகிஸ்தானும் நிராகரித்தன. எனினும், பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் அரசியல் எதிரிகளுடன் இணைந்து தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்காக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தை, அந்த இராஜதந்திர கேபிள் நிரூபிப்பதாக கூறும் குற்றச்சாட்டை கான் கைவிடவில்லை.
மேலும், கான் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கானின் வழக்கறிஞர்களில் ஒருவர், இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதாவது, 71 வயதான இம்ரான் கான் 1996இல் நிறுவிய பி.டி.ஐ.இன் புதிய தலைவராக பாரிஸ்டர் கோஹர் அலி கான், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் நியாசுல்லா நியாசி தெரிவித்துள்ளார்.
கட்சி அதிகாரிகளுக்கு உள் வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், அதன் சின்னமான கிரிக்கெட் மட்டையை இழக்க நேரிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் பி.டி.ஐயை எச்சரித்தது.
மேலும், உலக வங்கியின் தரவுகளின்படி, வயது வந்தோர் கல்வியறிவு விகிதம் 58 சதவீதமாக இருக்கும் நாட்டில் தேர்தல் சின்னங்கள் முக்கியமானவை.
இந்நிலையில், கட்சியின் புதிய தலைவர், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், வடக்கு நகரமான பெஷாவரில் உள்ள கட்சி ஆதரவாளர்களிடம், பேசிய கோஹர் அலி கான், தான் இம்ரான் கானின் விசுவாசமான பிரதிநிதியாக இருப்பேன் என்று உறுதியளித்தார்.
இதேவேளை, 2022 ஏப்ரலில் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டதில் இருந்து அரசியல் மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகளில் சிக்கியுள்ளார்.
2018 முதல் 2022 வரை பதவியில் இருந்தபோது சட்டவிரோதமாக அரசு பரிசுகளை கருவூலத்தில் வைகாமல் விற்றதற்காகவும் அதன் பெறுமதி 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் 3 வாரங்களில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும், அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.
ஏனென்றால், மற்றுமொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதாவது அவர் பாகிஸ்தான் பிரதமராக இருந்த சமயம் அரச இரகசியங்களை கசியவிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதேவேளை, அரச இரகசிய தகவல்களை வெளியிட்டமையானது, இம்ரான் கானுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையைக் கூட விதிக்கலாம் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள 10 வருட சிறைத் தண்டனையை கேலிக்கூத்து என்று கூறியுள்ள அவரது கட்சி குறித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில் குறித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பி.ரி.ஐ கட்சி கராச்சி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது. அதனை பொலிஸார் கண்ணீர் பிரயோகம் செய்து கலைத்தனர்.
பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைய முனைந்தாலும், இராணுவத்தின் செல்வாக்கு மிகவும் ஆழமாக உள்ளது. இது அனைத்தையும் பின்தள்ளுவதுடன், மேலும் எதையும் சாத்தியமற்றதாக மாற்றுகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, நவம்பர் 2022இன்போது கருத்து தெரிவித்த அப்போதைய இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா பாகிஸ்தானின் இராணுவம் பல தசாப்தங்களாக அரசியலில் தலையிட்டதாக ஒப்புக்கொண்டார்.
ஜெனரல் பஜ்வா தனது பிரியாவிடை உரையில், எதிர்காலத்தில், பாகிஸ்தானின் ஜனநாயக செயற்பாட்டில் தலையிடுவதை இராணுவம் தவிர்க்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.
எனினும், 14 மாதங்களுக்குப் பின்னர், அந்த உத்தரவாதம் காற்றில் பறந்துவிட்டதாக தெரிகிறது. பாகிஸ்தான் தனது வரும் 8ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இராணுவம் வழக்கமான நிழல் செயல் முறையில் வட்டமிடுகிறது என்ற கருத்து நிலவுகிறது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் தேர்தல் சின்னத்தை மறுத்துள்ளது.
கான் உட்பட அதன் தலைவர்கள் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றும் பலர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் கட்சியைச் சேர்ந்த பலர் சுயேச்சையாக போட்டியிட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். பலர் வாய் திறக்கவே அஞ்சுகின்றனர்.
குறிப்பாக கான் மற்றும் அவரது பி.டி.ஐ பற்றிய செய்திகளை வெளியிடும்போது, இராணுவம் அதனை தணிக்கைக்கு உட்படுத்துவதாகவும், முன்னரைப் போன்ற தேர்தல் பிரசார சூழல் எதுவுமில்லை என்றும் இந்த அடக்கமான அரசியல் சூழலின் மையத்தில், அரசியலில் இராணுவத்தின் ஆழமான செல்வாக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இராணுவம் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பாகிஸ்தானை நேரடியாக ஆட்சி செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது என்று கூறும் அரசியல் ஆய்வாளர்கள், நாட்டின் 77 ஆண்டுகள் சுதந்திர வரலாற்றின் திரைக்குப் பின்னால் இருந்து இராணுவம் அதிகாரத்தின் நெம்புகோல்களைக் கட்டுப்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.
பாகிஸ்தானை பொறுத்தமட்டில், இராணுவ சர்வாதிகாரிகளில் மூன்று பேர் தலா ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்ய முடிந்தது.
எனினும் ஜனநாயக ரீதியில் தெரிவான அரசியல் தலைவர்களால் அவ்வாறு சோபிக்க முடியவில்லை என்பதே உண்மை.
எந்தவொரு பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ததாக இல்லை என்றும் ஜனநாயகத்தில் இது ஒரு கழுத்து நெறிப்பு என்றும் பாகிஸ்தான் மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அதன் 12வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளது.
எனினும் 241 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் பொதுமக்களால் இராணுவத்தின் மறை கரத்தை தடுக்க முடியுமா என்பது பலரது கேள்வியாகும்.
இம்ரான் கானின் எதிர்காலம் என்ன?
இம்ரான் கானின் அரசியல் எதிர்காலம் பெரும்பாலும் அஸ்தமனமாகிவிடும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இம்ரான் கான் என அழைக்கப்படும் இம்ரான் அகமது கான் நியாசி (Imran Ahmed Khan Niaz) 1952 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி பசுத்தூன் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.
தனது 18வது வயதில் சர்வதேச கிரிக்கட் துடுப்பாட்டத்தில் ஈடுபடலானார். 1971இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
1992 வரை பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். 1982 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணியின் தலைவராக பல முறை விளையாடியுள்ளார்.
1992இல் அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி உலக கிண்ணத்தை வென்றது. இதுவே இதுவரை பாகிஸ்தானின் ஒரேயொரு உலகக் கிண்ண வெற்றியாகும். கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சர்வதேச வீரர்களில் ஒருவராக இம்ரான் கான் விளங்கினார்.
1996இல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2002 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.
2007 வரை எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார். 2008 தேர்தலில் இவரது கட்சி தேர்தலில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்தது.
2013 தேர்தலில் இவரது கட்சி இரண்டாவது அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றது. 2018 தேர்தலில், அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக வெற்றி பெற்று, சுயேச்சை உறுப்பினர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது, இம்ரான் கான் பிரதமரானார்.
மேலும், கொவிட்-19 தொற்றுநோய்களின் போது நாட்டை வெற்றிகரமாக வழிநடத்தினார். ஆப்கானிஸ்தான் அமைதி செயல்முறைக்கு ஆதரவளித்தார்.
அத்துடன், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்தினார். அதேவேளை, அமெரிக்காவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
அதுவே அவருக்கு பின்னடைவாகவும் அமைந்தது. 2022இல், இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார். இது அவருக்கு அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து, 2022 ஏப்ரல் 10இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதிலிருந்து ஒரு விடயத்தை உணர முடிகிறது. அதாவது வல்லரசு நாடுகளை பகைத்துக்கொள்ளும் சிறிய நாடுகளின் அரசியல் ஜனநாயகம் கேள்விக்குறியாகும் என்பதேயாகும்.
குறிப்பாக, இலங்கையில் சீனாவின் பக்கம் சாய்ந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கான் சீனா மற்றும் ரஷ்யா பக்கம் சாய்ந்ததால் பதவி கவிழ்க்கப்பட்டார்.
அந்த வரிசையில் மாலைதீவு ஜனாதிபதி முகம்மது முய்சு இந்தியாவை விமர்சித்த நிலையில் ஆட்சியமைத்து மூன்று மாத காலத்துக்குள் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்நோக்கியுள்ளார். இவை யாவும் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.