2024 ஜனவரியில் மத்திய கிழக்கு மோதலின் பிடிக்குள் வந்தது. காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் மூண்டது. ஹூத்தி கிளர்ச்சிக் குழு செங்கடலில் கப்பல்களைக் கடத்தியது. அண்டை நாடான பாகிஸ்தான் எல்லைக்குள் இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக பாகிஸ்தான் இதனால் அதிர்ச்சி அடைந்தது.
ஏனெனில் அவை இரண்டும் நட்பு நாடுகள். பதிலுக்கு பாகிஸ்தானும் இரான் மீது தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகளும் இந்த தாக்குதல்களை தற்காப்பு நடவடிக்கை என்றும், எல்லைக்கு அப்பால் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளன.
அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் சீனா தலையிட்டு நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு இரு தரப்பிடமும் வேண்டுகோள் விடுத்தது.
தனது படை வலுவைக்காட்டும் வகையில் ஜனவரியில் இரான் நடத்திய ஒரே தாக்குதல் இதுமட்டுமல்ல.
இரான் தனது நட்பு நாடுகளான சிரியா மற்றும் இராக்கிற்குள்ளும் தாக்குதல்களை நடத்தியது. அது இஸ்ரேலைத் தாக்கவும் ஆர்வமாக உள்ளது போலத்தெரிகிறது. சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே பரபரப்பாக உள்ள மத்திய கிழக்கு அரசியலில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இரான் என்ன விரும்புகிறது என்பதை இந்தக் கட்டுரையில் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
மத்திய கிழக்கில் எதிர்ப்பின் அச்சு
’ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டென்ஸ்’ அதாவது எதிர்ப்பின் அச்சு என்பது மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அரசு அல்லாத குழுக்களின் அதிகாரபூர்வமற்ற கூட்டணி என்றும் அவை இரானின் நட்பு வட்டம் என்றும் இரானிய ஊடகவியலாளரும் சர்வதேச கொள்கை மையத்தின் மூத்த ஆய்வாளருமான நிகார் மோர்த்ஸாவி கருதுகிறார்.
இதில் லெபனானின் ஹெஸ்புலா, இராக்கின் ஷியா போராளிக் குழுக்கள், ஹமாஸ் மற்றும் ஹூத்தி குழுக்கள் அடங்கும்.
இரான் இந்த குழுக்களை தனது எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கூட்டாளிகளாக பார்க்கிறது. அவர்களின் எதிர்ப்பை கொள்கை அடிப்படையில் ஆதரிக்கிறது.
2002 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இரான், இராக், வடகொரியா ஆகிய நாடுகளை தீமையின் அச்சு என்றும், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் கூறியது நினைவிருக்கலாம்.
“எதிர்ப்பு அச்சு என்பது அந்த அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். நாங்கள் தீயவர்கள் இல்லை.
ஆனால் அமெரிக்கா எங்கள் பிராந்தியத்தில் அமைதியின்மையை பரப்பியுள்ளது. அந்த நாடு தனது நடவடிக்கைகளை நிறுத்தும் வரை அதை எதிர்ப்போம், போராடுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்,” என்று நிகார் மோர்த்ஸாவி குறிப்பிட்டார்.
சமீபத்தில் இராக்கின் மேற்குப் பகுதியில் அமெரிக்க வீர்கள் இருந்த ராணுவ விமான தளத்தின் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இரானுடன் தொடர்புடைய ‘இஸ்லாமிக் ரெஸிஸ்டன்ஸ்’ என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.
இரான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதல்களுக்கும் எதிர்ப்பு அச்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிகார் மோர்த்ஸாவி கூறுகிறார்.
பயங்கரவாத அமைப்பு என்று இரான் கருதும் உள்ளூர் பலூச்சி குழுதான் அதன் இலக்கு. பல மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு அச்சின் பெரும்பாலான குழுக்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளன.
காஸாவில் இஸ்ரேலின் குண்டுமழை பேரழிவை ஏற்படுத்தியது
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர்ஏமனில் உள்ள ஹூத்தி குழு உள்ளூர் மக்களின் உரிமைகளுக்காக எதிர்ப்பைத் தொடங்கியதாக நிகார் மோர்த்ஸாவி கூறினார்.
அதே நேரத்தில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஹெஸ்புல்லாவின் எதிர்ப்பு தொடர்கிறது.
அத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக தனக்கும், இந்த குழுக்களுக்கும் ஒரே இலக்கு இருப்பதாக இரான் நினைத்தது. ஆகவே அது இந்த குழுக்களுடன் சேர்ந்து கொண்டது.
ஏமனின் ஹூத்தி குழு இஸ்ரேலை எதிரியாகக் கருதுகிறது மற்றும் காஸாவில் இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து ’ஆக்சிஸ் ஆஃப் ரெஸிஸ்டென்ஸ்’ உறுப்பினரான ஹமாஸுக்கு ஆதரவைக் காட்டுவதற்காக செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் பிரிட்டனும் ஹூத்தி நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்த குழுவிற்கு இரானிடம் இருந்து பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவு கிடைக்கிறது என்று நிகார் மோர்த்ஸாவி கூறுகிறார். அந்தக்குழு இரான் சொல்லியபடி நடக்கிறது. இதன் மூலம் இரான் தனது போட்டியாளர்களுக்கு பாரம்பரியமற்ற முறையில் ராணுவ சவாலை முன்வைக்க முடியும்.
இரானிடம் சக்திவாய்ந்த எதிரிகளை எதிர்த்துப் போரிட போதுமான பெரிய ராணுவம் அல்லது வளங்கள் இல்லை. எனவே அது ஒத்த எண்ணம் கொண்ட எதிர்ப்புக் குழுக்களுடன் உறவுகளை உருவாக்கியுள்ளது. மோதல் ஏற்பட்டால், எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்த முடியும். ஆனால் இந்தக் குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவில் இரான் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது என்பது தெரியவில்லை.
“இவை தன்னாட்சி குழுக்கள் என்றும் பொதுவான இலக்கு இருப்பதால் மட்டுமே அவற்றை ஆதரிப்பதாகவும் இரான் கூறுகிறது.
காஸாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் திட்டமிட்டதில் இரானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறை தகவல்களுடன் நான் உடன்படுகிறேன்,” என்று நிகார் மோர்த்ஸாவி குறிப்பிட்டார்.
“இரானிய அதிகாரிகள் இரண்டு விதமான அறிக்கைகளை வெளியிட்டனர். கொள்கையளவில் அந்த நடவடிக்கையை ஆதரிப்பதாக ஒருபுறம் தெரிவித்த அவர்கள் இது முற்றிலும் பாலஸ்தீனியர்களின் நடவடிக்கை என்றும் கூறினார்கள்.”
எதிர்ப்பின் அச்சுக்கும் இரானுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இரானின் பங்கைப் புரிந்து கொள்ள அதன் வரலாற்றைப் பார்க்க வேண்டியது அவசியம் என்று நிகார் மோர்த்ஸாவி கூறுகிறார்.
இரானில் ஆட்சி மாற்றம்
தற்போதைய இரான் ஒரு இஸ்லாமிய குடியரசு. ஆனால் அதற்கு முன் அங்கு முடியாட்சி இருந்தது. இரானின் ஷா மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் நாட்டை நவீனமயமாக்க விரும்பினார்.
இரானின் ஷா முகமது ரெசா பஹ்லவிக்கும் அமெரிக்காவிற்கும் நெருங்கிய உறவு இருந்தது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இரானிய வரலாறு மற்றும் அரசியல் பேராசிரியரான மரியம் ஆலெம்சாதே கூறுகிறார்.
“முகமது ரெசா பஹ்லவி மகத்துவத்தை விரும்பினார். மேலும் தன்னை அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாகக் கருதினார்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர் இரானின் வெளியுறவுக் கொள்கையானது, அமெரிக்காவுடனான அதன் கூட்டாண்மையில் கவனம் செலுத்தியது. இது மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடனான அதன் உறவுகளை பாதித்தது.”
அந்த நேரத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.
மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை அதிகரிக்க அமெரிக்கா ஒரு கூட்டாளியை விரும்பியது. அதே சமயம் இரானையும் மேற்கத்திய நாடுகளைப் போல ஆக்கும் முயற்சிகளை ஷா தீவிரப்படுத்தினார்.
அவரது நிர்வாகத்திற்கு எதிராக நாட்டில் வேலை நிறுத்தங்களும் கலவரங்களும் தொடங்கின.
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஷா 1979 இல் நாட்டை விட்டு வெளியேறினார். நாடு கடந்து வாழ்ந்துவந்த மதத் தலைவரான அயதுல்லா கோமேனி இரானுக்குத் திரும்பி, நாட்டின் உச்ச தலைவராக ஆனார்.
இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இரானில் மக்கள் வாழும் முறையில் மிகப்பெரிய மாற்றம் வந்ததாக மரியம் அலெம்சாதே கருதுகிறார். பெண்கள் ஹிஜாப் அணிவதும், ஆண்கள் சாதாரண உடைகள் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.
இரண்டாவது மாற்றம் இரானின் வெளியுறவுக் கொள்கையில் வந்தது. இரான் உலகின் பெரும்பாலான நாடுகளை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கியது. உலகின் பெரும் வல்லரசுகளின் செல்வாக்கிலிருந்து விலகி இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதனுடன் மற்ற நாடுகளில் இஸ்லாமியப் புரட்சியைக் கொண்டுவருவதற்கான திட்டங்களும் தீட்டப்பட ஆரம்பித்தன.
நாட்டின் செல்வாக்குமிக்க சமூகங்களின் மிகச் சிறிய பகுதியினர் மட்டுமே இதை விரும்பியதால் இதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று மரியம் அலெம்சாதே கூறுகிறார்.
சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனிய குழுக்களுடன் உறவுகளைப் பேணி வந்த சில மதத் தலைவர்கள் மற்றும் கெரில்லா போராளிகளின் தலைவர்கள் இதை விரும்பினர்.
ஆனால் இஸ்லாமியப் புரட்சியின் சில ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தத் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.
ஏனென்றால் இரானின் முக்கிய கொள்கை நாட்டை கட்டியெழுப்புவதிலும், பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் கூட்டணியை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது என்று மரியம் அலெம்சாதே மேலும் கூறினார்.
நாட்டின் அதிகார ஏணியில் மேல் படியில் உச்ச தலைவர் இருக்கிறார். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் உள்ளது. ஆனால் பல இணை அமைப்புகளுக்கு கொள்கை முடிவுகளில் பங்கு உண்டு என்கிறார் மரியம் அலெம்சாதே.
இதில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையும் (IRGC) அடங்கும். இந்த ராணுவ அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காகவும், இஸ்லாமிய புரட்சிக்காகவும் உருவாக்கப்பட்டது. இது ஒரு ராணுவ அமைப்பு மட்டுமல்ல. இது நிதி மற்றும் வெளியுறவுக் கொள்கையிலும் செல்வாக்கு செலுத்துகிறது.
ஐஆர்ஜிசியின் உள்ளே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதன் சில தலைவர்கள் உச்ச தலைவரின் தீவிர வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவாக இல்லை. ஆனால் தற்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இருக்கும் வரை இறுதி முடிவு அவரிடமே இருக்கும் என்று மரியம் அலெம்சாதே குறிப்பிட்டார்.
மேற்கத்திய அரசியல் மற்றும் கலாச்சார சித்தாந்தத்திற்கு இரானில் எதிர்ப்பு தொடர்கிறது. மேற்கத்திய நாடுகளுடனான இரானின் உறவுகள் மிகவும் கசப்பானதாக மாறும்போது, அதற்கு பொருளாதார பங்காளிகள் எங்கிருந்து கிடைப்பார்கள்?
ரஷ்யா மற்றும் சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு
”இரான் தற்போது ரஷ்யா, சீனா மற்றும் ஆசியாவின் முக்கிய பொருளாதாரங்களுடன் பொருளாதாரக் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது,” என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின் வெளியுறவுக் கொள்கைத் திட்டத்தின் துணைத் தலைவரும் இயக்குநருமான சூசன் மேலோனி கூறுகிறார்.
“இரானை, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு சமமாக மாற்ற நாட்டின் தலைமை விரும்புகிறது. இந்த கூட்டணியின் மூலம் யுக்ரேன் போருக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இரானிடம் இருந்து ரஷ்யா பெற்று வருகிறது. அதே சமயம் இதன் மூலம் இரான் பொருளாதார பலன்களை பெற்று வருகிறது.”
உலகிலேயே ரஷ்யா மற்றும் இரான் மீதும்தான் மிக அதிக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தனது அணுமின் நிலையங்களில் சர்வதேச கண்காணிப்பை மறுப்பதாலும், வெளிநாடுகளில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு முக்கிய நபர்களை கொன்றதாகவும் இரான் மீது குற்றம் சாட்டப்படுவதாலும் அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த இரு நாடுகளும் பொருளாதாரத்தடைகளை தவிர்த்து வர்த்தகத்தைத் தொடர ஒருவருக்கொருவர் உதவுவதாக சூசன் மேலோனி கூறுகிறார்.
இரான் தனது ராணுவத் திறனை வலுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள் மற்றும் பிற ராணுவப் பொருட்களை பெற விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இதுபோன்ற ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இரானுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளும் பல ஆண்டுகளாக வலுப்பெற்று வருகின்றன.
இரானின் பொருளாதாரத்திற்கு சீனா முக்கியமானது. ஏனெனில் அமெரிக்காவின் தடைகள் இருந்தபோதிலும் இரானின் பெருமளவு எண்ணெயை சீனா வாங்குகிறது.
சீனாவும் ரஷ்யாவும் இரானுடன் நெருங்கிய உறவை வளர்த்துள்ளன. ஏனெனில் இரான் அமெரிக்காவின் தீவிர எதிரியாக உள்ளது என்று சூசன் மேலோனி குறிப்பிட்டார்.
ஆசியாவிலும் இரான் புதிய கூட்டணிகளை உருவாக்கி வருவதாக அவர் மேலும் கூறுகிறார். 2003 இல் சதாம் உசேன் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு இராக்கில் இரானின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இராக்கிற்கு மின்சாரம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சீனாவின் மத்தியஸ்தத்துடன் இரான், செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் தனது உறவுகளை மேம்படுத்தியுள்ளது.
ஆனால் பொருளாதாரத் தடைகளால் இரானின் பொருளாதாரம் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பைச் சந்தித்துள்ளது. அது தனது கொள்கைகளுக்காக பெரும் விலையை கொடுக்க வேண்டியதாயிற்று.
இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மாதிரி
மேற்கத்திய நாடுகளுடன் பேச்சு வார்த்தைக்கான சாத்தியகூறு
இரானின் தலைவர்கள், பிராந்தியத்தில் இருக்கும் தங்கள் அண்டை நாடுகள் மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்தலாகப்பார்க்கின்றனர் என்கிறார் அட்லாண்டிக் கவுன்சிலின் ஸ்கொக்ராஃப்ட் மத்திய கிழக்கு திட்டத்தின் ஆராய்ச்சியாளர் கிறிஸ்டின் ஃபோன்டைனெரோஸ்.
“நாட்டின் கல்வி மேம்பாடு, புதிய தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் உலக சந்தையில் ஒரு இடத்தைப் பெறுவது பற்றி யோசிப்பதற்கு பதிலாக அவர்கள் தங்கள் அரசை காப்பாற்ற விரும்புகிறார்கள். எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம்.”
ஆனால் இரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முழுமையாக நிறுத்தப்படவில்லை.
உதாரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில், கத்தாரின் மத்தியஸ்தத்துடன், கைதிகளை விடுவிப்பதற்காக இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது.
பொருளாதாரத் தடைகள் காரணமாக இரானிடமிருந்து கைப்பற்றப்பட்ட 6 பில்லியன் டாலர்களை இரானுக்கு திருப்பித்தர அமெரிக்கா தயாராக இருந்தது.
ஆனால் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்த பணத்தை இப்போதைக்கு இரானுக்கு அளிக்கப்போவதில்லை, ஏனெனில் இந்த பணம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்காவும் கத்தாரும் முடிவு செய்தன.
இரானின் உச்ச தலைவர் வாழ்நாள் முழுவதற்குமாக நியமிக்கப்படுகிறார். இப்போது அவருக்கு 84 வயதாகிறது. வாரிசு யாரும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
அடுத்த தலைவரிடம் அதிகாரம் ஒப்படைக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எல்லை தாண்டிய ஏவுகணை தாக்குதல் இந்த பணிக்கு உதவும் என்றும் கிறிஸ்டின் ஃபோன்டைனெரோஸ் கூறுகிறார்.
அரசு வலுவாக இருப்பதாகவும், எதிர்க் குழுக்களிடமிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்றும் இரானின் தலைவர்கள் தங்கள் மக்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறார்கள்.
மக்கள் நாட்டின் தலைவர்களை நம்பி அவர்களின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும். அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாலும் இது நடக்கிறது என்பது கிறிஸ்டின் ஃபோன்டைனெரோஸின் கருத்து.
இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையிலான மோதல் காரணமாக இரானின் நடவடிக்கைகள் மீதான உலகத்தின் கவனம் குறைந்துள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் போராட்டங்களை நசுக்க இரானிய அரசு இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்று கிறிஸ்டின் ஃபோன்டைனெரோஸ் கூறுகிறார்.
தடைகளை மீறியதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு பிடித்துவைத்த எண்ணெய் கப்பலை இரான், ஜனவரி மாதம் ஓமன் வளைகுடாவில் திரும்ப கைப்பற்றியது.
மேலும் மூன்று அண்டை நாடுகள் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால் இரான் இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது?
இதை அடைய முடியாது என்பது அதற்கும் தெரியும். அத்தகைய சூழ்நிலையில் அண்டை நாடுகளான அரபு நாடுகள் மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு இஸ்ரேலுடன் கூட்டணி அமைப்பதை கடினமாக்க அது விரும்புகிறது.
இதனால் பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கு குறையும். இந்த இலக்கை இரானால் அடைய முடிந்தால், கடந்த பல ஆண்டுகளாக ஹமாஸில் அது செய்த முதலீடு பலனளித்தது என்று சொல்லமுடியும்,” என்று கிறிஸ்டின் ஃபோன்டைனெரோஸ் குறிப்பிட்டார்.
இப்போது நமது முக்கிய கேள்விக்கு வருவோம். இரானுக்கு என்ன வேண்டும்? இரானியத் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை தக்கவைக்க விரும்புகிறார்கள்.
இரண்டாவதாக, இரான் மத்திய கிழக்கில் மிகவும் செல்வாக்குமிக்க நாடாக மாற விரும்புகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நேரடியாக சண்டையிடாமல், சீனா மற்றும் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து தனது பலத்தை அதிகரிக்க விரும்புகிறது என்று எங்கள் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-BBC TAMIL NEWS-