“ராமநத்தம், கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும், பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர்.

அதன்படி இவர்களது திருமணம் ராமநத்தத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று காலை நடக்க இருந்தது.

திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்திருந்தனர். மணமக்களை வாழ்த்துவதற்காக இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள் என பலர் மண்டபத்தில் குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் 18 வயது பூர்த்தியடையாத மாணவிக்கும், வாலிபருக்கும் ராமநத்தத்தில் திருமணம் நடக்க இருப்பதாக கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ராமநத்தம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

அதன்படி போலீசார் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவிக்கு தாலிகட்டுவதற்காக வாலிபர் தயார் நிலையில் இருந்தார்.

உடனே போலீசார், கல்லூரி மாணவியின் சான்றிதழ்களை வாங்கி பார்த்தபோது, அந்த மாணவிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 4 மாதங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கல்லூரி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார், 18 வயது பூர்த்தியடையாத மாணவிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும் என்றனர்.

மேலும் மணமகன் மற்றும் மாணவியின் பெற்றோர்களிடம் மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என போலீசார் எழுதி வாங்கிக் கொண்டனர்.

மேலும் கல்லூரி மாணவி, வாலிபர் ஆகிய இருவரையும் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறினர்.

தாலி கட்டும் நேரத்தில் கல்லூரி மாணவியின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருவீட்டாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பரபரப்புடன் காணப்பட்ட மண்டபம், சிறிது நேரத்திலேயே களையிழந்து காணப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்களும் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருமண விழாவுக்காக வருபவர்களுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவுகளும் வீணானது. இந்த சம்பவம் ராமநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “,

Share.
Leave A Reply

Exit mobile version