கடக்கும் நகரம் (CROSSING CITY): நைல் நதிக்கரையில் இருக்கும் ஒரு நகரத்துக்கு கடக்கும் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பெயர் இருந்து வருவதாக எகிப்து சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகின்றனர்.

மிகவும் குக்கிராமமான பெத்லகேமில் மாட்டுத்தொழுவத்தில் இயேசு பிறந்த செய்தியை கேட்ட யூதேயா தேசத்தின் (இஸ்ரேல் தேசம்) ஏரோது மன்னர் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளை கொலை செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இறை தூதரின் வழிகாட்டுதலின்படி, இயேசுவின் தந்தை யோசேப்பு, தாய் கன்னி மரியாள், குழந்தை இயேசு ஆகியோர் யூதேயா நாட்டில் இருந்து தப்பி, எகிப்து தேசத்துக்கு குடிபெயர்ந்தனர்.

அவ்வாறு குடிபெயரும்போது நைல் நதி கரையை கடந்த நகரம் தான் கடக்கும் நகரம் என அழைக்கப்படுகிறது.

இங்கு இயேசுவின் குடும்பம் வாழ்ந்த 12 குகைகளின் மேல் தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவை தப்பிக்கும் தேவாலயம் (ESCAPING CHURCHES) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

நைல் நதியில் ஏராளமான கப்பல் சவாரி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சிறிய ரக கப்பலை இயக்கும் இந்த நிறுவனங்கள் புனித பயணிகளை ஈர்க்கும் வகையில் இரவு நேரத்தில் இரவு உணவுடன் 2 மணி நேர பயண அனுபவத்தையும் அளிக்கின்றன.

நைல் நதியில் இயக்கப்படும் கப்பலில் எகிப்திய உணவு வகைகளை சுவைத்துக்கொண்டு எகிப்திய பாரம்பரிய நடனத்தையும் கண்டுகளிப்பது சுற்றுலா பயணிகளுக்கு தனி உற்சாகத்தை அளிக்கிறது.

மோசேவுக்கு கடவுள் காட்சி அளித்த முள்செடி

பாரம்பரிய யூத மதத்தின்படி மோசேயின் காலம் கி.மு. 1391- 1271 வரை உள்ளதாக நம்பப்படுகிறது.

4-ஆம் நூற்றாண்டை சேர்ந்த புனித ஜெரோம் கி.மு. 1592-இல் மோசே வாழ்ந்தார் என்றும் 17-ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த உஷ்சர் கி.மு. 1619-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்றும் மோசேயின் காலத்தை கணிக்கின்றனர்.

மோசே என்றால் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டவன் என்று பெயர். பிறப்பால் எபிரேயராக இருந்த மோசே, எகிப்து மன்னரான பார்வோனின் அரண்மனையில் எகிப்தியராக வளர்க்கப்பட்டார்.

வளர் இளம் பருவம் அடைந்த மோசே, தனது எபிரேய சகோதரர்களை தேடி சென்று பார்த்தபோது அங்கு அவர்கள் அடிமையாக தலைமேல் விறகு சுமையை தூக்கிக்கொண்டுச் சென்றனர்.

அப்போது எகிப்திய இளைஞர் ஒருவர், தனது சகோதரரை அடிக்க முயன்றபோது, அங்கு வேறு யாரும் இல்லை என்பதால் எகிப்திய இளைஞரை வெட்டி மண்ணில் புதைத்தார் (யாத்திராகமம் 2:12).இதை மன்னர் பார்வோன் அறிந்து மோசேயை கொலை செய்ய தேடியபோது, உயிருக்கு பயந்து மிதியான் தேசத்துக்கு (இன்றைய எகிப்தின் தெற்கு பகுதியான தன் சினாய் மலை) தப்பியோடினார்.

அங்கு அந்த தேசத்தின் பிரதான அதிகாரி ரெகுவேல் (எ) எத்திரேயா என்பவரின் மகள் சிப்போராளை திருமணம் செய்துகொண்டார்.

அங்கு மாமனாரின் வீட்டில் 40 ஆண்டுகள் மோசே தங்கியிருந்தார். இன்றைய கெய்ரோ நகருக்கும், மோசே தப்பியோடிய தென்சினாய் மலை பகுதிக்கும் இடையே சுமார் 700 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்.

அரண்மனை வாழ்க்கை நடத்திய மோசே, பாலைவனத்தில் வாழ்க்கையை கழிக்க வேண்டியதாயிருந்தது.

அங்கு மாமனாரின் ஆடுகளை பாலைவனத்தில் மோசே மேய்த்துக்கொண்டு “ஓரேப்’ பர்வதம் என்ற இடத்துக்குச் சென்றார்.

அங்கு எரியும் முள்செடியில் இறை தூதர் மோசேக்கு தோன்றினார். அந்த செடி எரிந்தும் வெந்து போகாமல் இருந்ததை கண்டு, செடியை நோக்கி மோசே சென்றபோது கடவுள் தோன்றி “மோசே… மோசே…!’ என இருமுறை பெயர் சொல்லி கூப்பிட்டார்.

அதற்கு மோசே “இதோ அடியேன் இருக்கிறேன்’ என்றார் (யாத்திராகமம் 3-ஆம் அதிகாரம்).இந்த எரியும் முள்செடி இப்போதும் அப்படியே காட்சி அளிக்கிறது.

முல்லை செடி போல இருக்கும் இந்த செடியின் கிளைகளை நறுக்கி உலகில் பல்வேறு நாடுகளில் வைக்க தாவரவியல் விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் எங்கும் வளரவில்லை.

இந்த முள்செடி ஒரேப் மலையில் மட்டுமே உள்ளது. சினாய் மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. உயரத்தில் இந்த இடம் உள்ளது.

மோசேவுக்கு காட்சி அளித்த கடவுள் யாத்திராகமம் 3-ஆம் அதிகாரம் 8-ஆம் வசனத்தின்படி, “எபிரேயர்களை, எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் (இஸ்ரúல் தேசம்) கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன் என்றார்.

கடவுளின் உத்தரவுபடி, எகிப்துக்கு சென்று அடிமைகளாக இருந்த எபிரேயர்களை அழைத்துச்செல்லும்படி அனுமதி கேட்டார்.

ஆனால், பார்வோன் மன்னர் அனுமதிக்கவில்லை.

– ஜெபலின் ஜான்(தொடரும்….).

“புண்ணிய பூமியில் புனிதப் பயணம் ”- 4

Share.
Leave A Reply

Exit mobile version