இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நான்கு மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதலில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகிறார்கள். ஐ.நா.வின் நிவாரண குழுக்கள் சார்பில் உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அது காசா மக்களுக்கு போதுமானதாக இல்லை.

இந்த நிலையில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டபட்டுள்ளது.

வடக்கு காசாவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்கள் உணவை வாங்குவதற்காக வரிசையில் காத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். சிறுவர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் ஆகியவற்றால் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என ஐ.நா. எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வின் குழந்தைகள் நிறுவனம் கூறும்போது, “ஊட்டச்சத்து நெருக்கடியின் விளிம்பில் காசா பகுதி உள்ளது. வடக்கு காசாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. வாரக்கணக்கில் அனைத்து மனிதாபிமான உதவிகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு காசாவில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்ட தலைவர் மைக் ரியாக் கூறும்போது, “பசி மற்றும் நோய் ஒரு கொடிய கலவையாகும். பசியுள்ள, பலவீன மான மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளான குழந்தைகள் நோய்வாய் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஆபத்தானது மற்றும் சோகமானது மற்றும் நம் கண்களுக்கு முன்பாக நடக்கிறது” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version