இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் ‘தோற்றுப்போன’ தரப்பு ஒன்று மேற்கொள்ளும் சதுரங்க ஆட்டமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான நீதிமன்ற வழக்குத் தாக்கல்கள் அமைந்துள்ளன.
கடந்த ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, செல்லுபடியற்றது.
எனவே, குறித்த இரண்டு பொதுச்சபைக் கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதுமென தெரிவித்து திருகோணமலையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக யாழ்.
மாவட்ட நீதிமன்றில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரினால் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தாக்கல்களின் பின்னணியில்தான் ‘தோற்றுப்போன தரப்பின்’ சட்ட விளையாட்டுகள் இருப்பதாக உள் ‘வீட்டு’த் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுச் செயலாளர் பதவிக்கு மீள் தெரிவு இடம்பெறக்கூடாது. அத்துடன், பொதுச் செயலாளர் பதவி பங்கிடவும் படக்கூடாது. இதற்கு கட்சியின் புதிய தலைமை இணங்கினால் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
இல்லையேல் இன்னும் இன்னும் வழக்குகள் தாக்கல் செய்வோம்’ என்ற முடிவில் இருப்பதாக தெரியவருகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்று, கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச் சபையில் பலர் இடம் பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கைத் தாக்கல் செய்தவரும் அதனைத் தெரிந்து கொண்டே வாக்களித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்போது தனது விருப்பத்துக்குரிய தலைவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளார்.
ஆனால், அவர் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்ததாலேயே இப்போது வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். தான் விரும்பிய தலைவர் வெற்றி பெற்றிருந்தால் கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச்சபையில் பலர் இடம்பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டை இவர் முன்வைத்திருக்க மாட்டார்.
இதனால்தான் இந்த வழக்குத் தாக்கல் சூழ்ச்சிகளின் பின்னணியில் ‘தோற்றுப்போனவர்’ இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும் தரப்பு பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றது.
அதாவது இலங்கை தமிழரசுக் கட்சியை உடைக்கும், புதிய தலைமையைச் செயற்படவிடாது தடுக்கும், கட்சியின் பொதுச் செயலாளராகத் தனது விசுவாசியையே நியமிக்க வேண்டும் என விடாப்பிடியாக நிற்கும் தோற்றுப்போனவரின் நடிப்பில் உருவாக்கப்பட்டதே இந்த வழக்குகள் என்பதே தமிழ்த் தேசிய விசுவாசிகளின் குற்றச்சாட்டு.
வழக்கு தாக்கல் செய்தவர்களின் இந்த நோக்கம் அல்லது நிபந்தனை இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்குக் காற்றுவாக்கில் தெரிவிக்கப்பட்ட போதும், ‘தமிழரசுக் கட்சிக்கு எதிரான ‘உள் வீட்டு’ சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
வழக்குகளைச் சந்திக்கத் தயார்’ என கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனும் புதிய தலைவர் சிவஞானம் ஸ்ரீதரனும் உறுதியாக இருப்பதனால். தமது நிபந்தனைகளை ஏற்காது விட்டால் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவும் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தப்படும் என்ற மறைமுக மிரட்டல்களிலும் ‘தோற்றுப்போன’ தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் ‘உள் வீட்டு’ தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த சூழ்ச்சிகள் பற்றிப் புரிதல்களும் எமக்குத் தெளிவாக உள்ளன. 75 வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாகக் கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில், எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். விசேடமாகக் கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.
மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன.
ஆகவே, நீதிமன்றத்தின் தீர்மானத்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன். விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இதேவேளை, கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது ‘தமிழ் கட்சிகளின் பிளவு ஆபத்தானது.
பிளவுகள் சரி செய்யப்பட்டு அரசியல் பயணங்கள் தொடர வேண்டும். தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது.
இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.
தமிழ் கட்சிகள் பிளவடைந்து முடிந்து தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுத்தப்படுவதை அவர் அறியவில்லை போலும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முச்சந்தியில் நிற்கும் நிலையில், இவ்வாறானதொரு நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கும் வறட்டு கௌரவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது விட்டிருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று ஸ்ரீதரன் தலைமையில் தலை நிமிர்ந்து நின்றிருக்கும்.
இந்தப் பிரச்சினையைச் சுமுக தீர்வு காணாது கௌரவப் பிரச்சினையாக, இரு அணிகளின் பிரச்சினையாக மாற்றினால் தந்தை செல்வா சொன்னதைச் சற்று மாற்றி, ‘இலங்கை தமிழரசுக் கட்சியை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறவே நேரிடும்.
முருகாநந்தன் தவம்