மன்னார் – வங்காலை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவரை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதால், பலத்த காயங்களுக்குள்ளான மாணவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தரம் 10இல் கல்வி கற்றுவரும் அதே பகுதியைச் சேர்ந்த மாணவரே பாடசாலையின் கணித பாட ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் மாணவனின் பெற்றோர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது :

கடந்த புதன்கிழமை (21) மாணவன் பாடசாலையின் வகுப்பறைக்கு சென்றபோது, அங்கே இரண்டு மாணவத் தலைவர்கள் இவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, மாணவனை கன்னத்தில் அறைந்து, இழுத்துச் சென்று கணித பாட ஆசிரியர் முன்னிலையில் நிறுத்தி, தங்களை எதிர்த்து பேசியதாக மாணவன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வேளை, குறித்த மாணவனை எந்த கேள்வியும் ஆசிரியர் கேட்காமல், கன்னத்தில் அறைந்தும் மூர்க்கத்தனமாக அடித்தும் தாக்கியுள்ளார். அதனால், மாணவன் இயலாத நிலையில் வகுப்பறைக்குச் சென்றுள்ளார்.

பின்னர், மைதானத்துக்கு வருமாறு மற்றுமொரு ஆசிரியர் அழைக்க, தாக்குதலால் ஏற்பட்ட வலி காரணமாக தாமதித்து மாணவன் மைதானத்துக்கு சென்றுள்ளார். தாமதமாக வந்ததற்காக மைதானத்தில் மற்றுமொரு ஆசிரியரும் குறித்த மாணவனை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து ஆசிரியர்களால் தாக்கப்பட்ட மாணவன் வீட்டுக்கு சென்ற பின்னர், சுகவீனமடைந்து, அன்று மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவன் சிகிச்சை பெற்று வரும் வேளையில், கடுமையான தாக்குதலின் காரணமாக மாணவனின் ஒரு காதின் கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்படவில்லை எனவும், அந்த ஆசிரியரை காப்பாற்ற பாடசாலை நிர்வாகம் முயற்சிப்பதாகவும் மாணவனின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவனை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி, ஆசிரியர் தாக்கியமை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க செயற்பட்டு வருகிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version