ரஷ்ய அரசுக்கு ஆதரவாகப் போரிட்டுவரும் வாக்னர் தனியார் ராணுவத்தில் பல இந்தியர்கள் இணைந்துள்ளனர் என்றும், அவர்கள் உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளார்கள் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் மாஸ்கோ நகரில் உள்ள ரஷ்ய அதிகாரிகளை தொடர்புகொண்டு போர்முனையில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

வாக்னர் ராணுவம் என்பது, ரஷ்ய அரசின் உதவியுடன் செயல்பட்டுவரும் தனியார் ராணுவமாகும். உக்ரைன் நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக வாக்னர் ராணுவமும் போரில் ஈடுபட்டு வருகிறது.
வாக்னர்

வாக்னர்ட்விட்டர்

‘துபாய் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு பணிகளில் பல இந்தியர்கள் ரஷ்ய படைகளுக்கு பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பலர் உக்ரைன் போர்முனையில் உள்ளனர்’ என வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்திய தூதரகம் மூலம் ரஷ்ய அரசை இந்திய அதிகாரிகள் தொடர்புகொண்டுள்ளனர்.

போர்முனைகளில் உள்ளவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் விரைவாக அவர்களை அங்கிருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய தூதரக அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியர்கள் கவனமாக இருக்கும்படியும், போர்க்களப் பகுதியை தவிர்க்க வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெயஸ்வால் தெரிவித்தார்.

இன்று அவர் வெளியிட்ட செய்தியில், ’சில இந்தியர்கள் ரஷ்யாவில் ராணுவத்திற்கு பணிபுரிவதற்காகச் சென்று இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவந்துள்ளது’ என குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் விரைவில் ரஷ்ய ராணுவத்துக்கு பணிபுரியும் இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து ரஷ்ய அதிகாரிகளை தொடர்புகொண்டு உள்ளதாக ஜெயஸ்வால் தெரிவித்தார்.

இந்தியர்கள் போர் நடக்கும் பகுதிக்குச் செல்லக்கூடாது எனவும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வெளிநாட்டில் வேலை தேடும் இந்தியர்களுக்கு அறிவுரை அளிக்கும் விதத்தில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்திய இளைஞர்களை போலவே ரஷ்ய ராணுவத்துக்கு பணிபுரிந்து வருகின்றனர். இதில் பலர் வாக்னர் தனியார் ராணுவத்திற்கு பணிபுரிகிறார்கள் என அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, ஜம்மு, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் இத்தகைய பணிகளில் இணைந்துள்ளனர்.

வாக்னர் ராணுவம் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரஷ்யா சார்பாக போரில் ஈடுபட்டு வந்தது.

சென்ற வருடம் வாக்னர் ராணுவத்தின் தலைவரான பிரிக்கோஜின், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டது சர்ச்சையானது. அதன் பிறகு மர்மமான சூழலில் பிரிக்கோஜின் விமான விபத்தில் மரணம் அடைந்தார்.

 

வாக்னர் படை

ரஷ்ய ராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பான சரியான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என்கிற நிலையில், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ரஷ்யாவில் இத்தகைய பணிகளில் இணைந்துள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலோர் உக்ரைன் போர்முனையில் பணிபுரிந்து வருகின்றனர். ராணுவத்தில் உதவியாளர்களாகவும் அல்லது பொருட்களைச் சுமந்து செல்பவர்களாகவும் இவர்கள் பணிபுரிந்து வருவதாக மாஸ்கோ மூலம் தகவல் வந்துள்ளது.

ஆனால் இதில் சிலர் தங்களை போர் நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குடும்பத்தினர் மூலம் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகார்களின் அடிப்படையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அங்குள்ள ரஷ்ய அதிகாரிகளிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை மீட்க வலியுறுத்தி வருகின்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் வரை மாதச் சம்பளம் மற்றும் கூடுதலாகச் சலுகைகள் என அறிவிக்கப்பட்ட காரணத்தால் பல இந்தியர்கள் ரஷ்ய ராணுவம் மற்றும் வாகனர் ராணுவம் ஆகியவற்றில் உதவியாளர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள் என இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கிட்டியுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

கணிசமாக வருமானம் கிட்டும் என இத்தகைய பணிகளில் இணைந்த பலர், உக்ரைன் போர் முனையில் பணி புரிவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என தற்போது அச்சத்தில் உள்ளனர்.

வேலையில் சேர்த்துவிட்ட ஏஜென்ட்கள் சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை எனவும் பல ஒப்பந்தங்கள் ரஷ்ய மொழியில் இருந்ததால் அவற்றைப் படிக்க முடியாமலேயே கையெழுத்துவிட்டதாகவும் இவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏஜெண்ட்டுகள் பல லட்சம் ரூபாய்களை வாங்கிக்கொண்டு இத்தகைய ஆபத்தான பணியில் சேர்த்துவிட்டு ஏமாற்றியதாக குடும்பத்தினர் புகார் அளித்து வருகின்றனர்.

அதேசமயத்தில் நேரடியாக மாஸ்கோ சென்று ரஷ்ய அதிகாரிகளை தொடர்புகொண்டு இத்தகைய பணிகளில் இணைந்தவர்கள் ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய சிக்கல் ஏற்படவில்லை.

நல்ல வருமானம் ஈட்டலாம் என நினைத்து வெளிநாட்டுப் பணிகளில் இணைந்தவர்கள் தற்போது உயிரை காப்பாற்றும் அச்சத்தில் உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version