வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கிவிட்டு கைத்தொலைபேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது அவரை தாக்கி, அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 38 வயதுடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேக நபர்கள் இருவரும் முதியவரிடம் இருந்து பறித்துச் சென்ற கைத்தொலைபேசியை வவுனியா நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொடுத்து, மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், கைத்தொலைபேசியை பெற்றுக்கொண்ட மதுபானசாலை ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து முதியவரின் கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைதான மூவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version