வேளச்சேரி:சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன். 26 வயது வாலிபரான இவர் ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஷர்மியும், பிரவீனை விரும்பினார்.
இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஷர்மியின் அண்ணன் தினேஷ், பிரவீனின் சாதியை சுட்டிக்காட்டி, நீ அவனை திருமணம் செய்யக்கூடாது என்று தங்கையை எச்சரித்து உள்ளார்.
வாலிபர் பிரவீனை மறந்து விடு, உனக்கு நமது சாதியிலேயே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று வீட்டில் கூறி வந்துள்ளனர். ஆனால் ஷர்மி இதனை ஏற்க மறுத்துள்ளார்.
இருப்பினும் மனதை மாற்றி எப்படியாவது பிரவீனிடம் இருந்து ஷர்மியை பிரித்துவிட வேண்டும் என்பதில் அண்ணன் தினேசும் அவரது குடும்பத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.
ஆனால் ஷர்மியோ தனது பெற்றோரின் பேச்சை கேட்காமல் பிரவீனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உள்ளனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரவீன், ஷர்மியை அழைத்துச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஷர்மியின் குடும்பத்தினருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்து முடிந்து உள்ளது. இதனால் பிரவீன், ஷர்மியின் அண்ணன் தினேஷ் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக தனது நண்பர்களிடம் சொல்லி, தினேஷ் வருத்தப்பட்டு உள்ளார். எனது தங்கையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என்று கூறி அவர் ஆதங்கப்பட்டு வந்துள்ளார்.
இதை தொடர்ந்து பிரவீனை கொலை செய்ய தினேஷ் திட்டம் போட்டார். கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தினேசும் அவரது நண்பர்கள் 3 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிரவீனை சுற்றி வளைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் அவர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் 4 பேரும் நவீனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. அலறி துடித்தபடியே பிரவீன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிச்சென்று பிரவீனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரவீன் உயிரிழந்தார்.
நேற்று இரவு 9 மணி அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்த நேரத்திலேயே நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரவீனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட வாலிபரும், கொலை செய்த வாலிபர்களும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.