இலங்கை மீதான அமெரிக்காவின் கவனம் அதிகளவில் குவிந்துள்ள இந்தத் தருணத்தில், வொஷிங்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ, வெளியிட்டிருக்கின்ற கருத்து கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

இந்தியா போன்ற சகாக்களுடன் இணைந்து அமெரிக்கா முன்னெடுத்த, இந்தோ – பசுபிக் மூலோபாயம், வெற்றி பெற்றுள்ளமைக்கான உதாரணம் இலங்கை என்று அவர் கூறியிருக்கிறார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டிருப்பதையே அவர், இந்தோ – பசுபிக் மூலோபாயத்தின் வெற்றியாக குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்கும், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

இந்த கேள்விக்கு விடை தேடினால் தான், இந்த விவகாரத்தில் அமெரிக்கா எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்கா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தோ -பசுபிக் மூலோபாயம் என்ற கொள்கை திட்டத்தை வெளியிட்டது.

அதன் அடிப்படை நோக்கம், சுதந்திரமான, வெளிப்படையான, செழிப்பான, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட, பாதுகாப்பான பிராந்தியத்தை உருவாக்குவது தான்.

இன்னும் வெளிப்படையாக கூறுவதானால் சீனா இரகசியமாக முன்னெடுத்து வருகின்ற, கடல் ஆதிக்கம் மற்றும் பொருளாதார விரிவாக்க திட்டத்தின், ஆபத்தை உணர்ந்து, அதற்கு மாற்றாக அமெரிக்கா முன் வைத்திருக்கின்ற திட்டம் தான் இந்தோ- பசுபிக் மூலோபாயம்.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் கடல்வழிப் பயணங்கள் சுதந்திரமாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின், பொருளாதார செழிப்பில் அக்கறை காட்ட வேண்டும். அவற்றின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அமெரிக்க மூலோபாயம் வரையப்பட்டிருக்கிறது.

சீனாவின் பி.ஆர்.ஐ. எனப்படும் அணை மற்றும் பாதை திட்டத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமெரிக்கா இந்த மூலோபாயத்தை செதுக்கியது.

உலகம் முழுவதையும், உள்ளடக்கியதாக இது உருவாக்கப்படவில்லை. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்தி மட்டுமே, அமெரிக்கா இதனை செயற்படுத்துகிறது.

ஏனென்றால் உலக சனத்தொகையில் பாதியளவு மக்கள் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தான் வாழுகின்றனர். உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்த பிராந்தியமே கொண்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஏழு இராணுவங்கள் இந்த பிராந்தியத்தில் தான் இருக்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே அமெரிக்க இராணுவத்தின் பெரும்பகுதியான படையினர் நிலை கொண்டிருப்பது, இந்தப்பிராந்தியத்தில் தான்.

மூன்று மில்லியன் அமெரிக்கர்கள் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பணியாற்றுகிறார்கள். 900 பில்லியன் டொலர்கள் அமெரிக்க நேரடி முதலீடுகள், இந்த பிராந்தியத்தில் இருக்கின்றன.

எனவே, முக்கியத்துவம் மிக்க பிராந்தியத்தை மையப்படுத்தி, அமெரிக்கா இந்த மூலோபாயத்தை வகுத்திருப்பது ஆச்சரியமல்ல.

இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு பொருளாதார செழிப்பு மற்றும் பிற விடயங்களில், சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வருவதை அமெரிக்காவினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அதனால் தான் சீனாவுக்கு போட்டியை கொடுக்கக் கூடிய வகையில்- பெருகி வரும் அதன் பலத்தையும் செல்வாக்கையும் உடைக்கும் வகையில், அமெரிக்கா இந்தோ- பசுபிக் மூலோபாயத் திட்டத்தை செயற்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்திருப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

அதிலும் முக்கியமான வெற்றியாக குறிப்பிட்டிருப்பது இலங்கையில், ஈட்டியிருக்கின்ற வெற்றியைத் தான்.

2019 ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டு வந்து போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றது, அமெரிக்காவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

ஏனென்றால் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன தலையீட்டுக்கு அவரது வெற்றி சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற அச்சம் காணப்பட்டது. அமெரிக்காவின் அந்த எதிர்பார்ப்புக்கு அமைவாகவே, கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளும் அமைந்திருந்தன.

இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர் ஒருமுறை கூட, சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளா விட்டாலும், சீனாவின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாகவே நடந்து கொண்டிருந்தார்.

சீனாவின் கடன்பொறி இராஜதந்திரத்திற்குள் இலங்கை ஏற்கனவே அகப்பட்டிருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி, நாட்டில் மேலும் நெருக்கடியை உருவாக்கியது.

மேற்குலகத்திலிருந்து விலகி சீனாவின் பக்கம் சாயத் தொடங்கிய அவரது போக்கு, கொரோனா பெரும் தொற்றுக்கு சீனாவே காரணம் என உலகளவில் உருவாகி இருந்த கருத்து, பெருந்தொற்றினால் சீனாவைச் சார்ந்திருந்த பொருளாதார காரணிகளில் ஏற்பட்டிருந்த சடுதியான வீழ்ச்சி, போன்ற காரணங்களால், இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் விழுகின்ற நிலை உருவானது.

அந்தக் கட்டத்தில் சீனாவிடம் இருந்து – சீனாவின் கடன்பொறி இராஜதந்திரத்துக்குள் இருந்து இலங்கையை வெளியேற்றுவதில், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கூட்டான செயற்திட்டத்தை முன்னெடுத்தன.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிப் போயிருந்த நிலையில் -அது மேலும் சீனாவின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாத வகையில்- அமெரிக்க- இந்திய இராஜதந்திரம் முன்னெடுக்கப்பட்டது.

அதற்காக இந்தியா முன்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு, வேறு எந்த நாட்டுக்கும் வழங்காத அளவில், இலங்கைக்கு மிகக் குறுகிய காலகட்டத்தில், நான்கு பில்லியன் டொலர்களை வழங்கியது.

அதன் ஊடாக, இலங்கை முற்று முழுதாக வங்குரோத்து நிலையை அடைந்து விடாதபடி பாதுகாக்கப்பட்டது. அத்துடன் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்ற சூழலும் உருவாக்கப்பட்டது.

இதனால் மீண்டும் சீனாவிடம் கடன் பெறுகின்ற- அதன் பொறியில் சிக்கிக் கொள்ளுகின்ற நிலை இலங்கைக்கு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

-ஹரிகரன்

Share.
Leave A Reply

Exit mobile version