ரஃபா எல்லைக் கடவை என்பது எகிப்துக்கும் பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கும் இடையே உள்ள ஒரேயொரு கடவைப்பகுதியாகும். இது எகிப்து – பலஸ்தீன் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ளது.

எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 2007 உடன்படிக்கையின்படி, எகிப்து இந்தக் கடவையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனால் ரஃபா கடவையின் ஊடாக இறக்குமதிகள் செய்வதாயின் இஸ்ரேலின் ஒப்புதல் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது.

ரஃபா எல்லைக்கடவை திறக்கப்பட்டு தேவையான நீர், உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்செல்ல ட்ரக்குகளை அனுமதித்தால், அமெரிக்க-ஐரோப்பிய இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தின் விளைவாக பசியால் வாடும் பலஸ்தீனர்களுக்கு ஏற்படும் துயரத்தைத் தவிர்க்கலாம்.

போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் சுமார் ஒருஇலட்சம் பேர் கொல்லப்பட்டும், காயமடைந்தும், காணாமல் போயுமுள்ளனர் என்று ஐ.நா. சபை கூறுகிறது. ‘அசோசியேட்டட் பிரஸ்’ மேற்கோள் காட்டியுள்ள செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வின்படி, வடக்கு காஸாவில் உள்ள அனைத்து கட்டடங்களில் மூன்றில் இரண்டு பகுதியும், தெற்கு கான் யூனிஸ் பகுதியில் கால் பகுதியும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.

முழு நிலப்பரப்பிலும், சுமார் 33 சதவீத கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. காஸா மீதான இஸ்ரேலிய இனப்படுகொலையினால் 85 சதவீத மக்கள் உள்ளக இடம்பெயர்வுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஹமாஸின் தாக்குதல்களுக்கு அடுத்த நாளான கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இஸ்ரேல் பலஸ்தீனர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் தடுத்து நிறுத்தியது.

கண்மூடித்தனமான மற்றும் இடைவிடாத வான்வழித் தாக்குதல்களினால் பச்சிளம் குழந்தைகள் உட்பட பலஸ்தீனர்களைக் கொன்றதுடன் கட்டடங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், மஸ்ஜித்கள் என்று அனைத்து கட்டடங்களையும் அழித்த இஸ்ரேல் காஸாவை கொலைக்களமாக மாற்றியது.

இஸ்ரேலும் அதன் அமெரிக்க ஐரோப்பிய பங்காளிகளும் சுமார் இரண்டு மில்லியன் பலஸ்தீனர்களை கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் உணவு, நீர், மருந்து இல்லாமல் தற்காலிக கூடாரங்களில் வாழ நிர்ப்பந்தித்துள்ளதோடு அவர்களை பட்டினியால் மடிவதற்கு இடமளித்துள்ளன. இஸ்ரேலிய குண்டுவீச்சினால் எந்நேரத்திலும் மரணத்தை எதிர்நோக்கி பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் பலஸ்தீனர்களுக்கு உதவுவதற்கு எகிப்து மறுத்துவிட்டது.

எகிப்து முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ரஃபா கடவையைத் திறந்து பலஸ்தீனர்களின் துன்பங்களைப் போக்குவதற்கு உதவ வேண்டுமென்று கோபாவேசத்துடன் கோருகின்றனர். இருப்பினும் எகிப்திய சர்வாதிகார ஆட்சியாளர் அப்துல் ஃபத்தாஹ் அல் சிசி, ரஃபா எல்லைக் கடவையைத் திறக்க மறுத்துவிட்டார்.

இவர் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் சார்பாக சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் பதினொரு பில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்டவராவார்.

2009 ஜனவரியில் ஹமாஸை முடிவுக்குக் கொண்டுவரும் நம்பிக்கையில் 2008 டிசம்பரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரித்த மறைந்த எகிப்திய சர்வாதிகாரி ஹூஸ்னி முபாரக் ஏற்றுக்கொண்ட அதேகொள்கையையே சிசியும் கைக்கொண்டார்.

இக்கொள்கையை நியாயப்படுத்திய எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமேஹ் ~{க்ரி, இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதற்கு தமது நாடு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

போரினால் அகதிகளாக்கப்பட்ட 1.4மில்லியனுக்கும் அதிகமான மக்களைக்கொண்ட ரஃபாவின் மீது ‘எஞ்சியிருக்கும் ஹமாஸ் போர் வீரர்களை தோற்கடித்தல்’ என்ற போர்வையில் இஸ்ரேல் இராணுவம் தரைவழித்தாக்குதலை திட்டமிட்டிருக்கும் நேரத்தில் அவர் இதனைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளையும் சட்டங்களையும் மீறி பலஸ்தீனர்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்து அவர்களை பட்டினியில் கிடத்தி பாதுகாக்கப்படும் இஸ்ரேலுடனான இந்த உடன்படிக்கையில் என்ன புனிதத்துவம் உள்ளது என்பதே இப்போதைய கேள்வியாகிறது.

‘காஸாவில் நிகழும் சம்பவங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையே பிரதிபலிக்கிறது.

இதுவறுமையால் பாதிக்கப்பட்ட மற்றும் எத்தகைய பாதுகாப்பும் அற்ற மக்களுக்கு எதிராக நவீன அமெரிக்க ஆயுதங்களைக் கொண்ட பாரிய இராணுவ சக்தியின் அத்துமீறல்’ என்று கெய்ரோவில் வெளியாகும் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

எகிப்திய மக்களின் உளக்குமுறல்களை அதிகரித்த ‘காஸா மீதான போர்’ என்ற தலைப்பிலான கட்டுரையொன்றில் பத்தி எழுத்தாளர் ரீம் அபூ அல் பழ்ல், ‘இந்த இனப்படுகொலையை கண்கூடாக காணும் அவர்கள் மேற்கத்திய தயாரிப்புகளை புறக்கணிப்பது முதல் எதிர்ப்பு பேரணிகளை செய்வது வரை கடுமையாக ஈடுபடத்தூண்டப்பட்டுள்ளனர்’ என்கிறார்.

எகிப்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் இஸ்ரேலுடனான அரசியல் உறவுகளின் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விட்டன.

பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் மத்தியில் தினசரி உயிர்வாழ்வதற்கு முடியாத நிலை மில்லியன்கணக்கான எகிப்தியர்களைத் தூண்டிவிட்டன.

எகிப்தியர்களும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரேபியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நேரிய சிந்தனையாளர்களும் கேட்கும் கேள்வி, அரேபிய சர்வாதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு எகிப்தும் மத்திய கிழக்கின் பிற நாடுகளும் எவ்வாறு பாராமுகமாக இருக்க முடியும் என்பதாகும்.

இஸ்ரேல், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்காளிகள் ஆகியோர் அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அத்தகைய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்பதை அறிந்திருந்தனர்.

ஏனெனில் எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்திலிருந்து உத்வேகம் பெற்றதொரு இயக்கமாகக் கருதி ஹமாஸை அவர்கள் நசுக்க விரும்புகிறார்கள்.

இது பலஸ்தீனர்களின் துரதிர்ஷ்டமேயாகும். உண்மையில் இஸ்லாம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலுக்கு மட்டுமல்லாது அரேபிய கொடுங்கோலர்களுக்கும் பொதுவான எதிரியாக கருதப்படுகின்றது.

சமீபத்திய அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 30ஆயிரம் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு இலட்சக்கணக்கான மக்கள் அதன் எல்லைக்கு துரத்தியடிக்கப்பட்ட போதிலும், காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள எகிப்து பெரிதாக எதுவும் செய்யவில்லை.

எவ்வாறாயினும் காஸாவின் பலஸ்தீனர்களை ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஏற்பதில் எகிப்து ஏற்கனவே முழுமை பெறாத உடன்பாட்டை எட்டியுள்ளது என்பதற்கான மிகவும் வலுவான சமிக்ஞைகள் உள்ளன.

இது காஸாவிலிருந்து பலஸ்தீனர்களை அகற்றி இனச்சுத்திகரிப்புச் செய்வதற்கு இஸ்ரேலிற்கு உதவியாக அமைகின்றது.

எகிப்து இதுவரை ஒவ்வொரு இஸ்ரேலிய நிலைப்பாட்டுக்கும் அடிபணிந்தே வந்துள்ளது. உதாரணமாக, பாதிக்கப்பட்டோருக்கான உதவியைப் பொறுத்தமட்டில், ‘காஸாவிற்கு நேரடியாக உதவிகளை அனுப்ப வேண்டாம் என்றும் முற்றுகையைத் தளர்த்த வேண்டாம் என்றும் எகிப்துக்கு கூறப்பட்டது.

எகிப்து அதனை ஏற்றுக்கொண்டது. அவர்கள் ரஃபாவிலிருந்து 40 கிலோமீற்றர் தெற்கேயுள்ள நிட்சானா மற்றும் அல்-அவ்ஜா வழியாக உதவிகளை அனுப்பினார்கள். அவை முதலில் இஸ்ரேலியர்களால் சரிபார்க்கப்பட வேண்டும், பிறகு அவ்வுதவிகள் கிடைக்குமா என்பதை இஸ்ரேலியர்களே முடிவு செய்வார்கள்.’

காயமடைந்த பலஸ்தீனர்கள், சாதாரண பயணிகள் எகிப்துக்கு அனுப்பப்பட முன் அதனை இஸ்ரேல் கையெழுத்திட்டு அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

‘கப்பல் போக்குவரத்து உதவி மூலம் எகிப்து இலாபம் ஈட்டுவது மட்டுமே உண்மையாகும்’ என்று உளவுத்துறையுடன் தொடர்புடைய ஒரு நிறுவனமான ஆநுநு குறிப்பிடுவதுடன் காஸாவிற்கு உதவி செய்வதற்கான உதவி குழுக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான டாலர்களையும் வசூலிக்கிறது.

இஸ்ரேலின் அண்டை நாடான மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட எகிப்தின் வெட்கக்கேடான நிலையே இதுவாகும். அந்நாடு இல்லாமல் இஸ்ரேலுடன் சமாதானமோ போரோ இருக்க முடியாது.

லத்தீப் பாரூக்

தமிழில் : பிஷ்ருன் நதா மன்சூர்

 

Share.
Leave A Reply

Exit mobile version