நேற்று, “Face the Nation” என்ற CBS செய்தியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ரஃபா மீது தாக்குதல் நடத்த அவர் உத்தரவிடப்போவதாக கூறினார்.
காஸாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, ரஃபாவில் உள்ள கூடார நகரங்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு மத்தியில் கிட்டத்தட்ட 30,000 பாலஸ்தீனியர்கள் இறந்ததால் அவர்கள் அங்கு பயங்கரமான சூழ்நிலையில் வாழ்கின்றனர்.
ரஃபாவில் உள்ள பாதுகாப்பற்ற அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய தாக்குதல், பேரழிவு தரும் புதிய பாலஸ்தீனிய மக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தும், மேலும் அண்டை நாடான எகிப்து மற்றும் பிற பிராந்திய சக்திகளுடன் ஒரு பரந்த போரைத் தூண்டும் அபாயத்தையும் கொண்டுள்ளது.
“ஹமாஸ் பயங்கரவாதிகளின் 24 பட்டாலியன்களில் 18 படைகளை நாங்கள் ஏற்கனவே அழித்துவிட்டோம், அவற்றில் நான்கு ரஃபாவில் குவிக்கப்பட்டுள்ளன. கடைசி ஹமாஸ் கோட்டையை நாம் கவனிக்காமல் விட்டுவிட முடியாது. தெளிவாக நாம் அதை செய்ய வேண்டும்” என்று மேலும் தெரிவித்தார்.
ரஃபா மீதான தாக்குதலுக்கு தனக்கு வாஷிங்டனின் ஆதரவு இருப்பதாக நெதன்யாகு கூறினார்: “நாங்கள் இந்த விஷயத்தில் அமெரிக்காவுடன் ஒரே பக்கத்தில் இருக்கிறோம்.”
காஸாவில் ஹமாஸ் படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ரஃபாவை தாக்கும் திட்டத்தை இஸ்ரேலிய ஆயுதப்படைகள் கைவிடாது என்றும் நெதன்யாகு கூறினார்.
அவர் இவ்வாறு கூறினார், “நாங்கள் அதை விட்டுவிடப் போவதில்லை. எங்களிடம் பணயக்கைதிகள் குறித்த ஒரு ஒப்பந்தம் இருந்தால், அது சற்று தாமதமாகும்.
ஆனால் அது நடக்கும். எங்களிடம் ஒப்பந்தம் இல்லை என்றால், நாங்கள் அதை எப்படியும் செய்வோம். அது செய்யப்பட வேண்டும். ஏனென்றால் மொத்த வெற்றியே நமது இலக்கு, முழு வெற்றியும் அடையக்கூடியது” என்று குறிப்பிட்டார்.
நெதன்யாகு ரஃபாவைத் தாக்கும் திட்டத்தின் இனப்படுகொலை தாக்கங்களை குறைத்து மதிப்பிட்டு கூற முயன்றார். சிபிஎஸ் பத்திரிகையாளர் மார்கரெட் பிரென்னனிடம் பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படுமா என்று கேட்டதற்கு, ரஃபாவின் 1.4 மில்லியன் அகதிகளை “ரஃபாவின் வடக்கே, நாங்கள் ஏற்கனவே சண்டையிட்டு முடித்த இடங்களுக்கு” தனது படைகள் நகர்த்தும் என்றும், “சண்டையின் தீவிரமான கட்டம் முடிவடைவதற்கு வாரங்கள் ஆகும்-மாதங்கள் அல்ல,” என்றும் அவர் கூறினார்.
நெதன்யாகு குடிமக்களுக்கான அச்சுறுத்தலைக் குறைத்து கூறுவது, அவரது கூற்றுக்கள் தீவிரமான சண்டை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது போன்ற ஒரு பொய்யாகும். நெதன்யாகு எங்கு செல்லச் சொன்னாலும் துப்பாக்கி முனையில் நகர வேண்டும் என்ற இஸ்ரேலிய துருப்புக்களின் உத்தரவை ரஃபாவில் உள்ள பொதுமக்கள் பின்பற்ற மறுத்தால் என்ன நடக்கும் என்று அவர் விளக்கவில்லை.
ஆனால், உண்மையில், ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதல் காஸாவில் இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் போரின் பரந்த விரிவாக்கத்தை அச்சுறுத்துகிறது.
இஸ்ரேலிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் எகிப்தின் இராணுவ சர்வாதிகாரத்தின் மீது பாலஸ்தீனியர்களுக்கான தடுப்பு முகாம்களை கட்டும்படி அழுத்தம் கொடுக்கின்றனர் – அது இஸ்ரேலிய துருப்புக்கள் அவர்களை வடக்கே அல்ல, ரஃபாவிலிருந்து தெற்கே, காஸா பகுதிக்கு வெளியே மற்றும் எகிப்திற்குள் தள்ளும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஆகும்.
இது 1978 கேம்ப் டேவிட் உடன்படிக்கை மற்றும் 1979 ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான எகிப்தின் சமாதான உடன்படிக்கையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எகிப்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
“அங்கே பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரஃபாவை மேலும் இராணுவ விரிவாக்கத்தின் கீழ் வைப்பதில் மட்டுப்படுத்தப்பட்ட இடமும் பெரும் ஆபத்தும் உள்ளது” என்று எகிப்திய வெளியுறவு மந்திரி சமேஹ் ஷோக்ரி பிப்ரவரி 10 செய்தியாளர் கூட்டத்தில் கூறினார், ரஃபா மீதான தாக்குதல் “மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.” என்று மேலும் அவர் கூறினார்.
ஷோக்ரி பேசுவதற்கு முந்தைய நாள், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ரஃபா மீதான தாக்குதல் பற்றி இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அநாமதேய எகிப்திய இராஜதந்திரிகள் நடத்திய பேச்சுக்களை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது.
“இஸ்ரேலிய அதிகாரிகள் தரைவழிப் படையெடுப்பு தொடர்பான சில ஒத்துழைப்பு குறித்து எகிப்தை உடன்பட வைக்க முயற்சிக்கின்றனர்,
அதை எகிப்திய அதிகாரிகள் எதிர்க்கின்றனர் என்று அவர்கள் கூறினர்,” என்று ஜேர்னல் எழுதியது. ரஃபாவுக்கு எதிராக இப்போது நெத்தன்யாகு தயாராகி வரும் தாக்குதல் வகையானது போருக்கு வழிவகுக்கும் என்று எகிப்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கட்டுரையின் படி: “ யாரேனும் பாலஸ்தீனியர்கள் சினாய் தீபகற்பத்திற்குள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டால் அல்லது இஸ்ரேலிய துருப்புக்கள் ரஃபாவிற்குள் நுழைந்தால், இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் எச்சரித்தனர்.
பாலஸ்தீனியர்கள் வெள்ளம் போன்று போர் மண்டலத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும் என்று எகிப்து அஞ்சுகிறது, அதனால் அதன் எல்லை வேலிகளை அது வலுப்படுத்துகிறது, கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சென்சார்கள் ஆகியவற்றைச் சேர்த்து வருகிறது.”
தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கும் நோக்கில் 2013 ஆட்சிக் கவிழ்ப்பில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றிய எகிப்திய இராணுவ ஆட்சி, காஸாவில் இருந்து எகிப்திற்குள் பாலஸ்தீனியர்களின் திரளான வரவை கண்டு அஞ்சுகிறது.
அதற்கு ஒரு பகுதிக் காரணமாக இருப்பது, எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புடன் காஸாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகள் அரசியல் அனுதாபத்துடன் இருப்பது தான்.
இருப்பினும், இன்னும் பரந்த அளவில், காஸாவிலிருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் பாலஸ்தீனிய மக்களின் சிறைக் காவலர்களாக சேவை செய்ய அவர்கள் உடன்படுவார்களாயின் அது குறித்து எகிப்திய மற்றும் மத்திய கிழக்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வெடித்தெழக்கூடிய கோபம் குறித்து அவர்கள் அஞ்சுகின்றனர்.
ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள், எகிப்து மீதான அழுத்தத்தை மட்டும் தீவிரப்படுத்துவதற்கு சபதம் எடுக்கவில்லை, மாறாக, வடக்கே லெபனான் மீதான அவர்களது தாக்குதல்களையும் தீவிரப்படுத்துகின்றனர்.
நேற்று, இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கலெண்ட், லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் குறிவைத்து தாக்கும் படுகொலைத் திட்டம் வெற்றியடைந்து வருவதாகவும், தெற்கே காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட, தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ரஃபா மீதான தாக்குதலுக்கான இஸ்ரேலிய அதிகாரிகளின் அழைப்பு, காஸா இனப்படுகொலையை செயல்படுத்துவதில் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் உடந்தையாக இருப்பதை அம்பலப்படுத்துகிறது.
ரஃபா மீதான திட்டமிட்ட இஸ்ரேலிய தாக்குதல் குறித்து வெற்று, பாசாங்குத்தனமான எச்சரிக்கைகளை அவர்கள் செய்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி தாக்குதல் ஒரு “பேரழிவு” என்று கூறினார், அதே நேரத்தில் ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இருவரும் இது ஒரு “மனிதாபிமான பேரழிவிற்கு” வழிவகுக்கும் என்று கூறினர்..
அதே நேரத்தில், அவர்கள் அனைவரும் இனப்படுகொலையை நிகழ்த்த இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதம் வழங்குகின்றனர்.
மேலும் அவர்கள் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகக் கருதும் எவரையும் அச்சுறுத்துகின்றனர் அல்லது தாக்குகின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஜெட் விமானங்கள் யேமனில் உள்ள 18 ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது குண்டு வீசித் தாக்கின.
இதில் ஆயுதங்கள் சேமிப்பு வசதிகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ராடார்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடங்கும். இது இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல் மீது செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக இருந்தது.
இந்த தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், அமெரிக்க தாக்குதல்கள் “ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளின் திறன்களை மேலும் சீர்குலைக்கும் மற்றும் சீரழிக்கும்” என்றார்.
அமெரிக்க-இங்கிலாந்தின் அச்சுறுத்தல்களை மீறி, செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கிக்கொண்டே இருப்போம் என்று ஹவுதிகள் கூறினர்.
அவர்களின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி, “செங்கடல் மற்றும் அரபிக் கடல்களில் உள்ள அனைத்து விரோத இலக்குகளுக்கு எதிராக மிகவும் தரமான இராணுவ நடவடிக்கைகளுடன் அமெரிக்க-பிரிட்டிஷ் விரிவாக்கத்தை எதிர்கொள்வதாக” உறுதியளித்தார்.
ஹவுதிகள், “பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் மத, தார்மீக மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காஸா பகுதியில் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை அவர்களின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படாது.” என்று கூறினார்.
சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை, ஏகாதிபத்திய-ஆதரவு போர் உலகம் முழுவதும் வெகுஜன எதிர்ப்புகளை தூண்டுகிறது மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் இஸ்ரேலுக்குள்ளும் இது வளர்ச்சியடைந்து வருகிறது.
இன்றுவரை நடந்துவரும் போரில், கடந்த சனிக்கிழமையன்று நடந்த மிகப்பெரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் டெல் அவிவை உலுக்கியது. புதிய தேர்தல்கள் மற்றும் நெதன்யாகுவை அகற்றக் கோரி ஆயிரக்கணக்கானோர் நகர மையத்தில் தெருக்களை அடைத்தனர்.
நெத்தன்யாகு அரசாங்கம் தண்ணீர் பீரங்கி மற்றும் குதிரை ஏந்திய போலீசாரை ஏவிவிட்டு தாக்கி போராட்டத்தை கலைக்க முயன்றது.
அக்டோபர் 7 கிளர்ச்சியின்போது ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகளால் சிறைப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள், போர் தொடங்கியதில் இருந்து டெல் அவிவில் 20 வது வாராந்திர பேரணியை நடத்தினர்.
தங்கள் அன்புக்குரியவர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக சண்டை -நிறுத்தத்தை கோரினர். சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் இறந்த பணயக்கைதியும், ஒரு டாக்ஸி டிரைவருமான எய்டன் லெவியின் மகனான ஷஹர் லெவி, பேரணியில் உரையாற்றினார்: “கடத்தப்பட்டு மனிதாபிமானமற்ற நிலையில் இருக்கின்றவர்களின் உயிரைப் பணயம் வைத்தது போதும், நேரத்தை இழுத்தடித்தது போதும். ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும், அவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போகிறது“.