கருவை சுமந்து குழந்தையாக பெற்றெடுப்பது என்பது ஒரு வரம். எல்லா பெண்களுக்கும் இந்த வரம் எளிதில் கிடைப்பதில்லை. கருகலைப்பது என்பது சட்டப்படி குற்றமாகவே பல நாடுகளிலும் , கலாசாரங்களிலும் உள்ளது. கருக்கலைப்பு என்பது கடவுளுக்கு எதிரான பாவமாக பல மதங்களில் கூறப்படுகின்றது.
இது தண்டணைக்குரிய குற்றமாகவும் பல நாடுகளில் உள்ளது. காரணம் கரு என்பது ஒரு உயிர். அந்த உயிரை அழிக்கும் உரிமை யாருக்குமே இல்லை. ஆயினும் கருவை சுமப்பது பெண்கள் என்பதால் இந்த கருகலைப்பு என்பது பெண்களோடு தொடர்புடையதாக உள்ளது.
சில நேரங்களில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் போது அதனால் கருவுற்றலுக்கு உள்ளாகலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த கருவை கலைக்க கூடாது என்பதற்காக குறித்த பெண் அதனை பெற்று வளர்த்தெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகுகின்றார்.
அதாவது விரும்பாமல் பலவந்தத்தினால் கருவுற்றாலும் குழந்தையை சுமக்க வேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகன்றனர். இதனால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது. ஆனால் ஆண்கள் இதனால் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடு எனும் பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களுக்கு பாரம்பரிய முறைப்படி ‘சீலிங் செரிமனி’ விழா அந்த நாட்டில் நடத்தப்படும். அந்த வகையில் இதற்கு வரும் மகளிர் தினத்தன்று சீலிங் செரிமனி நடைபெறும் என அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் மகளிர் அனைவருக்கும் நாங்கள் ஒரு செய்தி சொல்கிறோம். உங்கள் உடல் உங்களுக்கு சொந்தம். அதில் யாரும் எந்த முடிவும் செய்ய முடியாது” என அந்நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டல் தெரிவித்தார்.
சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் “என் உடல், என் விருப்பம்” என்ற வாசகம் ஒளிரச்செய்து கருக்கலைப்பு ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1975 முதல் கருக்கலைப்பு குற்றமற்றதாக கருதப்படுகிறது. கருவுற்ற பெண்கள் 14-ஆவது வாரம் வரை கருக்கலைப்பு செய்யலாம் என்பது சட்டப்பூர்வமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து உலகில் பல நாடுகளிலும் இந்த சட்டம் நடைமுறைக்கு வரகூடும்.
குமார் சுகுணா Virakesari