திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு பதிலாக, உலகின் மிகவும் பிரபலமான ரோத்ஸ்சைல்ட் & கோ எனும் தனியார் வங்கி சாம்ராஜ்யத்தை அவர் நிறுவினார்.

ஃபிராங்க்ஃபர்ட் நகரின் யூத கெட்டோவான ஜூடென்காஸ்ஸில் மேயர் ஆம்ஷெலின் மூதாதையர் ஒருவரின் வீட்டை வேறுபடுத்திக் காட்டிய சிவப்பு நிற அடையாளத்திலிருந்து (ரோத் (Rot) = சிவப்பு, சைல்ட் (schild) = அடையாளம்) உருவான ரோத்ஸ்சைல்ட் என்ற குடும்பப் பெயர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கிறது.

ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் இந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது இடம்பெறவில்லை என்றாலும், சர்வதேச அரசியல் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஒரு அழியாத தடத்தைப் பதித்துள்ளது இந்த குடும்பம்.

குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில், நெப்போலியனுக்கு எதிராகப் போரிடும் ஐரோப்பியப் படைகளுக்கு இந்த குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். ​​அதே போல, பிரதம மந்திரி பெஞ்சமின் டிஸ்ரேலி தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சூயஸ் கால்வாயில் மில்லியன் டாலர் பங்குகளை வாங்குவதற்கும் நிதியளித்தனர்.

சமூகத்தில் அவர்களது புகழ் வளர்ந்த அதே நேரத்தில், ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்த எண்ணற்ற சதி கோட்பாடுகளும் வளர்ந்தன. அவை மீண்டும் மீண்டும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும், இந்த இரண்டு நூற்றாண்டுகளாக அத்தகைய சதி கோட்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

கடந்த மாத இறுதியில், இந்த குடும்பத்தின் பிரிட்டிஷ் கிளையின் தலைவராகக் கருதப்பட்ட லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் தனது 87வது வயதில் இறந்த செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல கட்டுக்கதைகள், சதி கோட்பாடுகள் மீண்டும் உலாவந்தன.

இந்த குடும்பத்தின் வரலாறு என்ன, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த அவர்கள் உண்மையில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள்?

கெட்டோவிலிருந்து அரச நீதிமன்றம் வரை

குடும்பத் தலைவரான மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட், பிராங்பேர்ட்டின் யூத கெட்டோவில் உள்ள இந்த வீட்டில் பிறந்தார்.

1744இல் பிறந்த மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் ஒரு சாதாரண வணிகக் குடும்பத்தின் மகனாவார். அதில் புகழ்பெற்ற ரப்பிகளும் இருந்தனர். அதனால் தான் தங்களது முதல் மகனை ஆன்மிக பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் நினைத்தார்கள்.

ஆனால் 11 வயதாக இருந்தபோது மேயரின் பெற்றோர் மரணமடைந்ததால் ஒரு வேலை தேட வேண்டிய நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார். ஹனோவரில் உள்ள ஒரு வங்கியில் ஒரு பயிற்சிப் பதவியில் சேர்ந்த அவர் படிப்படியாக வணிகச் சந்தையில் நுழைந்தார்.

அந்த வங்கியில் அவர் பல ஆண்டுகள் பணிபுரிந்தார், போதுமான அளவு கற்றுக்கொண்டு, பணம் சேமித்து, 1770இல் பிராங்பர்ட் திரும்ப முடிவு செய்தார். அங்கு அவர் திருமணம் செய்துகொண்டு, தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.

ஆரம்பத்தில் மேயர் பழங்கால நாணயங்கள், பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகள் விற்கும் தொழிலைச் செய்தார். பின்னர் அவருக்கு போதுமான முதலீடு கிடைத்ததும், நிதித்துறையில் நுழைந்தார்.

சில ஆண்டுகளில், அவர் அரசர் வில்லியம் I ஆட்சியின் கீழ் இருந்த லாங்ராவியேட் ஆப் ஹெஸ்ஸே (Landgraviate of Hesse) எனும் சமஸ்தானத்தின் வங்கி நிர்வாகியாக ஆனார்.

இந்த வேலையில் இருந்த போது, அரசரின் கஜானாவை மட்டுமல்லாது, தனது செல்வத்தையும் எவ்வாறு அதிகரிப்பது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.

நெப்போலியன் நடத்திய போர்களால் இது சாத்தியமானது. ஏனென்றால் வில்லியம் I தனது போர் வீரர்களின் சேவைகளை இங்கிலாந்து மற்றும் பிரஷியாவிற்கு விற்ற போது, போர்களுக்கு தேவையான நிதியை அரசாங்கங்களுக்கு கடனாக வழங்கினார் மேயர் ஆம்ஷெல்.

“நெப்போலியனுடனான போர்களுக்கு முக்கிய நிதியாளர்களில் ஒருவராக ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு நிதியளித்தனர். நெப்போலியனுக்கு எதிரான கூட்டணிக்கு அவர்கள் கடன்கள் வழங்கினார்கள். தங்கத்தை விற்று அதில் பணம் சம்பாதித்தார்கள்,” என்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் மைக் ரோத்ஸ்சைல்ட். இவரது கடைசிப் பெயர் ரோத்ஸ்சைல்ட் என இருந்தாலும், இந்த வம்சத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்.

200 ஆண்டுகளாக இந்த குடும்பத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட முக்கிய கட்டுக்கதைகளைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் இவர்.

“போருக்கு அதிக பொருளும் பணமும் தேவைப்பட்டதால், மிக விரைவாக அதிக செல்வத்தை ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தினரால் சம்பாதிக்க முடிந்தது” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் மைக் .

1887இல் வெளியிடப்பட்ட மற்றொரு படைப்பான ‘தி ரோத்ஸ்சைல்ட்ஸ்: தி ஃபைனான்சியல் ரூலர்ஸ் ஆஃப் நேஷன்ஸ்’ (The Rothschilds: the Financial Rulers of Nations) நூலில், “ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் (1808-1814) தீபகற்பப் போரின் போது அரசுக்கு தொடர்ந்து நிதி வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

நிதியைக் கொண்டு செல்வதற்கான பொறுப்பை ஏற்க அப்போதைய நிதியாளர்கள் தயக்கம் காட்டினர்.

எனவே ரோத்ஸ்சைல்ட்ஸ் ஒரு நல்ல கமிஷனுக்காக இதைச் செய்ய முன்வந்தார்கள். அது மட்டுமல்லாது தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இந்த தொழிலை மிகவும் இலாபகரமான முறையில் நடத்தினர்.

இந்த வெற்றியால், ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நட்பு நாடுகளின் இளவரசர்களுக்கு நிதி அனுப்புவதை நிர்வகிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை நியமித்தது.” என்கிறார் ஜான் ரீவ்ஸ்.

ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குதல்

ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்று, அந்தக் காலத்தின் பல முக்கிய ஐரோப்பிய தலைநகரங்களில் இந்த குடும்ப நிறுவனத்தின் கிளைகளை நிறுவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வகையான ஒருங்கிணைந்த திட்டத்தைக் குறிக்கிறது.

உண்மையில், முதலில் பிறந்த ஆம்ஷெல் ஃபிராங்க்ஃபர்ட்டில் தங்கியிருந்தபோது, ​​​​குடும்பத்தின் மற்ற நான்கு மகன்கள் லண்டன் (நாதன்), பாரிஸ் (ஜாகோப், பின்னர் ஜேம்ஸ்), வியன்னா (சாலமன்) மற்றும் நேபிள்ஸ் (கார்ல்) ஆகிய இடங்களில் நிறுவனத்தின் கிளைகளை நிறுவினர்.

இருப்பினும், இந்த கிளைகள் ஒரே நேரத்தில் உருவாக்கப்படவில்லை, 1804இல் லண்டன் அலுவலகத்தை உருவாக்குவதற்கும், 1820களில் வியன்னா மற்றும் நேபிள்ஸில் கிளைகளை நிறுவுவதற்கும் இடையில் 15 ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி இருந்தது.

இந்த குடும்பத்தைச் சுற்றியுள்ள மிகப்பெரிய புரளிகளில் ஒன்று, நாதன் ரோத்ஸ்சைல்ட் குறித்தது.

1846இல் வெளியிடப்பட்ட, சாத்தான் என்ற புனைப்பெயருடன் கையெழுத்திட்ட ஒரு துண்டுப் பிரசுரம் ஐரோப்பா முழுவதும் விரைவாக பரவியது. நெப்போலியனுக்கு எதிரான போர் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் மில்லியன்களை ஈட்டினார் நாதன் ரோத்ஸ்சைல்ட் என்று அதில் கூறப்பட்டது.

இந்தக் கதையின்படி, வாட்டர்லூ போரில் (பெல்ஜியம்) நெப்போலியன் தோல்வியடைந்ததை வங்கியாளர் நாதன் கண்டார். அங்கிருந்து அவர் விரைவாக, வலுவான புயலையும் பொருட்படுத்தாமல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து, லண்டனுக்கு வந்தார். போர் குறித்த செய்திகள் வெளியாவதற்கு முன்பே பல பங்குகளை வாங்கினார். பின்னர், போரின் முடிவுகள் பற்றிய செய்தி இறுதியாக நகரத்தை எட்டிய போது, அந்த பங்குகளின் விலை பலமடங்கு உயர்ந்தது.

2015இல், பிரிட்டிஷ் செய்தித்தாள் தி இன்டிபென்டன்ட்டில், பத்திரிகையாளர் பிரையன் கேத்கார்ட், “போர் நடந்த சமயத்தில் நாதன் ரோத்ஸ்சைல்ட் வாட்டர்லூவிலோ அல்லது பெல்ஜியத்திலோ இல்லை, அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பங்குச் சந்தையில் மகத்தான லாபத்தைப் பெறவில்லை. கூடுதலாக, ஆங்கில கால்வாயில் அப்போது வலுவான புயல் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார். எனவே இந்தக் கதை தவறானது.

இந்த கதை பல தசாப்தங்களாக பரவி வருகிறது. 1910 இல் வெளியிடப்பட்ட என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பதிப்புகளில் கூட இது இடம்பெற்றது.

நெப்போலியன் போர்களால் இந்தக் குடும்பம் பெரும் செல்வத்தை குவித்தது உண்மை தான். ஆனால் அது முன்னர் சுட்டிக்காட்டப்பட்டபடி, அரசாங்கங்கள் மற்றும் இராணுவங்களுக்கு கடனாக நிதி வழங்கியதன் மூலம் கிடைத்தது.

போர்களில் இரு தரப்பினருக்கும் நிதியளிப்பதன் மூலம் ரோத்ஸ்சைல்ட்ஸ் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள் என்பதும் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அவ்வாறு நடக்கல்லை என பிபிசியிடம் கூறுகிறார் மைக் ரோத்ஸ்சைல்ட்

“வரலாற்று ரீதியாக கணிசமான ரோத்ஸ்சைல்ட் இருப்பைக் கொண்ட இரண்டு நாடுகள் போரில் ஈடுபட்ட சம்பவங்கள் உண்டு. நெப்போலியன் போர்களில் கூட அதைக் காண முடியும். பாரிஸில் ஒரு ரோத்ஸ்சைல்ட் அலுவலகம் மற்றும் லண்டனில் ஒரு ரோத்ஸ்சைல்ட் அலுவலகம் இருந்தது. போர்களில் இத்தகைய சிக்கலான சூழல்களை சமாளிப்பது கடினம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

“அவர்கள் இரு தரப்பினருக்கும் நிதியுதவி செய்தார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் அதைச் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், அவர்கள் நெப்போலியன் போர்கள் முடியும் வரை பிரான்சின் எதிரிகளுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்தனர் ,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

மேயர் ஆம்ஷெல் இறக்கும் நேரத்தில், குடும்பம் ஏற்கனவே ‘மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட் அண்ட் சன்ஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவியிருந்தது, அதன் செல்வம் ஐந்து மகன்களுக்கு சமமாகப் பிரிக்கப்பட்டது. அதை வீணாக்காமல், என்ன நடந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தந்தை ஆம்ஷெல் அறிவுறுத்தியிருந்தார்.

ஐரோப்பிய காலனித்துவத்திற்கு நிதி அளித்தவர்கள்

நதானியேல் மேயர் டி ரோத்ஸ்சைல்ட் என்பவர் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நுழைந்த முதல் யூதர் ஆவார்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு (1815-1914) காலம் ‘உலகின் மிகப்பெரிய வங்கி’ என்று அழைக்கப்பட்ட ரோத்ஸ்சைல்ட்ஸ் வங்கியை அந்த குடும்பம் சிறப்பாக பராமரித்தனர்.

ஆனால் அவர்களுடையது ஒரு பாரம்பரிய வங்கி அல்ல. அங்கு மக்கள் தங்கள் சேமிப்புகளை டெபாசிட் செய்து கடன் வாங்கவில்லை, மாறாக அரசாங்க கடன்கள் மற்றும் பத்திரப் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தும் முதலீட்டு வங்கி போன்றது.

“1820களில் ரோத்ஸ்சைல்ட்ஸ், சர்வதேச பத்திர சந்தையாக மாறும் சாத்தியம் கொண்டிருந்த ஐரோப்பிய நிதித்துறையில் ஆதிக்கம் செலுத்தியது” என மைக் ரோத்ஸ்சைல்ட் தனது ‘Jewish Space Lasers: The Rothschild and 200 Years of Conspiracy Theories’ நூலில் குறிப்பிடுகிறார்.

“அவர்கள் ஐரோப்பிய ராயல்டி, வாட்டிகன், நாட்டின் பிரதம மந்திரிகள் மற்றும் கிங் ஜார்ஜ் IV ஆகியோருக்கு ஆலோசகர்களாகவும் கடன் வழங்குபவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள் எதிர்கால பிரெஞ்சு சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட உருவான ரஷ்யா, பிரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவின் ஒப்பந்தக் குழுவான புனிதக் கூட்டணிக்கும் வங்கியாளர்களாக இருந்தனர்.” என அவர் கூறுகிறார்.

1836இல் இறக்கும் போது, ​​நாதன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செல்வத்துடன் பொது அங்கீகாரமும் வந்தது.

மேயர் ஆம்ஷெலின் ஐந்து மகன்களுக்கும் ஆஸ்திரிய பேரரசின் மதிப்பிற்குரிய பட்டங்கள் கிடைத்தன மற்றும் அவர்களின் சந்ததியினரால் சமூகத்தின் மிக உயர்ந்த அடுக்குகளில் ஒருங்கிணையவும் முடிந்தது.

உதாரணமாக, லியோனல் நாதன் டி ரோத்ஸ்சைல்ட் (1808-1879) பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முதல் யூத உறுப்பினர் ஆவார்.

1875இல் பிரிட்டிஷ் அரசாங்கம் சூயஸ் கால்வாயில் பங்குதாரராக ஆவதற்கு, குறுகிய அவகாசத்தில் 4 மில்லியன் பவுண்டுகள் கடனை வழங்கியவர்.

அவரது உறவினர் மேயர் அல்போன்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1827-1905), குடும்பத்தின் பிரெஞ்சு கிளையைச் சேர்ந்தவர், 1870களுக்குப் பிறகு பிராங்கோ-பிரஷ்யன் போரில் பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தேவையான இழப்பீடுகளைச் செலுத்த வேண்டிய இரண்டு பெரிய கடன்களை சாத்தியமாக்கிய வங்கிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கினார்.

இது நாட்டில் இருந்த வெளிநாட்டு துருப்புகளை திரும்பப் பெறுவதற்கு உதவியது மற்றும் ஜனாதிபதி அடோல்ஃப் தியர்ஸ் அரசாங்கம் அதிகாரத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு உத்தரவாதம் அளித்தது.

லியோனல் நாதன் டி ரோத்ஸ்சைல்டின் மகனான நதானியேல் மேயர் (நாட்டி) டி ரோத்ஸ்சைல்ட் (1840-1915), பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நுழைந்த முதல் யூதர் மற்றும் முதல் லார்ட் ரோத்ஸ்சைல்ட் ஆனார்.

19ஆம் நூற்றாண்டு முழுவதும், குடும்பத்தின் வணிகங்கள் தொடர்ந்து செழித்து வளர்ந்தன. வங்கி மற்றும் அரசாங்க பத்திர வர்த்தகத்திற்கு அப்பால் அவை பன்முகப்படுத்தப்பட்டன.

அவர்கள் காப்பீட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்தனர் மற்றும் தொழில்துறை, உலோகவியல், சுரங்க மற்றும் இரயில்வே நிறுவனங்களில் பங்குகளை வாங்கினார்கள்.

கூடுதலாக, 19ஆம் நூற்றாண்டில், அவர்கள் ஆப்பிரிக்காவில், குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் பல ஐரோப்பிய காலனித்துவ சாகசங்களுக்கு நிதியளித்தனர்.

“அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களுக்கு எதிராக நடந்த பல துஷ்பிரயோகங்களுக்கு உடந்தையாகவோ அல்லது குறைந்தபட்சம் அதைக் குறித்து தெளிவற்றவர்களாகவோ இருந்தார்கள்” என்று மைக் ரோத்ஸ்சைல்ட் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

அவர்களின் வங்கி வணிகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் ஏற்கனவே மற்ற பெரிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க குழுக்களிடமிருந்து போட்டியை எதிர்கொண்டனர். இது நிதித்துறையில் அவர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பாரோன் எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1845-1934) ஓட்டோமான் பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக அங்கு நிலம் வாங்க பெரும் நிதியை ஒதுக்கீடு செய்தார்.

சியோனிசம் மற்றும் இஸ்ரேல்

1836 இல் அவர் இறக்கும் போது, ​​நாதன் ரோத்ஸ்சைல்ட் உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்பட்டார்.

பாரம்பரியமாக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் தலைவர் அந்த நாட்டில் உள்ள யூத சமூகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறார்.

இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதில் இந்த குடும்பம் முக்கிய பங்கு வகித்தது.

எட்மண்ட் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட் (1845-1934), மேயரின் பேரன் மற்றும் ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்டின் இளைய மகன். யூத மக்களுக்கு ஒரு தாயகத்தை நிறுவும் யோசனையான சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர்.

யூத எதிர்ப்பு மற்றும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் யூதர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை உணர்ந்த எட்மண்ட், அப்போது ஒட்டோமான் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் நிலம் வாங்குவதற்கு பெரிய வளங்களை ஒதுக்கீடு செய்தார்.

யூத காலனிகளை நிறுவுவதற்கும், அந்த நாடுகளில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் எட்மண்ட் நிதியளித்தார். 1934இல் அவர் இறந்த போது, ​​ சுமார் 500 சதுர கிலோமீட்டர் நிலத்திலும் கிட்டத்தட்ட 30 குடியிருப்புகளிலும் பிரதிநிதித்துவம் செய்பவராக இருந்தார்.

அவர் இறந்த பிறகு, பாரிஸில் முதலில் புதைக்கப்பட்டாலும், 1954இல் எட்மண்ட் மற்றும் அவரது மனைவி அட்லிஹெய்டின் உடல்கள் இஸ்ரேலுக்கு ஒரு போர்க்கப்பலில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்கள் உடல்களுக்கு பிரதமர் டேவிட் பென் குரியன் தலைமையிலான அரசு இறுதி மரியாதை செய்தது.

லியோனல் வால்டர் (வால்டர்) ரோத்ஸ்சைல்ட் (1868-1937), இரண்டாவது லார்ட் ரோத்ஸ்சைல்டான இவர், 1917இல் கையெழுத்திடப்பட்ட, புகழ் பெற்ற பால்ஃபோர் பிரகடன ஆவணத்தைப் பெற்றவர் என்பதால், இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம் பாலஸ்தீனத்தில் “யூத மக்களுக்கான தேசிய இல்லத்தை” உருவாக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ஆதரவை அறிவித்தது.

சைம் வெய்ஸ்மேன் – சியோனிசத்தின் சிறந்த ஊக்குவிப்பாளர்களில் ஒருவர், பின்னர் அவர் பிரிட்டிஷ் அரசாங்க உதவியுடன் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியாக இருந்தார் .

பால்ஃபோர் பிரகடனம் தொடர்பான பேட்டியில் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட் கூறுகையில், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் யூதர்களின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய நிகழ்வு, ஒரு அதிசயம். இது நடக்க 3,000 ஆண்டுகள் ஆனது.” என்கிறார்.

டோரதி டி ரோத்ஸ்சைல்ட், ‘யாட் ஹனாடிவ்’ என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவினார், இது நெசெட் (பாராளுமன்றம்) கட்டிடங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் மிக சமீபத்தில் இஸ்ரேலின் தேசிய நூலகத்தை கட்டுவதற்கு நிதியளித்தது.

சமீபத்தில் இறந்த ஜேக்கப் டி ரோத்ஸ்சைல்ட் கடந்த சில தசாப்தங்களாக இந்த அறக்கட்டளைக்கு தலைமை தாங்கினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகள் மற்றும் இஸ்ரேலில் அரபு சிறுபான்மையினருக்கு சம வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது இந்த அறக்கட்டளை.

“இஸ்ரேலில் ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் இப்போதும் மிகவும் மதிக்கப்படுகிறது. சியோனிச இயக்கத்தின் முக்கிய நிதியாளர்களில் ஒருவராக அவர்கள் உள்ளனர்” என்று மைக் ரோத்ஸ்சைல்ட் பிபிசியிடம் கூறுகிறார்.

அதேநேரத்தில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சியோனிச யோசனையைச் சுற்றி ஒன்றுபடவில்லை என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

“சில ரோத்ஸ்சைல்ட்ஸ் இஸ்ரேல் தேசத்தை நிறுவுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், மற்றவர்கள் உண்மையில் அதற்கு எதிராக இருந்தனர்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம்

ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன், பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கு ஒரு தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவை வழங்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளை சாய்ம் வெய்ஸ்மேன் சமாதானப்படுத்தினார்.

ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் என்ன ஆனது?

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ரோத்ஸ்சைல்ட்ஸின் சக்தியும் செல்வமும் குறையத் தொடங்கின, அவர்கள் ஒரு பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த குடும்பமாக இருந்தபோதிலும், அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த வசதி, மரியாதை அவர்களுக்கு இல்லை.

இருந்தபோதிலும், தொடர்ந்து கட்டுக்கதைகள் மற்றும் சதி கோட்பாடுகளுக்கு ஆளாகினர். ஏன்?

” ரோத்ஸ்சைல்ட்ஸ் குறித்து தொடர்ந்து மக்கள் பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் மேற்கில் நன்கு அறியப்பட்ட யூத குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறார்கள். சதி கோட்பாடுகள் மற்றும் யூத எதிர்ப்பு எண்ணங்கள் கைகோர்த்துச் செல்கின்றன” என்கிறார் மைக் ரோத்ஸ்சைல்ட்.

“சதி கோட்பாடுகள் பொதுவாக சில வகையான யூத-விரோத கூறுகளைக் கொண்டுள்ளன, குறிப்பாக அதில் கூறப்பட்டுள்ள திட்டங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யார் நிதியளிக்கிறார்கள் என்பது பற்றிய சில கூறுகள்.”

“சதி கோட்பாடுகளை நம்புபவர்களில் பலர், யூதர்கள் தான் அவற்றை உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள். யூதர்களைப் பற்றி பேசும்போது, ​​மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார யூதக் குடும்பத்தை குறிவைப்பது மிகவும் எளிதானது அல்லவா” என்கிறார் மைக்.

பிபிசி தமிழ்

Share.
Leave A Reply

Exit mobile version