300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இக்கப்பல் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த கப்பலில் உள்ள பொக்கிஷம், உலகிலேயே அதிகம் தேடப்படும் பொக்கிஷங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கப்பலின் பாகங்களை கண்டுபிடிக்க ஆழ்கடலில் “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய” “உயர்மட்ட” ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது.
சான் ஜோஸ் என்பது 40 மீட்டர் நீளமுள்ள ஸ்பானியக் கப்பலாகும். இந்த கப்பல் கொலம்பியாவின் கார்டஜீனா நகருக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டமான ரொசாரியோ தீவுகளைச் சுற்றி 1708-ல் மூழ்கியது.
2015-ம் ஆண்டு, அக்கப்பல் 600 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அரசு அறிவித்தது.
ஸ்பானிய மன்னரின் இறப்புக்குப் பிறகு, வாரிசுப் போரின் ஒரு பகுதியாக, சார்லஸ் வேகரின் கீழ் இருந்த பிரிட்டிஷ் படைக்கும் ஸ்பெயின் படைக்கும் மோதல் மூண்டதாக, கடல்சார் மானுடவியல் பேராசிரியர் ரிக்கார்டோ பொரேரோ தெரிவிக்கிறார். அப்போது, சான் ஜோஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
கப்பலில் என்ன இருக்கிறது?
20 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் இக்கப்பலில் உள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர்.
“கப்பல்கள் வடிவமைப்பு 20-ம் நூற்றாண்டு வரை மனித கண்டுபிடிப்புகளிலேயே மிக சிக்கலான தொழில்நுட்பம் கொண்டதாகும். தற்போதுள்ள உலகமயமாக்கலுக்கு இந்த தொழில்நுட்பம் பல வழிகளில் வடிவம் கொடுத்திருக்கிறது. இதனை போர்க்கப்பலாகவும் வணிக கப்பலாகவும் பல வழிகளில் பயன்படுத்த முடியும்” என்கிறார் ரிக்கார்டோ பொரேரோ.
இந்த கப்பல் 40 மீட்டர் நீளம் கொண்டது. 64 பீரங்கிகள் அதில் இருந்தன. கப்பலில் சுமார் 600 பேர் இருந்தனர்.
“17-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ம் நூற்றாண்டிலும் இக்கப்பல் உயர் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட கப்பலாக இருந்தது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்தும் அக்கப்பல் சரக்குகளை ஏற்றிச் சென்றிருக்கிறது” என்கிறார் அவர்.
இக்கப்பல், கொலம்பியாவின் சொத்தாக 2020-ல் அறிவிக்கப்பட்டது. அதனால் தான், அதன் மதிப்பை பண அடிப்படையில் கணக்கிடக் கூடாது என்று அரசாங்கம் பாதுகாக்கிறது.
எனினும், அக்கப்பலின் ஒருபகுதியை சொந்தமாக வைத்திருப்பதாக கூறும் அமெரிக்காவை சேர்ந்த புதையல்களை தேடும் வேட்டை நிறுவனம் ஒன்று, அப்புதையல் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என்று ஊகித்துள்ளது .
இக்கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் குறித்த விவரங்கள், காப்பக ஆதாரங்களிலிருந்தே அறியவருகின்றன. மாறாக, கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அதனை நேரடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
2022-ம் ஆண்டில், தேசிய கடற்படை மற்றும் கொலம்பியாவின் தேசிய கடல்சார் இயக்குநரகம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வில் கப்பலில் இருந்த பொருட்களின் புகைப்படங்கள் வெளியாகின. அப்புகைப்படத்தில் பீரங்கிகள், சில நாணயங்கள் மற்றும் சீன மேஜைப் பாத்திரங்கள் சிலவற்றைக் காண முடிந்தது.
“ஜாடிகள், பாத்திரங்கள், ஊசிகள், கண்ணாடிகள், பீங்கான்கள், சில நாணயங்கள் உள்ளிட்டவை அதில் காணப்படுகின்றன” என, கொலம்பிய மானுடவியல் மற்றும் வரலாற்று நிறுவனத்தின் இயக்குனர் (ICANH) அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார்.
600 மீட்டர் ஆழத்தில் உள்ள கப்பலில் என்ன இருக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதுதான் கொலம்பியா அறிவித்துள்ள புதிய ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
ரோபோட் தொழில்நுட்பம்
தண்ணீரை விட்டு வெளியேறும்போது இந்த பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கவனிப்பதே இதன் நோக்கம்.
“தண்ணீரில் அப்பொருட்கள் 300 ஆண்டுகளாக மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும். எனவே, வெளியே எடுக்கப்பட்டவுடன் அவை முழுமையாக உடைந்துவிடும்” என்று அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.
“இந்த வகையான பொருட்களை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், ஒருகட்டத்தில் அப்பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படும்” என்று அவர் கூறுகிறார்.
மீட்கப்பட்டவுடன் அவை கார்டஜீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும். அதற்கென அருங்காட்சியகம் அமைப்பது குறித்து சிந்திக்கப்படுகிறது.
இப்போதைக்கு, கொலம்பிய அதிகாரிகள் அக்கப்பலில் இருந்து அதிகளவு தங்கம் மற்றும் வெள்ளி எடுக்கப்படுவதாக கூறப்படும் தகவலை நிராகரித்துள்ளனர்.
2017-ம் ஆண்டு சீனக் கப்பல் கட்டும் தளத்திலிருந்து 13 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கொலம்பிய அரசு வாங்கிய ஏ.ஆர்.சி கரிப் என்ற கப்பலில் இருந்து ஆய்வு செய்யப்படும் கப்பலுக்கு ரோபோட் இறக்கப்படும்.
“இந்த கப்பல் அலை, காற்று மற்றும் கடலின் ஆறு திசைகளில் உள்ள அனைத்து இயக்கங்களையும் துல்லியமான புள்ளியில் வைத்திருக்கும் திறன் கொண்டது” என்று கடற்படை அதிகாரி ஹெர்மன் லியோன் ஸ்பானிய செய்தி முகமையான EFE-யிடம் விளக்கினார்.
கடலின் அடிப்பகுதியில் என்ன இருக்கிறது என்பது பற்றி அறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில், “18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே கடல்சார் வர்த்தகத்தின் வரலாறு பற்றிய பல அறிவியல் ஆராய்ச்சி கேள்விகளுக்கு பதில்கள் இதன் மூலம் கிடைக்கும் என கொலம்பியா நம்புகிறது” என, கலாசார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
விமர்சனங்கள்
இந்த திட்டத்தில் சில “முரண்பாடுகளும்” “இடைவெளிகளும்” இருப்பதாக, யூனிவர்சிட்டி நெட்வர்க் ஆப் சப்மெர்ஜ்ட் கல்ச்சுரல் ஹெரிட்டேஜ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கப்பலில் இருந்து பொருட்களை பிரித்தெடுப்பதற்கு “சரியான அறிவியல் ரீதியிலான நியாயம்” இல்லை என்றும் இது பாதுகாப்பு கொள்கைக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
“இந்த ஆய்வு தற்போதைய அரசாங்கத்தின் சம்பிரதாய நடைமுறை மட்டுமே” என்கின்றனர்.
மேலும், “இதுகுறித்து எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. 2015, 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் புதையல் தேடும் நிறுவனமான மெரிடைம் ஆர்க்கியாலஜி கன்ஸல்டண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய தகவல்களும் வெளியிடப்படவில்லை. இது இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்” என்கின்றனர் விமர்சகர்கள்.
ICANH-ன் இயக்குனர் அலெனா கைசிடோ பிபிசி முண்டோவிடம், ”அரசின் சட்ட பாதுகாப்பு முகமையின் ஆலோசனையின் பேரில், தற்போதைய ஆராய்ச்சி திட்டமானது, கப்பல் குறித்து மெரிடைம் ஆர்க்கியாலஜி கன்ஸல்டண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய எந்த அறிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது” என தெளிவுபடுத்தினார்.
புதையல் யாருக்கு? 3 பேர் உரிமை கோருவதால் சிக்கல்
இந்த ஆழ்கடல் அறிவியல் ஆராய்ச்சியை அரசாங்கம் அறிவித்த அதே நேரத்தில், தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் கொலம்பியாவிற்கும் ’சீ சர்ச் ஆர்மடா’ என்ற அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே இக்கப்பல் தொடர்பான சர்வதேச வழக்குகளை முறையாக விசாரிக்கத் தொடங்கியது.
’சீ சர்ச் ஆர்மடா’ நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், கொலம்பியாவிற்கு முன்பே இக்கப்பலை கண்டுபிடித்ததாகவும், எனவே, அக்கப்பலின் பாதி மதிப்புக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலரை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.
இந்த வழக்கில் கொலம்பியாவின் பாதுகாப்பை ஏற்க வேண்டிய நிறுவனமான தேசிய சட்டப் பாதுகாப்பு முகமையின் இயக்குநர், இந்தக் கூற்றை “கொடூரமானது” மற்றும் “அற்பமானது ” என்று விவரித்தார்
கொலம்பிய சட்டங்கள் இக்கப்பலை “கைப்பற்ற முடியாதது” என்று கூறுகிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து யாருடையது என்பது பற்றிய சர்ச்சைகளை இச்சட்டங்கள் தடுக்கவில்லை.
2015-ம் ஆண்டில், ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர், “இக்கப்பல் அரச கப்பல் என்பதால் அதை ஸ்பெயின் விட்டுக் கொடுக்காது” என்று கூறினார். எவ்வாறாயினும், இரு அரசாங்கங்களும் சர்ச்சைக்கு இணக்கமான மற்றும் ராஜதந்திர தீர்வை அடைவதற்கான தங்கள் நோக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
பிப்ரவரி 23 அன்று, கொலம்பியாவிற்கான ஸ்பெயின் தூதர், கொலம்பியாவிற்கு “இதுதொடர்பாக இருதரப்பு ஒப்பந்தத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை” வழங்குவதற்கு தனது நாட்டு அரசாங்கத்திடமிருந்து அறிவுறுத்தல்கள் இருப்பதாகக் கூறினார்.
“நாங்கள் பலருடன் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். குறிப்பாக ஸ்பெயினுடன், பொலிவியாவுடன், கிரனாடா ராஜ்ஜியத்தைச் சேர்ந்த மக்களுடன், நாங்கள் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்” என்று அவர் விளக்குகிறார்.
பொலிவியன் பூர்வீக குரா குரா (Qhara Qhara) சமூகமும் அக்கப்பலின் ஒரு பகுதியைக் கோருகிறது, வன்முறை மற்றும் சுரண்டல் மூலம் கப்பலில் உள்ள போடோசி சுரங்கங்களிலிருந்து பெறப்பட்டது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பிபிசி தமிழ்