“இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள், ஒன்றிணைந்து அமைத்த ராணுவ கூட்டமைப்பு நேட்டோ (North Atlantic Treaty Organization) எனப்படும்.

நேட்டோ உறுப்பினர் நாட்டை மற்றொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து உறுப்பினர் நாட்டிற்கு ஆதரவாக நிற்கும்.

இதில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

2022ல் நடந்த ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

ஆனால், “தனக்கு எதிரான நாடு” எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது.

மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, “தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிக்கிறது” என குற்றம் சாட்டி ஸ்வீடனை இணைக்க சம்மதிக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.சில வாரங்களுக்கு முன், ஹங்கேரியும் தனது நிலையை மாற்றி கொண்டது.

நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு சுவீடன் நாட்டிற்கு இருந்த அனைத்து தடைகளும் நீங்கிய நிலையில், நேற்று, அதிகாரபூர்வமாக ஸ்வீடனின் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

நேட்டோ அமைப்பில் இணையும் 32-வது உறுப்பினர் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்வீடனின் இணைப்பு குறித்து, “இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்” என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறினார்.

இது குறித்து பேசிய ஸ்வீடன் அதிபர் உல்ஃப் க்ரிஸ்டர்சன் (Ulf Kristersson), அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version