வெலிகந்த மகாவலி தென்ன பகுதியில் கொங்ரீட் வடிகானில் வீழ்ந்த 2 மாதங்களுடைய யானைக்குட்டியை அதிலிருந்து மீட்டு காட்டில் விடுவிக்க வெலிகந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடிகானில் உணவின்றி தவித்த யானைக்குட்டியை மீட்டெடுக்க தாய் யானை முயற்சித்தும் முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குழு தலையீடு செய்து யானைக்குட்டியை மீட்டெடுத்துள்ளனர்.

சோமாவதி வனத்தில் உலாவிக்கொண்டிருந்த 2 மாதங்களுடைய 3 அடி உயரம் கொண்ட யானைக்குட்டியே இவ்வாறு மீட்கப்பட்டதென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானைக்குட்டியை மீட்டெடுக்கும் சந்தர்ப்பத்தில் தாய் யானை காட்டில் மறைந்திருந்ததாகவும் யானைக்குட்டியை வௌியில் கொண்டுவந்து காட்டில் விடுவித்தவுடன் அதனை தாய் யானை காட்டுக்குள் அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குட்டியானையை மீட்கும் முயற்சியில் வெலிகந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version