1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவுநாளில் நிகழ்ந்த துயரங்கள் தமிழ் மக்களிடையே சீற்றத்தை உண்டுபண்ணின. அரசாங்கம் நிகழ்வுக்குப் பொறுப்பேற்காததுடன் குற்றத்திற்குப் பொறுப்பானோரைத் தண்டிக்கவும் தவறியது.
இது ஏற்கெனவே தரப்படுத்தலால் வெகுண்டிருந்த தமிழ் இளைஞர்களிடையே மேலும் சினத்தை மூட்டியது. இதைத் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்த் தேசியவாத அரசியலும் அரசியல் வன்முறையும் வளர்க்கப்பட்டன.
இந்த வன்முறை சாகச வாதத்திற்கான ஆதரவு 1975இல் யாழ்ப்பாணத்தில் மக்கள் செல்வாக்குடைய மாநகரசபை மேயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஃபிரெட் துரையப்பா கொலையுடன் தொடங்கியது.
இக்கொலைக்குத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் காரணமாகக் காட்டுவோர் உள்ளனர். ஆனால், 1971 இலிருந்தே துரையப்பாவைக் கொல்லும் திட்டமும் முயற்சிகளும் இருந்து வந்துள்ளமையையும் நாம் கணிப்பிலெடுக்க வேண்டும்.
துரையப்பாவின் கொலை ஒரு தொடக்கம். இக்கொலையையடுத்து வடக்கில் பொலிஸ் அடக்குமுறைகள் அதிகரித்தன. துரையப்பாவின் படுகொலையின் பின்னணியில் அரசாங்கத்தின் கெடுபிடிகள் விரிந்தன.
பொலிஸ் படையினர் தனது சந்தேகத்திற்கு உட்பட்ட இளைஞர்களைத் தேடுவதிலும், கைது செய்வதிலும் கைதானோரை மோசமாக நடத்துவதிலும் காட்டிய தீவிரம் முரண்பாட்டை அதிகரித்தது.
இதனால் தமிழ்ப் போராளிகளும் பொலிஸூம் சம்பந்தப்பட்ட தொடரான வன்முறைகள் நடைபெறத் தொடங்கின.
இந்தப் பின்புலத்தில் சில தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர்களது ஆசிகளுடன் ‘தமிழ்த் துரோகிகள்’ என்று கூறப்பட்டோரின் அரசியற் படுகொலைகளும் நடந்தன. பின்பு, போட்டி அமைப்புக்களின் போராளிகளும், தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களுங்கூடப் படுகொலைக்காளாயினர்.
அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கெதிராகப் போராடத் துணிந்த இளைஞர்களை வழிப்படுத்த தமிழ் அரசியல் கட்சிகளால் இயலவில்லை.
தமிழரசுக் கட்சியிடமோ பிற கட்சிகளிடமோ எந்த உருப்படியான வேலைத்திட்டமும் இல்லாத நிலையில், இளைஞர் இயக்கம் அமிர்தலிங்கத்திற்கு ஆதரவானோரின் அனுசரணையுடனும் இயங்கத் தொடங்கியது. மறுபுறம் இன்னும் சில இளைஞர்கள் அவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட மறுத்தும் இயங்கத் தொடங்கினர்.
தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் இறந்ததையடுத்து, அவரை மரணத்தை அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்த நினைத்த தமிழரசுக் கட்சி அதை ஒரு பிரசார இயக்கமாக்கும் நோக்கில் அவருடைய சாம்பலை ஊர் ஊராக ஊர்வலம் கொண்டு போனது.
அப்போது திருகோணமலையில் அவ்வூர்வலம் மீது நிகழ்ந்த சிங்களப் பேரினவாதத் தாக்குதல் முக்கியமான ஒரு குறி காட்டியாகும். இதுவே திருகோணமலையில் நடந்த முதலாவது பேரினவாத வன்முறை நிகழ்வெனலாம்.
இவ்வாறு குடாநாட்டில் தமிழ்த் தேசியம் உத்வேகம் பெற்ற அதே காலத்தில் மலையகத்திலிருந்து தொழிலாளர்கள் வன்னிக்குப் புலம்பெயர்ந்தனர்.
ஒடுக்கப்பட்ட இனமான ஈழத்தமிழர்கள் அவர்களிடம் அடைக்கலமாக வந்த மலையகத் தமிழரை நடத்திய விதம் மிகவும் மோசமானது. இன்றும் ஈழத்தமிழர் வரலாறு பற்றிப் பேசும் போதெல்லாம் தமிழர் ஒடுக்கப்பட்டார்கள் என்று பேசுவோர், தமிழர் எவ்வாறு ஒடுக்கினர் என்பதை வசதியாகப் பேசாது விட்டு விடுவர்.
மலையகப் பகுதிகளில் உள்ள தோட்டங்களைத் தேசியமயமாக்கும் கொள்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகாலக் கொள்கைகளில் ஒன்று.
ஆனால் தேயிலை வணிகத்தில் அந்நியக் கம்பனிகளுக்கு இருந்து வந்த அதிகாரத்தைக் கருதி ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அதை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பவில்லை.
எனினும் 1971இல் ஜே.வி.பி. கிளர்ச்சியின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ்த் தோட்டங்கள் தேசியமயமாக்கல் முக்கியத்துவம் பெற்றது.
தேயிலைத் தோட்டங்களைத் தேசியமயமாக்கியதன் மூலம், அரசாங்கம், தேயிலைத் தோட்டங்களை நாட்டின் உடைமையாக்க மட்டுமே முயன்றிருந்தால் அது தேசநலன் கருதிய விடயம் என்று எண்ணியிருக்க வாய்ப்புண்டு.
ஆனால், அரசாங்கம் தேசியமயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் ஒரு பகுதியை அரசாங்கப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திடமும் இன்னொரு பகுதியை ஜனவசம அமைப்பிடமும் கையளித்தது.
இத் தேசியமயமாக்கற் திட்டத்தின் பின்னால் ஒரு பேரினவாத வேலைத்திட்டம் இருந்ததை உறுதிப்படுத்தியது.
தோட்டங்களின் தேசியமயம் மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, முக்கியமாக மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலளார்களைப் பொறுத்தவரை, அவர்களைத் தோட்டங்களில் இருந்து அகற்றும் ஒரு நோக்கத்தையும் கொண்டிருந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களுக்குள்ளேயே பச்சையான இனத் துவேஷங்கட்கு முகங்கொடுத்தார்கள். தோட்டங்களுக்குள் இனவாதக் காடையர்கள் புகுந்து கட்டற்ற வன்முறையில் ஈடுபட்டனர்.
இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு தோட்டத்தொழிலாளர்கள் அங்கு சீவித்தபோதும் தோட்ட நிருவாகத்தின் சீர்குலைவுகள் மிகப்பெரிய சவாலாயின.
இதனால் ஒழுங்காகச் சம்பளம் கிடைப்பதே சவாலானதாக இருந்தது. இந்நிலையில் 1974இல் ஏற்பட்ட வறட்சி தேயிலைப் பயிரை மிகவும் பாதித்ததது. அதன் பயனாகத் தோட்டங்களில் வாராந்த வேலை நாட்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்தது.
பல இடங்களில் பேரினவாத வன்முறையைவிட முக்கியமாக, வருமானம் போதாமை மலையகத் தமிழரை வாழ்வுத் தேடித் தோட்டங்கட்கு வெளியே விரட்டியது. ஒருபகுதியினர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முயன்றனர்.
இன்னொரு பகுதியினர் வடக்கில் கிளிநொச்சி, வவுனியாப் பகுதிகளில் வேகமடைந்து வந்த விவசாய விருத்தியை நம்பித் தோட்டங்களிலிருந்து வடக்கே புலம்பெயர்ந்தனர்.
வடக்கு நோக்கி வந்த மலையக் தமிழரை முழு மனதுடன் வரவேற்றுக் குடியேற்றுவதில் அக்கறையுடைய தமிழ்த் தேசியவாதிகள் சிலர் இருந்தனர். குறிப்பாக ‘காந்தியம்’ என்ற அமைப்பு அவற்றில் முக்கியமானது.
இன்றும் காந்தியத்தால் பயனடைந்த மக்கள் அதை நன்றியுடன் நினைவு கூர்வர். ஆனால், வடக்கு நோக்கி வந்த அனைத்து மலையகத் தமிழர்களின் அனுபங்களும் இவ்வாறு நல்ல நினைவுகளைச் சுமந்தவை அல்ல.
இந்த வாய்ப்பான சூழ்நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வெளியே கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் பெருமளவில் பயிர்செய்கையில் ஈடுபட்டவர்கள் புதிய செல்வந்தர்களாயினர்.
இவர்கள் புதிய நிலப்பிரபுக்களாகத் தோற்றம் பெற்றனர். இவர்கள் மலையகத்திலிருந்து வந்த தொழிலாளர்களை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முயன்றனர்.
இந்த புதிய நிலப்பிரபுகள் அவர்களுடைய மலிவான கூலி உழைப்பை மலிவாகக் கூலிக்குச் சுரண்டுவதிலே கண்ணுங்கருத்துமான இருந்தனர். தோட்டங்களில் இருந்து வெளியேறியவர்களை, ‘கள்ளத் தோணிகள்’ என்று பொலிஸில் பிடித்துக் கொடுக்கப் போவதாக மிரட்டுவது உட்படப், பலவாறான வழிகளில் மலையகத் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டும் உரிமை மறுக்கப்பட்டும் வாழ்ந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு அடிமை வாழ்க்கையை வடக்கு நோக்கிப் புலம்பெயர்ந்த மலையகத் தமிழரில் பெரும்பான்மையானோர் வாழ்ந்தனர்.
ஒருபுறம் ‘சிங்களவன் எம்மை ஒடுக்குகிறான்’ என்று கோஷமிடுபவர்கள் தாம் ஒடுக்கப்படுவதை விட மிக மோசமாக ஒடுக்குமுறையைச் செய்பவர்களாயினர்.
இந்த ஒடுக்கு முறையை எதிர்த்து எழுந்த குரல்கள் மிகக்குறைவு. குறிப்பாக ஈழத்தமிழர் அமைப்புக்களில் இதுவொரு முக்கிய பேசுபொருளாகவில்லை. ஒடுக்கப்படுகின்ற இனமாக எம்மைக் காண்கிற நாம் மலையகத் தொழிலாளர்களை ஒடுக்குவது நியாயமாகாது என்று ஓங்கிக் குரல்கொடுக்க அனைவரும் தயங்கினர்.
இது தமிழ்த்தேசியத்தின் இரட்டை நிலைப்பாட்டையும் தமிழ்த் தேசியத்தின் தலைவர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்ட உயர்வர்க்க ஆதிக்க சக்திகளே என்பதையும் காட்டி நின்றது.
சிங்களப் பேரினவாதத்தின் செயற்பாடுகள் 1970களின் பிற்பகுதியில் வலுப்படத் தொடங்கியிருந்தன. முஸ்லிம் கட்சிக்கெதிரான சில வன்செயல்கள் நடந்தன.
எனினும், புத்தளத்தில் 1976இல் ஏற்பட்ட ஒரு பெரிய மோதலை அரசாங்கம் பரவாமல் தடுத்தது. இதனால் முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்கும் இடையிலான மோதல் தவிர்க்கப்பட்டது. ஆனால், இதே கட்டுப்பாட்டை அரசாங்கம் மலையகத்தில் பேணவில்லை.
இந்தக் காலப்பகுதியில் பேரினவாதம் வளர்ச்சியடைந்து மலையகத் தமிழரை முதலாவதாகக் குறிவைத்தது என்றே சொல்லலாம்.
மலையகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கும் தோட்ட நிலங்களில் சிங்கள குடியேற்ற கிராமங்களை நிறுவவும் பேரினவாதத்தின் எழுச்சி வாய்ப்பானது. ஆனால், மலையகத் தொழிலாளர்கள் இதற்கெதிராகப் போராடினார்கள்.
1977இல் சிவனு இலட்சுமணன் என்ற இளம் தொழிலாளியின் உயிர் தியாகத்தின் மூலம் இத்தகைய திட்டமிடப்பட்ட ஒரு சிங்கள குடியேற்றம் டெவன் தோட்டத்தில் முறியடிக்கப்பட்டமை மலையகத் தொழிலாளரின் போராட்டத்தின் முக்கிய ஒரு மைல் கல்லாகும்.
இது வடபுலத்தில் மட்டுமன்றி மலையகத்திலும் பேரினவாத எழுச்சிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பட்ட ஒரு காலமாகும்.
இவ்வாறு வடபுலத்திலும் மலையகத்திலும் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்ற போதும் அதுவொரு இணைந்த போராட்டமாக வளர்ச்சியடையவில்லை.
பாராளுமன்றக் கதிரைகள் மீதான ஆர்வம் வலிய மக்கள் இயக்கமொன்றைக் கட்டுவதைத் தடுத்தது. மாறாக அரசியற் தலைமைகள் மக்களை தங்களுக்குச் சார்பாக வாக்களிக்கக்கூடிய வாக்காளராக மட்டுமே இருக்கவேண்டும் என்று விரும்பின.
இது மலையத்திலும் வடபுலத்திலும் நடந்தது. இதன் பலன்களை இன்றுவரை அம்மக்கள் அனுபவிக்கின்றனர்.
-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ–